No products in the cart.
நவம்பர் 08 – பகலும் இரவும்!
“கர்த்தர் உன்னைக் காக்கிறவர்; கர்த்தர் உன் வலதுபக்கத்திலே உனக்கு நிழலாயிருக்கிறார்” (சங். 121:5).
எவ்வளவு திட்டமான, ஆணித்தரமான, உறுதியான வாக்குத்தத்தத்தை கர்த்தர் நமக்குத் தருகிறார்! இரவென்றாலும், பகலென்றாலும், மத்தியானமானாலும், நடுநிசியானாலும், எந்த நேரமென்றாலும் நம்மைப் பாதுகாப்பதற்கு நம் ஆண்டவர் மிகுந்த கவனமுள்ளவராயிருக்கிறார்.
இஸ்ரவேல் ஜனங்களைக் கர்த்தர் எகிப்திலிருந்து விடுதலையாக்கிக் கொண்டுவந்தபோது, அவர்கள் பெரிய வனாந்திரத்தை கடக்கவேண்டியதாயிற்று. மரம், செடி, கொடிகள் இல்லாத அந்த பாலைவனத்தில் தாங்க முடியாத வெப்பம் இருந்திருக்கக்கூடும். சிறு குழந்தைகளும், பாலகர்களும் அந்த வெயிலின் உஷ்ணத்தைத் தாங்க முடியாமல் அவதிப்பட்டிருப்பார்கள்.
ஆகவே அவர்களுக்கு நிழலாய் இருக்கும்படி கர்த்தர் பகலிலே மேக ஸ்தம்பங்களை கட்டளையிட்டார். அந்த மேகங்கள் தங்கள்மேல் சூரிய வெப்பத்தைத் தாங்கி, குளிர்ச்சியாக்கி கீழே நிழலைக் கொடுத்தது. இஸ்ரவேல் ஜனங்களுக்கு அது எத்தனை சந்தோஷமாய் இருந்திருக்கக்கூடும்! குளிர்ச்சியான சூழ்நிலையில் உற்சாகமாயும், சந்தோஷமாயும் நடந்திருப்பார்கள்.
என்னுடைய தகப்பனார், “நான் விஜயவாடா என்ற இடத்தில் கூட்டங்களை நடத்தியபோது, அங்குள்ள வெப்பம் தாங்கமுடியாமல் துடித்துப்போய்விட்டேன். அங்கு வெயில் அகோரமாய் இருக்கும். அக்கினி நட்சத்திரத்தின் காலம் அது. வீடுகள்கூட திடீர் திடீரென்று தீப்பிடித்துக்கொள்ளும். நான் அங்கே கன்வென்ஷன் கூட்டங்கள் நடத்தின நாட்கள் எல்லாம் பகல் முழுவதும் தண்ணீரை மேலே ஊற்றிக்கொண்டு எப்பொழுது மாலை நேரம் வரும் என்று காத்துக்கொண்டிருப்பேன்” என்று ஒருமுறை சொல்லக்கேட்டிருக்கிறேன்.
இஸ்ரவேல் ஜனங்களை பகலிலே பாதுகாக்க மேகஸ்தம்பத்தையும், இரவிலே பாதுகாக்க அக்கினி ஸ்தம்பத்தையும் கர்த்தர் கட்டளையிட்டார். பகலிலே மட்டுமல்ல, கர்த்தருடைய பாதுகாப்பு இரவிலும்கூட நமக்கு நிச்சயம் உண்டு.
வனாந்திரத்திலே இஸ்ரவேல் ஜனங்கள் வழிநடந்துவந்தபோது, இரவு நேரத்தில் அங்கே கொள்ளிவாய் சர்ப்பங்கள் அவர்களைத் தீண்டிவிட வாய்ப்புகள் இருந்தது. தேள்கள் கொட்டிவிட ஏதுவான சூழ்நிலை இருந்தது. அந்த அவாந்தரவெளிகளில் கொடிய ஓநாய்கள் சுற்றித் திரிந்திருக்கக்கூடும்.
ஆனால், அக்கினி ஸ்தம்பங்கள் இஸ்ரவேலருக்கு பாதுகாவலாய் வந்தபோது, முதலாவது, அது வெளிச்சத்தைக் கொடுத்தது. இரண்டாவது, விஷப் பூச்சிகளை விரட்டியடித்தது. மூன்றாவது, குளிரை நீக்கி வெதுவெதுப்பைத் தந்தது.
இரவிலே மிளிரும் நிலவு ஒளி அநேகருக்கு நோயையும், வியாதியையும் கொண்டுவருவதுண்டு. தொடர்ந்து ஒரு மனுஷன் நிலவின் ஒளியில் படுத்துவந்தால் வாதநோய் பற்றிப்பிடித்துவிடுவதுண்டு. சிலருக்கு கை கால்கள் விழுந்துபோய்விடும். நரம்புத்தளர்ச்சி ஏற்படுவதும் உண்டு.
யார் யார் கர்த்தரை அடைக்கலமாய் கொண்டிருக்கிறார்களோ, அவர்களுக்கு எந்த சேதமும் நிகழுவதில்லை. தேவபிள்ளைகளே, கர்த்தர் உங்களை பாதுகாக்கிறவர்.
நினைவிற்கு:- “இரவில் உண்டாகும் பயங்கரத்துக்கும், பகலில் பறக்கும் அம்புக்கும், இருளில் நடமாடும் கொள்ளைநோய்க்கும், மத்தியானத்தில் பாழாக்கும் சங்காரத்துக்கும் பயப்படாதிருப்பாய்” (சங். 91:5,6).