No products in the cart.
டிசம்பர் 18 – ஸ்தோத்திரம் செய்யவேண்டும்!
“எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ்செய்யுங்கள்; அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களைக்குறித்துத் தேவனுடைய சித்தமாயிருக்கிறது” (1 தெச. 5:18).
நீங்கள் எப்பொழுதும் சந்தோஷமாக இருக்கவேண்டும் என்பதே உங்களுடைய வாழ்கையைக்குறித்து கர்த்தருடைய நோக்கமாயிருக்கிறது. சிலர் எல்லாம் நிறைவாய் இருக்கும்போதுமட்டும் தேவனைத் துதிப்பார்கள். துக்கம் வந்துவிட்டால், தோல்வி ஏற்பட்டுவிட்டால், அதைரியம் வந்துவிட்டால், சோர்வுகள் வந்துவிட்டால் துதிக்க மறந்துவிடுவார்கள்
தாவீது சொல்லுகிறார், “கர்த்தரை நான் எக்காலத்திலும் ஸ்தோத்திரிப்பேன்; அவர் துதி எப்போதும் என் வாயிலிருக்கும். கர்த்தருக்குள் என் ஆத்துமா மேன்மைபாராட்டும், சிறுமைப்பட்டவர்கள் அதைக்கேட்டு மகிழுவார்கள்” (சங். 34:1,2).
துதிப்பதில் உள்ள ஆனந்தத்தை தாவீது ராஜா அறிந்திருந்ததினால் கர்த்தருடைய பெட்டி தாவீதின் நகரத்திற்குள் பிரவேசித்தபோது அவர் கர்த்தருக்கு முன்பாகக் குதித்து நடனம்பண்ணித் துதித்தார் (2 சாமு.6:16).
சிறு வயதிலிருந்து கர்த்தர் செய்த நன்மைகளை எண்ணும்போது, அவர் கொடுத்த ஆசீர்வாதங்களை தியானிக்கும்போது, வேதத்திலே அவர் செய்த அற்புதங்களையும் அடையாளங்களையும் எண்ணி களிகூரும்போது, உங்களை அறியாமலேயே நீங்கள் அவரைத் துதித்துத் துதித்து மகிழுவீர்கள். பாடிப்பாடி போற்றுவீர்கள். நீங்கள் துதி வீரராய் மாற்றம்பெற்று முழுவதுமாய் ஆசீர்வதிக்கப்படுவீர்கள். அப்படித் துதிக்கும்போது கர்த்தருடைய உள்ளமும் மகிழும்.
கர்த்தர் பூமியிலே மனுஷனை சிருஷ்டித்ததே அவரைத் துதிக்கும்படியாகத்தான். தாவீது சொல்லுகிறார், “நான் பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்டபடியால், உம்மைத் துதிப்பேன். உமது கிரியைகள் அதிசயமானவைகள், அது என் ஆத்துமாவுக்கு நன்றாய்த் தெரியும்” (சங். 139:14).
“கர்த்தர் பெரியவர், அவர் நமது தேவனுடைய நகரத்திலும், தமது பரிசுத்த பர்வதத்திலும் மிகவும் துதிக்கப்படத்தக்கவர்” (சங். 48:1). கர்த்தர் ஒருவரே துதிக்கும், ஸ்தோத்திரத்திற்கும், கனத்திற்கும் பாத்திரமானவர்.
வெளிப்படுத்தின விசேஷத்தில் ஒரு அற்புதமான காட்சியைப் பார்க்கிறோம். பரலோகத்திலுள்ள தேவனுடைய பிள்ளைகள் அவரைத் துதித்து மகிழும்போது, “தேவரீர் புஸ்தகத்தை வாங்கவும் அதின் முத்திரைகளை உடைக்கவும் பாத்திரராயிருக்கிறீர்; ஏனெனில் நீர் அடிக்கப்பட்டு, சகல கோத்திரங்களிலும் பாஷைக்காரரிலும் ஜனங்களிலும் ஜாதிகளிலுமிருந்து எங்களைத் தேவனுக்கென்று உம்முடைய இரத்தத்தினாலே மீட்டுக்கொண்டு, எங்கள் தேவனுக்கு முன்பாக எங்களை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கினீர்; நாங்கள் பூமியிலே அரசாளுவோம் என்று புதிய பாட்டைப் பாடினார்கள்” (வெளி. 5:9,10).
“கர்த்தரைத் துதியுங்கள், கர்த்தரைத் துதியுங்கள்” என்னும் அழைப்பு ஆலோசனைகளாகவும், கட்டளைகளாகவும் மீண்டும் மீண்டும் வேதத்தில் இடம் பெற்றிருப்பதை அறிகிறோம். “என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி; அவர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே” என்று தாவீது எழுதினார் (சங். 103:2).
தேவபிள்ளைகளே, நீங்கள் எப்பொழுதும் கர்த்தரைத் துதிக்கவேண்டும் என்பதே உங்களைக்குறித்து தேவனுடைய சித்தமாயிருக்கிறது.
நினைவிற்கு:- “என் உதடுகள் உம்மைத் துதிக்கும். என் ஜீவனுள்ளமட்டும் நான் உம்மைத் துதித்து, உமது நாமத்தைச் சொல்லிக் கையெடுப்பேன்” (சங். 63:3,4).