No products in the cart.
நவம்பர் 01 – உன் நிமித்தம்!
“அப்பொழுது லாபான்: உன் கண்களில் எனக்குத் தயவு கிடைத்ததேயானால் நீ இரு. உன் நிமித்தம் கர்த்தர் என்னை ஆசீர்வதித்தார் என்று குறிப்பினால் அறிந்தேன்” (ஆதி. 30:27).
சிலரினிமித்தம் நாம் ஆசீர்வதிக்கப்படுகிறோம். யாக்கோபினிமித்தம் தான் ஆசீர்வதிக்கப்பட்டதாக லாபான் மனம் திறந்து பேசுகிறதை சற்று சிந்தித்துப்பாருங்கள். கர்த்தருடைய ஆசீர்வாதம் யாக்கோபோடு இருந்ததினாலே யாக்கோபு எங்கெங்கெல்லாம் சென்றாரோ, அங்கெல்லாம் அவரைச் சூழ இருந்த மக்கள் ஆசீர்வதிக்கப்பட்டார்கள்.
யோசேப்பைப் பாருங்கள். யோசேப்பினிமித்தம் அவருடைய முழுக்குடும்பமும் ஆசீர்வதிக்கப்பட்டதுடன், அவர் எங்கெங்கெல்லாம் சென்றாரோ அங்கெங்கெல்லாம் அவர் கண்டது ஆசீர்வாதம்தான். வேதம் சொல்லுகிறது, “அவனைத் (யோசேப்பை) தன் வீட்டுக்கும் தனக்கு உண்டான எல்லாவற்றிற்கும் விசாரணைக்காரனாக்கினதுமுதற்கொண்டு, கர்த்தர் யோசேப்பினிமித்தம் அந்த எகிப்தியன் வீட்டை ஆசீர்வதித்தார். வீட்டிலும் வெளியிலும் அவனுக்கு உண்டானவைகள் எல்லாவற்றிலும் கர்த்தருடைய ஆசீர்வாதம் இருந்தது” (ஆதி. 39:5).
அதே நேரத்தில், சிலர் நிமித்தம் துன்பங்களும், துயரங்களும், சாபங்களும் ஏற்படுகின்றன. கர்த்தருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படியாமல்போன ஒரு ஆகானின் நிமித்தம் முழு இஸ்ரவேலரும் தோல்வியைக் கண்டார்கள். கர்த்தருடைய சத்தத்திற்கு கீழ்ப்படியாத ஒரு யோனாவின் நிமித்தம் கப்பலில் பிரயாணம்பண்ணின அத்தனைபேரும் வேதனைப்பட்டார்கள். சரக்குகள் சேதமாயின. கடல் கொந்தளித்தது.
தேவபிள்ளைகளே, ஒரு நிமிடம் உங்களை ஆராய்ந்துபாருங்கள். நீங்கள் குடும்பத்துக்கு ஆசீர்வாதத்தைக் கொண்டுவருகிறவர்களாய் இருக்கிறீர்களா? அல்லது சாபத்தைக் கொண்டுவருகிறவர்களாய் இருக்கிறீர்களா? உங்களால் உங்கள் குடும்பத்தினர் சந்தோஷமும், சமாதானமும், மகிழ்ச்சியும் அடைகிறார்களா? அல்லது வேதனையும், துக்கமும், கண்ணீரும், சஞ்சலமும் அடைகிறார்களா?
ஒரு சகோதரன் ஒரு காலத்திலே, தன் குடும்பத்தினரை துக்கப்படுத்துகிறவராயும், பிரச்சனை உண்டாக்குகிறவராயுமிருந்தார். ஆனால் என்றைக்கு அவர் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவை தன் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டாரோ, அன்றே அவர் நிமித்தம் அவருடைய குடும்பம் ஆசீர்வாதமானதாய் மாறியது. அவர் நிமித்தம் அவருடைய வீடு ஆசீர்வதிக்கப்பட்டது. என்றைக்கு அவர் கர்த்தருடைய ஊழியத்தை செய்ய முன்வந்தாரோ, அதனிமித்தம் அப்பொழுதே ஆயிரமாயிரமான குடும்பங்கள் ஆசீர்வதிக்கப்பட்டன.
கர்த்தர் ஆபிரகாமை அழைத்தபோது, அவர் நிமித்தம் உலகமே ஆசீர்வாதமடையும் என்பதை வாக்குப்பண்ணினார். கர்த்தர் சொல்லுகிறார், “உன்னை ஆசீர்வதிக்கிறவர்களை ஆசீர்வதிப்பேன், உன்னைச் சபிக்கிறவனைச் சபிப்பேன்; பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் உனக்குள் ஆசீர்வதிக்கப்படும்” (ஆதி. 12:3).
அதைப்போலவே இயேசுகிறிஸ்துவினிமித்தம் பிதாவானவர் நம்மையெல்லாம் ஆசீர்வதிக்க சித்தமானார். அவர் நிமித்தம் உன்னதத்திற்குரிய சகல ஆசீர்வாதங்களையும், ஆவிக்குரிய சகல ஆசீர்வாதங்களையும், நித்தியத்திற்குரிய சகல ஆசீர்வாதங்களையும் நாம் பெற்றுக்கொள்ளுகிறோம்.
நினைவிற்கு:- “தம்முடைய சொந்தக்குமாரனென்றும் பாராமல் நம்மெல்லாருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தவர், அவரோடுகூட மற்ற எல்லாவற்றையும் நமக்கு அருளாதிருப்பதெப்படி?” (ரோம. 8:32).