No products in the cart.
டிசம்பர் 19 – மனுஷர்மேல் பிரியம்!
“…மனுஷர்மேல் பிரியமும் உண்டாவதாக என்று சொல்லி, தேவனைத் துதித்தார்கள்” (லூக்கா 2:14).
தூதர்கள் கூறின கிறிஸ்துமஸ் வாழ்த்துச் செய்தியிலே மூன்றாவது பகுதி, ‘மனுஷர் மேல்பிரியம்’ என்பதாகும். கர்த்தர் தம் ஜனத்தின்மேல் பிரியம் வைத்திருக்கிறார். அந்த பிரியத்தை தம்முடைய சிருஷ்டிப்பிலே வெளிப்படுத்திக்காண்பித்தார். நீங்கள் நித்தியத்திற்குச் செல்லும்போது, உங்கள்மேல் கர்த்தர் பிரியம்கொண்டவராய் உங்களுக்காக ஆயத்தம்பண்ணின நித்திய வாசஸ்தலத்தையும், கிரீடங்களையும் பார்த்து கர்த்தரைத் துதிப்பீர்கள்.
இயேசுகிறிஸ்து இந்தப் பூமியிலே வந்தபோது, தம்முடைய முழு பிரியத்தையும் பிதாவின்மேல் வைத்திருந்தார். “பிதாவுக்குப் பிரியமானவைகளை நான் எப்பொழுதும் செய்கிறபடியால் அவர் என்னைத் தனியே இருக்கவிடவில்லை என்றார்” (யோவான் 8:29). நீங்கள் கர்த்தரில் பிரியம் வைக்கும்போது, அவர் உங்களில் இன்னும் அதிகமாய் பிரியம் வைப்பார். ‘என் பிரியமே, என் உத்தமியே’ என்று அழைப்பார். பிரியமான புருஷனாகிய தானியேலே, என்று உங்களையும் பெயர் சொல்லி அழைப்பார்.
ஸ்மித் விகிள்ஸ்வொர்த் ஒருமுறை ரயில் வண்டியில் பிரயாணம் செய்துகொண்டிருந்தார். அவருக்கு எதிரே உட்கார்ந்து கொண்டிருந்த சில வாலிபர்கள் அவரைப் பார்த்து, ‘ஐயா, உங்கள் முகத்தில் தோன்றும் ஒரு தெய்வீக பிரசன்னம் எங்கள் உள்ளத்தில் பாவ உணர்வையும், நடுக்கத்தையும், தேவ பயத்தையும் உண்டாக்குகிறது’ என்று சொல்லி ஒவ்வொருவராக கதறியழ ஆரம்பித்து விட்டார்கள்.
அதன் காரணத்தை அவர் விளக்கியபோது, ‘இயேசு எனக்கு மிகவும் பிரியமானவர். அவரை நான் மிகவும் நேசிக்கிறேன். அவர் எனக்குப் பாராட்டின கிருபையை தியானித்துக்கொண்டிருந்தபோது, என் உள்ளம் பொங்க ஆரம்பித்தது. அப்பொழுது என் முகத்தில் தெய்வீக பிரசன்னம் இறங்கி வந்திருக்கக்கூடும்’ என்றார்.
தேவன்பேரில் வைக்கவேண்டிய பிரியத்தை மனுஷர் மேலும், பொருட்கள் மேலும், இச்சைகள்மேலும், அழிந்துபோகிற அழகின்மேலும் வைக்கும்போது, பாவமும் அசுத்தமும் ஒருவரது வாழ்க்கையில் புகுந்துவிடுகிறது. “உலகத்துக்குச் சிநேகிதனாயிருக்க விரும்புகிறவன் தேவனுக்குப் பகைஞனாகிறான்” (யாக். 4:4).
ஆகவே, பண ஆசை, பொருள் ஆசை, மண்ணாசை, பெண்ணாசை ஆகியவற்றின்மேல் ஒரு நாளும் பிரியம் வைக்காமல், உங்களுக்காக மகிமையைத் துறந்து பூமிக்கு இறங்கிவந்து, அடிமையின் ரூபம் எடுத்து, கல்வாரிச் சிலுவையில் உங்களுக்காக ஜீவனைக் கொடுத்த இயேசு கிறிஸ்துவின்மேலேயே உங்கள் பிரியத்தை வைத்துவிடுங்கள். அவர்மேல் எவ்வளவு பிரியம் வைத்தாலும் அது உங்களுக்கு நன்மையையும், ஆசீர்வாதத்தையுமே கொண்டுவரும். தாவீது சொன்னார், “பரலோகத்தில் உம்மையல்லாமல் எனக்கு யார் உண்டு? பூலோகத்தில் உம்மைத் தவிர எனக்கு வேறே விருப்பமில்லை” (சங். 73:25).
தேவபிள்ளைகளே, நீங்கள் கர்த்தர்மேல் பிரியம் வைத்திருந்தால், அவருடைய பாதபடியைத் தேடுவீர்கள். ஜெபத்திலே பிரியம் வைப்பீர்கள். வேத வாசிப்பிலே பிரியம் வைப்பீர்கள். தேவாலயத்திற்குச் செல்வது உங்களுக்கு மாபெரும் மகிழ்ச்சியும் ஆனந்தமுமாக இருக்கும்.
நினைவிற்கு:- “எங்கள் தேவனாகிய ஆண்டவரின் பிரியம் எங்கள்மேல் இருப்பதாக; எங்கள் கைகளின் கிரியையை எங்களிடத்தில் உறுதிப்படுத்தும்” (சங். 90:17).