bo togel situs toto musimtogel toto slot musimtogel musimtogel musimtogel masuk musimtogel login musimtogel toto
Appam, Appam - Tamil

டிசம்பர் 20 – விழித்தபோது அறியாதிருந்தான்

“யாக்கோபு நித்திரை தெளிந்து விழித்தபோது: மெய்யாகவே கர்த்தர் இந்த ஸ்தலத்தில் இருக்கிறார்; இதை நான் அறியாதிருந்தேன் என்றான்” (ஆதி. 28:16).

வாலிப வயதிலே யாக்கோபு பெயர்செபாவைவிட்டு ஆரானுக்குப் போகப் பிரயாணம்பண்ணினபோது, ஒரு இடத்தில் படுத்து நித்திரை செய்தார். அங்கே யாக்கோபு ஒரு சொப்பனம் கண்டார்.

“இதோ, ஒரு ஏணி பூமியிலே வைக்கப்பட்டிருந்தது, அதற்கு மேலாகக் கர்த்தர் நின்று: நான் உன் தகப்பனாகிய ஆபிரகாமின் தேவனும், ஈசாக்கின் தேவனுமாகிய கர்த்தர்; நீ படுத்திருக்கிற பூமியை உனக்கும் உன் சந்ததிக்கும் தருவேன்” என்று பேசினார். “யாக்கோபு நித்திரை தெளிந்து விழித்தபோது: மெய்யாகவே கர்த்தர் இந்த ஸ்தலத்தில் இருக்கிறார்; இதை நான் அறியாதிருந்தேன் என்றான்” (ஆதி. 28:16).

நீங்கள் அறியாதிருக்கிற ஒருவர் உங்களைக் கண்மணிபோல பாதுகாப்பதுடன், உங்களைக் கவனித்துக்கொண்டேயும் வருகிறார். நீங்கள் போகும் இடமெல்லாம் ஞானக்கன்மலையாகக் கூடவருகிறார். மேகஸ்தம்பமாக அக்கினிஸ்தம்பமாக முன்செல்லுகிறார். அதை நீங்கள் அறிந்துகொள்ள உங்களுக்கு ஒரு விழிப்புணர்வு தேவை.

அன்றைக்குப் பரிசேயரும், சதுசேயரும் ஆண்டவரை அறியவில்லை. கண்கள் இருந்தும் கர்த்தரைத் தரிசிக்கும்படி அவர்கள் விழிப்புள்ள ஜீவியம் செய்யவில்லை. யோவான்ஸ்நானன் அவர்களைப் பார்த்து, “நீங்கள் அறியாதிருக்கிற ஒருவர் உங்கள் நடுவிலே நிற்கிறார்” (யோவா. 1:26) என்றார். எனக்குப் பின்வருகிறவரோ என்னிலும் வல்லவராயிருக்கிறார். நான் உங்களுக்கு ஜலத்தினால் ஞானஸ்நானம் கொடுக்கிறேன். அவர் பரிசுத்த ஆவியினாலும் அக்கினியினாலும் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார் என்றும் சொன்னார் (மத். 3:11).

அன்றைக்கு ஆகார் வனாந்தரத்திலே நடந்தபோது, அவள் அறியாத கர்த்தர் கூடவே சென்றார். அவளுடைய பிள்ளை தாகத்தால் அழுதபோது, “தேவன் அவளுடைய கண்களைத் திறந்தார்; அப்பொழுது அவள் ஒரு தண்ணீர்த் துரவைக் கண்டு, போய், துருத்தியிலே தண்ணீர் நிரப்பி, பிள்ளைக்குக் குடிக்கக் கொடுத்தாள்” (ஆதி. 21:19).

இன்றைக்கும் நீங்கள் அறியாதிருக்கிற கர்த்தர், உங்களுடைய கண்களைத் திறப்பாரானால், உங்கள் அருகே அவர் சிலுவையில் தொங்குகிறவராயும், தமது காயங்களிலிருந்து இரத்தத் துரவை புறப்படப்பண்ணுகிறவருமாயும் நிற்பதைக் காண்பீர்கள். நீங்கள் அறியாதிருக்கிறவர் உங்கள் நடுவே நிற்கிறார். வேதம் சொல்லுகிறது, “இஸ்ரவேலின் பரிசுத்தர் உன் நடுவில் பெரியவராயிருக்கிறார்” (ஏசா. 12:6). “உன் தேவனாகிய கர்த்தர் உன் நடுவில் இருக்கிறார்; அவர் வல்லமையுள்ளவர்” (செப். 3:17).

இரண்டு பேர், மூன்று பேர் அவருடைய நாமத்தினாலே கூடி வந்தாலே அவர்கள் நடுவிலே அவர் வந்துவிடுவார். நீங்கள் அதை அறியாமல் இருந்தாலும் அவர் உங்கள் மத்தியிலே இருக்கிறார் என்பது உண்மையிலும் உண்மை, சத்தியத்திலும் சத்தியம். வாக்குத்தத்தம் பண்ணினவர் உண்மையுள்ளவர்.

தேவபிள்ளைகளே, நீங்கள் அறியாதிருக்கிற கர்த்தரை நீங்கள் தரிசிக்கும்படி கர்த்தர் உங்கள் மனக்கண்களைப் பிரகாசிக்கச் செய்வாராக. உங்களுடைய கண்களைத் திறந்தருளுவாராக. அப்பொழுது மகிமையின் ராஜாவை நீங்கள் கண்குளிரக்கண்டு மகிழுவீர்கள்.

நினைவிற்கு:- “சுத்தமும் செம்மையுமாய் இருந்தீரேயானால், அப்பொழுது அவர் உமக்காக விழித்து நீதியுள்ள உம்முடைய வாசஸ்தலத்தைச் சாங்கோபாங்கமாக்குவார்” (யோபு 8:6).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.