No products in the cart.
டிசம்பர் 24 – வல்லமையான நாமங்கள்
“கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தர், வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்” (ஏசா. 9:6).
ஏசாயா தீர்க்கதரிசி இயேசுவுக்கு 900 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர். ஆனாலும் தன்னுடைய தீர்க்கதரிசனக் கண்களினால் இயேசுவைக் கண்டு, அவருடைய ஐந்து பெயர்களை நமக்கு அறிமுகம் செய்தார்.
கிறிஸ்துவுக்கு பல பெயர்கள் உண்டு. அவை ஒவ்வொன்றும் அவருடைய குணாதிசயங்களையும், சுபாவங்களையும் வெளிப்படுத்துகின்றன. அவருடைய பெயர்களில் வாக்குத்தத்தங்கள் உண்டு. அவர் நமக்காக என்னென்ன செய்வார் என்பதையும் அவை விளக்குகின்றன.
இயேசு என்றால், தம்முடைய ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் (மத். 1:21) என்பதாகும். இம்மானுவேல் என்பதற்கு தேவன் நம்மோடு இருக்கிறார் (மத். 1:23). என்று அர்த்தமாகும். அவர் ஒருபோதும் நம்மை விட்டு விலகாமல் நம்மைக் கைவிடாமல் எப்பொழுதும் நம்மோடுகூட இருக்கிறார்.
கிறிஸ்து என்றால், ‘அபிஷேக நாதர்’ என்று அர்த்தம். மேசியா என்றால், ‘வரப்போகிறவர் அல்லது எதிர்பார்க்கப்படுபவர்’ என்று அர்த்தம்.
கர்த்தருக்கு வேதத்தில் ஏறக்குறைய 272 பெயர்கள் உண்டு. ஆகார் கர்த்தருக்கு ‘நீர் என்னைக் காண்கிற தேவன்’ என்ற பெயரைச் சூட்டினாள். தாவீது ‘ஜெபத்தைக் கேட்கிறவரே’ என்று அழைத்தார். மீகா தீர்க்கதரிசி, ‘தடைகளை நீக்கிப் போடுகிறவர்’ என்றார். அதே நேரத்தில் கர்த்தர் தம்மை ‘ஆபிரகாமின் தேவன், ஈசாக்கின் தேவன், யாக்கோபின் தேவன்’ என்று அழைத்துக்கொண்டார். எலிசா தீர்க்கதரிசி ‘அவரை எலியாவின் தேவன்’ என்று அழைத்தார்.
கர்த்தருடைய நாமம் வல்லமையுள்ளது. இயேசுவின் நாமமே இனிதான நாமம். இணையில்லா நாமம், இன்ப நாமம் என்று நாம் பாடுகிறோம். கர்த்தருடைய நாமம் எல்லா நாமத்திற்கும் மேலான நாமம். வானத்திலும், பூமியிலும் சகல அதிகாரமுடைய நாமம். எல்லா சத்துருக்களின் வல்லமையையும் மேற்கொண்டு அழித்து நிர்மூலமாக்கும் நாமம்.
ஒரு காலத்தில் அலெக்ஸாண்டர், என்ற பெயர் கொடிகட்டிப் பறந்தது. பின் மறைந்தது. பெரிய பெரிய பார்வோன்கள், ஏரோதுகள் இன்னும் நெப்போலியன், கரிபால்டி, முஸோலினி, ஹிட்லர் ஆகியவர்கள்கூட அவரவர் காலத்தில் பிரபலமானவர்களாய் இருந்தார்கள். ஆனால் வெகுசீக்கிரத்தில் அவர்களுடைய பிரபல்யம் காணாமல்போனது.
ஆனால் இயேசுகிறிஸ்துவின் பெயரோ இரண்டாயிரம் வருடமானாலும் மங்காத புகழ் பெற்று வல்லமையுள்ளதாய் விளங்கிக்கொண்டே வருகிறது. அவரை நாம், ‘அப்பா பிதாவே’ என்று அழைக்கிறோம். அவரே நமக்காக யாவையும் செய்து முடிக்கிறவர்.
தேவபிள்ளைகளே, இயேசுகிறிஸ்துவின் நாமம் வாக்குத்தத்தத்தின் நாமமாய் இருக்கிறபடியினால், நிச்சயமாகவே உங்களுக்கு ஆசீர்வாதத்தைக் கொண்டுவரும்.
நினைவிற்கு:- “தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி, இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும், பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசுகிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்” (பிலி. 2:9-11).