Appam, Appam - Tamil

டிசம்பர் 20 – ஊழியம் செய்யவேண்டும்!

“ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்கிறவனானால் என்னைப் பின்பற்றக்கடவன், நான் எங்கே இருக்கிறேனோ அங்கே என் ஊழியக்காரனும் இருப்பான்; ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்தால் அவனைப் பிதாவானவர் கனம்பண்ணுவார் (யோவா. 12:26).

உங்கள் வாழ்க்கையைக்குறித்து கர்த்தருடைய நோக்கம் என்ன? நீங்கள் தனக்கு ஊழியம் செய்யவேண்டுமென்று கர்த்தர் விரும்புகிறார். கர்த்தருக்கு ஊழியம் செய்வதுபோல பாக்கியமான அனுபவம் வேறு ஒன்றுமில்லை.

உலகப் பிரசித்திபெற்ற ஊழியக்காரரான பில்லிகிரகாம் சொன்னார்: “அமெரிக்க தேசத்தின் ஜனாதிபதி பதவியைத் தந்தாலும்கூட நான் அதை ஏற்றுக்கொள்ளமாட்டேன். உன்னத தேவனுடைய ஊழியக்காரன் என்று அழைக்கப்படுவதையே நான் விரும்புகிறேன்”.

பூமியில் தேவனுடைய ராஜ்யத்தை ஸ்தாபிக்க அவருக்கு ஊழியக்காரர்கள் தேவை. சாத்தானுக்கு எதிர்நின்று அவனுடைய ஆளுகையிலிருந்து ஜனங்களை விடுவிக்க ஊழியக்காரர்கள் தேவை. கர்த்தருடைய சார்பிலே ஜனங்களுக்கு நன்மை செய்ய அவருக்கு ஊழியக்காரர்கள் தேவை. ஆத்துமாக்களை ஆதாயப்படுத்தி, பரலோகப் பாதைக்குக் கொண்டுசெல்ல ஊழியக்காரர்கள் தேவை.

பழைய ஏற்பாட்டிலே ஆசாரிய ஊழியம் செய்யும்படி லேவிக்கோத்திரத்தை தனக்கென்று பிரித்தெடுத்தார். தீர்க்கதரிசன ஊழியத்திற்கென்று சிலரை அபிஷேகம்பண்ணினார். ராஜாக்களின் ஊழியத்தைச் செய்யும்படியும் சிலரை அவர் தெரிந்துகொண்டார்.

புதிய ஏற்பாட்டு காலத்துக்கு வரும்போது அப்போஸ்தல ஊழியம், சுவிசேஷ ஊழியம், போதகர் ஊழியம், மேய்ப்பர் ஊழியம், தீர்க்கதரிசன ஊழியம் என்று ஐந்துவிதமான ஊழியங்களைக் காண்கிறோம். இன்றைக்கு கர்த்தருடைய ஊழியக்காரர்கள் பிரசங்கித்து ஜனங்களை இரட்சிப்புக்குள் கொண்டுவருகிறார்கள். மறுபக்கம் சபையைப் பூரணப்படுத்தி இயேசுகிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்காக ஜனங்களை ஆயத்தப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள்.

கர்த்தர் சொல்லுகிறார், “ஒரு மனுஷன் தனக்கு ஊழியஞ்செய்கிற தன்னுடைய குமாரனைக் கடாட்சிக்கிறதுபோல நான் அவர்களைக் கடாட்சிப்பேன். அப்பொழுது நீங்கள் நீதிமானுக்கும் துன்மார்க்கனுக்கும், தேவனுக்கு ஊழியஞ்செய்கிறவனுக்கும் அவருக்கு ஊழியஞ் செய்யாதவனுக்கும் இருக்கிற வித்தியாசத்தைத் திரும்பவும் காண்பீர்கள்” (மல். 3:17,18).

கர்த்தருடைய சமுகமும் பிரசன்னமும் ஊழியக்காரர்களோடு எப்பொழுதும் இருக்கும். அவர் அவர்களைவிட்டு விலகுவதுமில்லை, கைவிடுவதுமில்லை. உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் கர்த்தர் அவர்களோடிருந்து அற்புதங்களினாலும் அடையாளங்களினாலும் வசனத்தை உறுதிப்படுத்துவார். கர்த்தர் சொல்லுகிறார், “என் நாமத்தைப் பிரஸ்தாபப்படுத்தும் எந்த ஸ்தானத்திலும் உன்னிடத்தில் வந்து, உன்னை ஆசீர்வதிப்பேன்” (யாத். 20:24).

மட்டுமல்ல, “(கர்த்தர்) தம்முடைய ஊழியக்காரரை அக்கினிஜுவாலைகளாகவும் செய்கிறார்” (எபி. 1:7). பாவம் நெருங்காதபடியும், சோதனை மேற்கொள்ளாதபடியும், சாத்தானை அழித்து ஜெயம் பெறும்படியும் கர்த்தர் உங்களை அக்கினிஜுவாலையாக மாற்றுவார். ஆகவே தேவபிள்ளைகளே, கர்த்தருக்கு ஊழியம் செய்ய உங்களை ஒப்படையுங்கள்.

நினைவிற்கு:- “கர்த்தராகிய ஆண்டவர் தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரருக்குத் தமது இரகசியத்தை வெளிப்படுத்தாமல் ஒரு காரியத்தையும் செய்யார்” (ஆமோ. 3:7).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.