No products in the cart.
டிசம்பர் 12 – நன்மையான ஈவு!
“நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகி, சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கிவருகிறது” (யாக். 1:17).
நம் அருமை ஆண்டவர் மிகவும் நல்லவர். அவரிடத்திலிருந்து எல்லா நன்மைகளும், ஆசீர்வாதங்களும், ஒத்தாசைகளும் நம்மை நோக்கி இறங்கி வருகின்றன. பல்வேறுவிதமான ஈவுகளையும், வரங்களையும் மகிழ்ச்சியோடே அவர் நமக்கு இலவசமாய் தந்தருளுகிறார்.
ஈவு அல்லது வரம் என்னும் வார்த்தை ஆங்கிலத்திலே வெகுமதி, நன்கொடை என்ற அர்த்தம் தரும்படியாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அவை நம்முடைய உழைப்பினால் சம்பாதிக்கப்படுகிறவைகள் அல்ல. அவருடைய கிருபையினால் அன்போடு இலவசமாகத் தரப்படுகின்றவை.
சில வருடங்களுக்கு முன்பு, ஒரு செல்வந்தர் ஒரு உணவு விடுதியிலே தன்னுடைய நண்பர்களோடு வந்து அமர்ந்து சாப்பிட்டார். அவர் கேட்டுக்கொண்டவைகள் எல்லாவற்றையும் அங்கிருந்த பணியாளர்கள் மிகுந்த அன்போடு கொடுத்தார்கள். முடிவிலே அவர்களுக்கு நன்றி செலுத்துகிற விதத்தில் அவர் ஒரு வெகுமதியை ஒரு தட்டில் வைத்துச் சென்றார். பார்ப்பதற்கு ஒரு சிறிய பார்சல் போல அந்த வெகுமதி காணப்பட்டது.
அவர்கள் உள்ளே சென்று அதைத் திறந்து பார்த்தபோது அங்கே 1,20,000 டாலருக்கான சிங்கப்பூர் பணம் இருந்ததைக்கண்டு பிரமித்தார்கள். இவ்வளவு பெரிய வெகுமதியா? உணவு பரிமாறுகிறவர்களுக்குகூட இவ்வளவு பெரிய தொகையை வெகுமதியாக ஒருவர் கொடுப்பாரா? அப்படி நன்கொடை கொடுத்தது யார் தெரியுமா? புரூனே என்ற தேசத்தின் இராஜாதான். அந்த பணத்தைப் பெற்றுக்கொண்டபோது அங்கு வேலை செய்த வேலைக்காரர்களுக்கு எவ்வளவு பெரிய மகிழ்ச்சியாய் இருந்திருக்கும்!
நம்முடைய கர்த்தரோ இராஜாதி இராஜா, கர்த்தாதி கர்த்தா. “அவரே நித்தியானந்தமுள்ள ஏக சக்கராதிபதியும், இராஜாதி இராஜாவும், கர்த்தாதி கர்த்தாவும், ஒருவராய் சாவாமையுள்ளவரும், சேரக்கூடாத ஒளியில் வாசம் பண்ணுகிறவரும், மனுஷரில் ஒருவரும் கண்டிராதவரும், காணக்கூடாதவருமாயிருக்கிறவர்” (1தீமோ. 6:15,16). அவர் ஜோதிகளின் பிதா. அவர் பள்ளத்தாக்கின் லீலி. அவரிடத்திலிருந்து வருகிற வெகுமதி எவ்வளவு மேன்மையுள்ளதாய் இருக்கும் என்பதைச் சற்று சிந்தித்துப் பாருங்கள்.
உலகத்தில் உள்ள மக்களுக்கு அவர் சூரியனையும், சந்திரனையும், நட்சத்திரங்களையும், மலைகளையும், குன்றுகளையும், பழவர்க்கங்களையும், கோடிக்கணக்கான பறவைகளையும், மிருகங்களையும் ஈவாகவே கொடுத்திருக்கிறார்.
அவர் கொடுத்த எல்லா வெகுமதிகளிலும், ஈவுகளிலும் மிகப்பெரிய ஈவு அவர் நமக்குத் தந்த நித்திய ஜீவன் ஆகும். அதுவே அழியாத வாழ்வு. அதுவே நித்திய பேரின்பம். அதுவே பரலோக நித்திய மகிழ்ச்சி. அந்த நித்திய ஜீவனை பாவ மன்னிப்பின் மூலமாக நீங்கள் பெற்றுக்கொள்ளுகிறீர்கள். அந்த ஈவைக் குறித்து அப். பவுல், “தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்” (ரோமர் 6:23) என்று எழுதுகிறார்.
தேவபிள்ளைகளே, இந்த பாவ மன்னிப்பாகிய ஈவை நீங்கள் பெற்றுக்கொண்டிருக்கிறீர்களா? உங்களுக்குள்ளே இரட்சிப்பின் சந்தோஷம் இருக்கிறதா? அப்படியானால், மகிழ்ச்சியுடன் தேவனைத் துதிப்பீர்களாக!
நினைவிற்கு:- “கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு” (எபே. 2:8).