No products in the cart.
நவம்பர் 09 – கர்த்தர் உன்னை!
“பகலிலே வெயிலாகிலும், இரவிலே நிலவாகிலும் உன்னைச் சேதப்படுத்துவதில்லை. கர்த்தர் உன்னை எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்; அவர் உன் ஆத்துமாவைக் காப்பார்” (சங். 121:6, 7).
கிறிஸ்தவ வாழ்க்கை என்பது பஞ்சு மெத்தை அல்ல. ரோஜா மலரால் அலங்கரிக்கப்பட்ட வாழ்க்கையும் அல்ல. “உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன்” (யோவா. 16:33) என்று கர்த்தர் சொன்னார்.
“நீதிமானுக்கு வரும் துன்பங்கள் அநேகமாயிருக்கும்; கர்த்தர் அவைகளெல்லாவற்றிலும் நின்று அவனை விடுவிப்பார்” (சங். 34:19) என்று தாவீது சொன்னார். ஆனால், எல்லா சூழ்நிலைகளிலும் கர்த்தர் நம்மைக் காக்க வல்லவராயிருக்கிறார். திடன்கொள்ளுங்கள் நான் உலகத்தை ஜெயித்தேன் என்கிறார் அவர்.
அவர் பகலிலும் இரவிலும் நம்மைக் காக்கிறவர். பகல் என்பது நாம் நம்முடைய வேலைகளைச் செய்யும் நேரத்தைக் குறிக்கிறது. இரவு என்பது செயலிழந்தவர்களாக தூங்குகிற நேரத்தைக் குறிக்கிறது.
நாம் வேலை செய்தாலும் இளைப்பாறினாலும் கர்த்தர் நம்மைக் காக்கிறார். பெலனுள்ளவர்களாயிருந்தாலும், பெலனற்றவர்களாயிருந்தாலும் கர்த்தரே நம்மைக் காக்கிறவர். பகலின் அபாயங்களிலிருந்தும், இரவின் செய்வினைகளிலிருந்தும் நம்மைக் காக்கிறவர்.
மட்டுமல்ல, வெயிலிலும், நிலவிலும் நம்மைக் காக்கிறவர். “வெயில் வெளியரங்கமானது. நிலவோ தந்திரமானது” என்றார் ஒருவர். வெயிலைப்போல நம்மை மேற்கொள்ளும் சூழ்நிலைகள் வந்தாலும், நிலவைப்போல இனிமையாய் சூழ்ந்துகொண்டு தீமை விளைவிக்கும் சூழ்நிலைகள் வந்தாலும் கர்த்தர் நம்மைக் காக்க வல்லவர்.
அவர் போக்கிலும், வரத்திலும் நம்மைக் காக்கிறவர். தொழிலுக்காகவும், வேலை ஸ்தலத்துக்காகவும் வெளியே செல்லுகிறோம். ஓய்வுக்காகவும் இளைப்பாறுதலுக்காகவும் வீட்டுக்குத் திரும்பிவருகிறோம்.
பல வேளைகளில் வெளியே செல்லும்போது இந்த நாள் எப்படி இருக்குமோ, எதைச் சந்திக்கப்போகிறோமோ என்று கலங்குகிறோம். ஆனால், கர்த்தரோ நம்மோடுகூடவே வருகிறார். என் சமுகம் உனக்கு முன்பாகச் செல்லும் என்று சொல்லி போகையிலும், வருகையிலும் நம்மைக் கண்மணிபோல காத்துக்கொள்ளுகிறார்.
பகலிலும், இரவிலும், வெயிலிலும், நிலவிலும், மட்டுமல்ல, அவர் என்றென்றைக்கும் காக்கிறவர். மரணமானாலும், ஜீவனானாலும் நம்மைக் காக்கிறவர். ஆகவேதான், “நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்; தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்; உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும்” (சங். 23:4) என்று சங்கீதக்காரர் சொன்னார்.
“ஆதியும் நீரே, அந்தமும் நீரே, ஜோதியும் நீரே, என் சொந்தம் நீரே” என்று நாம் பாடி ஆண்டவரை மகிமைப்படுத்துவதுண்டு. நாம் கர்த்தருடைய உள்ளங்கையிலே இருக்கிறோம். அந்தப் பெரிய பிரகாசமான கரத்திலே அவர் நம்மை வனைந்திருக்கிறார். அவருடைய கரத்திலிருந்து நம்மை யாரும் பறித்துக்கொள்ளவே முடியாது.
நினைவிற்கு:- “நான் அவைகளுக்கு நித்தியஜீவனைக் கொடுக்கிறேன்; அவைகள் ஒருக்காலும் கெட்டுப்போவதில்லை, ஒருவனும் அவைகளை என் கையிலிருந்து பறித்துக்கொள்வதுமில்லை” (யோவா. 10:28).