No products in the cart.
நவம்பர் 02 – பலத்தின் காரணம்!
“உன்னிலும் பலத்த பெரிய ஜாதிகளை உனக்கு முன்னின்று துரத்தவும், உன்னை அழைத்துக்கொண்டுபோய், இந்நாளில் இருக்கிறதுபோல, அவர்கள் தேசத்தை உனக்குச் சுதந்திரமாகக் கொடுக்கவும், …. எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினார்” (உபா. 4:38).
கர்த்தர் இஸ்ரவேல் ஜனங்களை பலப்படுத்தி அழைத்துக்கொண்டுவந்ததற்கு ஒரு காரணம் இருந்தது. ஆம்! அவர்கள் கானான் தேசத்தை சுதந்தரிக்கவேண்டும். அங்குள்ள ஏழு ஜாதிகளையும், முப்பத்தோரு ராஜாக்களையும் மேற்கொள்ளவேண்டும். முற்பிதாவாகிய ஆபிரகாம் கால் மிதித்த தேசங்களையெல்லாம் சொந்தமாக்கிக்கொள்ளவேண்டும். அதற்காகக் கர்த்தர் அவர்களைத் திடப்படுத்தி பலப்படுத்த சித்தமானார்.
இன்றைக்கு நமக்கு முன்பாக பரமகானான் இருக்கிறது, பரமஎருசலேம் இருக்கிறது, பரமசீயோன் இருக்கிறது, நித்திய பரலோகராஜ்யம் இருக்கிறது. அதை சுதந்தரிக்கவிடாதபடி தடுக்கிற எல்லா சத்துருவின் வல்லமைகளையும் நாம் மேற்கொள்ளவேண்டும். வானமண்டலத்திலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடு யுத்தம்பண்ணி மேற்கொண்டேயாகவேண்டும். பலவானாகிய சாத்தானைவிட நாம் அதிக பலமுள்ளவர்களாக இருந்து அவனைக் கட்டி அவனுடைய உடமைகளைக் கொள்ளையிடவேண்டும்.
கர்த்தர் இஸ்ரவேல் ஜனங்களை பலப்படுத்துவதற்காகவே வனாந்தரத்திற்கு வழிநடத்திக்கொண்டுவந்தார். அவர்கள் அடிமைகளாய் இருந்தபோது சாப்பிட்ட உலகப்பிரகாரமான உணவை மாற்றி, தேவதூதர்களின் உணவாகிய மன்னாவைக் கொடுத்தார். வனாந்தரத்திலே வழிநடத்திக்கொண்டுவந்து காண்டாமிருகத்திற்கு ஒப்பான பெலனைத் தந்தார்.
வேதம் சொல்லுகிறது, “தேவன் அவர்களை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினார்; காண்டாமிருகத்திற்கொத்த பெலன் அவர்களுக்கு உண்டு; அவர்கள் தங்கள் சத்துருக்களாகிய ஜாதிகளைப் பட்சித்து, அவர்கள் எலும்புகளை நொறுக்கி, அவர்களைத் தங்கள் அம்புகளாலே எய்வார்கள்” (எண். 24:8).
உலகத்திலுள்ள மிருக ஜீவன்களிலேயே அதிக பெலனுள்ளது காண்டாமிருகமாகும். எந்த சிங்கமோ, புலியோ, யானையோ காண்டாமிருகத்திற்கு எதிர்நிற்கமுடியாது. உங்கள் ஆத்துமாவை ஒரு காண்டாமிருகத்தைப்போல பாருங்கள். கர்த்தர் உன்னதபெலனை உங்களுக்குள் ஊற்றி இருக்கிறாரே!
ஒரு ஊழியர் உபவாசக்கூட்டம் நடத்திக்கொண்டிருந்தபோது ஒரு வயதான பெலவீனமான தாயார் வந்து அவர்முன் முழங்கால்படியிட்டார். இவ்வளவு பெலவீனத்தின் மத்தியிலும் உபவாசம் இருந்து ஜெபிக்க வந்திருக்கிறாரே என்று அவரை அந்த ஊழியர் ஆச்சரியத்துடன் பார்த்தார்.
அந்த தாயாரின் உள்ளான மனுஷனைக் கர்த்தர் அந்த ஊழியருக்குக் காண்பித்தார். மகா பெரிய பெலசாலியாக, கையிலே சுடரொளிப் பட்டயத்தைத் தூக்கியவராய் காண்டாமிருகத்திற்கொப்பான பெலனோடு அவருக்குள் நிற்கிற அந்த யுத்த வீரனை கர்த்தர் காணச்செய்தார். பெலன்கொண்ட அந்த ஊழியர் அந்தகார வல்லமைகளுக்கு விரோதமாக பலத்தோடு யுத்தம் செய்து ஜெயம்கொண்டார்.
தேவபிள்ளைகளே, உங்களில் இருக்கிறவர் பெரியவர். நீங்கள் ஒரு பலத்த பராக்கிரமசாலியாவீர்கள் என்பதை விசுவாசியுங்கள்.
நினைவிற்கு:- “இரும்பும் வெண்கலமும் உன் பாதரட்சையின் கீழிருக்கும்; உன் நாட்களுக்குத்தக்கதாய் உன் பெலனும் இருக்கும்” (உபா. 33:25).