No products in the cart.
நவம்பர் 08 – ராஜ்யமும், வல்லமையும், மகிமையும்!
“ராஜ்யமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே” (மத். 6:13).
கர்த்தருடைய ஜெபத்தின் கடைசி பகுதி கர்த்தரை துதிக்கும் துதியாயிருக்கிறது. உலக தோற்றத்திற்கு முன்பாக பெரிய ஆராதனையிருந்தது. இனிவரும் நித்தியமும் ஆராதனைகளினால் நிரம்பியிருக்கும்.
பூமியிலே கர்த்தருடைய பிள்ளைகளாக அழைக்கப்பட்டவர்களாகிய நாமும்கூட, எப்பொழுதும் கர்த்தருக்காக நன்மை செய்து, அவருக்குத் துதி, கனம், மகிமை செலுத்தக்கடவோமாக! இராஜ்யம் அவருடையது, வல்லமையும் அவருடையது, மகிமையும் அவருடையது. அவருக்கே வானத்திலும், பூமியிலும் சகல அதிகாரம் கொடுக்கப்பட்டிருக்கிறது (மத். 28:18).
நீங்கள் எதைச் செய்தாலும் தேவமகிமைக்காகவே செய்யுங்கள். ஏரோது தனக்கு சுய மகிமையைத் தேடினதினாலே தேவ தூதனால் அடிக்கப்பட்டு புழு புழுத்து இறந்தான் அல்லவா? ஆகவே எதைச் செய்தாலும், தேவனுடைய முன்னிலையிலே அதைச் செய்து இயேசு கிறிஸ்துவை எப்பொழுதும் ஸ்தோத்திரியுங்கள்.
அவரே இராஜாதி இராஜா. அவரே கர்த்தாதி கர்த்தா. அவரே அல்பா, அவரே ஒமேகா, அவர் முந்தினவரும் பிந்தினவரும் உயிருள்ளவருமாயிருக்கிறார். மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறார் (வெளி. 1:17,18).
ஆதியாகமத்திலிருந்து, வெளிப்படுத்தின விசேஷம்வரை வாசிக்கும்பொழுது அங்கே நாம் காணும் தேவனுடைய வல்லமை நம்மை ஆச்சரியப்படுத்துகிறது. சுகமளிக்கிற வல்லமை, அற்புதங்களைச் செய்கிற வல்லமை, பாவங்களை மன்னிக்கிற வல்லமை, மரித்தோரை உயிர்ப்பிக்கிற வல்லமை என அனைத்து வல்லமைகளும் நம்முடைய அருமை ஆண்டவருக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. வல்லமை தேவனுடையதே!
கர்த்தர் தம்முடைய வல்லமையை அவருடைய நாம மகிமைக்காகவே நமக்குக் கொடுத்திருக்கிறார். அதிகாரங்களைக் கொடுத்திருக்கிறார். அவருடைய நாமத்தினாலே நாம் பரிசுத்தமுள்ளவர்களாய், வெற்றியுள்ளவர்களாய் ஆளுகை செய்யவேண்டுமென்பதுதான் அவருடைய நோக்கமாயிருக்கிறது. பிசாசின் தலையை நசுக்கின அவர், சத்துருவின் சகல வல்லமைகளையும் மேற்கொள்ள அதிகாரத்தையும், வல்லமையையும் நமக்குத் தந்திருக்கிறார். அந்த வல்லமையை செயல்படுத்தும்பொழுதுதான் அற்புதங்கள் நடக்கின்றன. தேவ நாமம் மகிமைப்படுகிறது.
கர்த்தர் ஆபிரகாமைச் சோதித்தபொழுது தன்னுடைய வல்லமையை வெளிப்படுத்தி, “நான் சர்வ வல்லமையுள்ள தேவன், நீ எனக்கு முன்பாக நடந்துகொண்டு உத்தமனாயிரு. நான் உனக்கும் எனக்கும் நடுவாக என் உடன்படிக்கையை ஏற்படுத்தி, உன்னை மிகவும் திரளாய்ப் பெருகப்பண்ணுவேன் என்றார்” (ஆதி. 17:1).
யோபு பக்தன் தன்னுடைய வாழ்க்கையில் பல போராட்டங்களைச் சந்தித்தபோது தேவன் சர்வ வல்லவர் என்பதை அறிந்துகொண்டார். யோபு சொல்லுகிறார், “தேவரீர் சகலவற்றையும் செய்ய வல்லவர்; நீர் செய்ய நினைத்தது தடைபடாது என்பதை அறிந்திருக்கிறேன்” (யோபு. 42:2).
சர்வ வல்லமையுள்ள தேவன் உங்களுக்கு முன் செல்லுகிறபடியினால், நீங்கள் ஒன்றுக்கும் பயப்படவேண்டிய அவசியமேயில்லை. அவருக்கு கனத்தையும், மகிமையையும் செலுத்தி உங்களால் வெற்றிநடை போடமுடியும். தேவபிள்ளைகளே, அவர் உங்களுக்கு முன்பாக நடக்கும்பொழுது யார் உங்களுக்கு எதிராக நிற்க முடியும்?
நினைவிற்கு:- “தேவன் ஒருதரம் விளம்பினார், இரண்டுதரம் கேட்டிருக்கிறேன்; வல்லமை தேவனுடையது என்பதே” (சங். 62:11).