bandar togel situs toto togel bo togel situs toto musimtogel toto slot
Appam, Appam - Tamil

டிசம்பர் 11 – ஜீவ ஒளி!

“அவருக்குள் ஜீவன் இருந்தது. அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது, அந்த ஒளி இருளிலே பிரகாசிக்கிறது” (யோவான் 1:4,5).

ஜீவ ஒளி கிறிஸ்துவே! ‘என் இருளை மாற்றி வாழ்க்கையில் ஜீவ ஒளியை ஏற்றும் ஆண்டவரே’ என்று ஜெபிக்கிற ஒவ்வொரு உள்ளத்திற்குள்ளும் பரலோக தீபத்தை ஏற்றிவைப்பதற்காக கிறிஸ்து பூமிக்கு வந்தார். எவ்வளவு இருண்ட உள்ளமாக இருந்தாலும், பாவஇருள் சூழ்ந்த வாழ்க்கையானாலும், கிறிஸ்து ஜீவனையும், ஜீவ ஒளியையும் தரவல்லவர்!

ஏழையானாலும் சரி, பணக்காரனானாலும் சரி, தாழ்ந்தவனானாலும் சரி, உயர்ந்தவனானாலும் சரி, படித்தவனானாலும் சரி, பாமரனானாலும் சரி, அவன் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு கிறிஸ்துவின்மேல் விசுவாசம் வைக்கும்போது கர்த்தர் அவனை நிச்சயமாகவே பிரகாசிக்கச் செய்வார்.

வேதம் சொல்லுகிறது: “உலகத்திலே வந்த எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி” (யோவான் 1:9).

அப். பவுல், எந்த மனுஷனையும் மறுரூபமாக்கி பூரணமாக்க வல்லமையுள்ள கிறிஸ்துவின் ஊழியத்திற்குத் தன்னை ஒப்புக்கொடுத்தார். அவர் எழுதுகிறார்: “எந்த மனுஷனையும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேறினவனாக நிறுத்தும்படிக்கு அவரையே நாங்கள் அறிவித்து, எந்த மனுஷனுக்கும் புத்திசொல்லி, எந்த மனுஷனுக்கும் எல்லா ஞானத்தோடும் உபதேசம்பண்ணுகிறோம்” (கொலோ. 1:28).

தேவபிள்ளைகளே, நீங்கள் கிறிஸ்துவை விசுவாசித்து ஏற்றுக்கொள்ளும்போது உங்களுக்குள்ளே ஏற்றப்படுகிற கர்த்தருடைய தீபமானது தொடர்ந்து எரிந்துகொண்டே இருக்கவேண்டும். அவருடைய வருகை பரியந்தம் நீங்கள் பிரகாசித்துக்கொண்டே இருக்கவேண்டும். உங்கள் உள்ளத்தின் ஆவியிலே ஏற்றப்படுகிற அந்த தீபம் தொடர்ந்து எரியவேண்டுமானால் நீங்கள் தேவஆவியினால் கர்த்தரோடுகூட இடைவிடாமல் தொடர்பு வைத்துக்கொள்ளவேண்டும்.

கர்த்தர் மனுஷனை சிருஷ்டித்தபோது அவருடைய சாயலிலே, அவருடைய ரூபத்தின்படியே சிருஷ்டித்தார். கர்த்தர் எப்படிப்பட்டவர்? அவருடைய சாயலும் ரூபமும் எப்படிப்பட்டது? நம்மால் அதை வர்ணிக்க இயலாவிட்டாலும் கர்த்தர் ஆவியானவர் என்பதை அறிந்திருக்கிறோம். மண்ணினால் அவர் மனுஷனை சிருஷ்டித்தபோது அவனுக்குள் ஆவியை வைத்தார். ஆகவேதான் வேதம், “மனுஷனுடைய ஆவி கர்த்தர் தந்த தீபமாயிருக்கிறது” என்று சொல்லுகிறது (நீதி. 20:27).

உங்களுடைய விளக்கானது தொடர்ந்து எரியவேண்டுமென்றால் நீங்கள் கர்த்தரை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ளவேண்டும். இயேசு சொன்னார், “உண்மையாய்த் தொழுதுகொள்ளுகிறவர்கள் பிதாவை ஆவியோடும், உண்மையோடும் தொழுதுகொள்ளுங்காலம் வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது; தேவன் ஆவியாயிருக்கிறார். …அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும்” (யோவான் 4:23,24).

தேவபிள்ளைகளே, “நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான்” (யோவான் 8:12) என்று இயேசுகிறிஸ்து சொன்னார் அல்லவா? ஜீவஒளியாகிய கிறிஸ்துவண்டை இன்றே வந்துவிடுங்கள்.

நினைவிற்கு:- “கட்டளையே விளக்கு, வேதமே வெளிச்சம், போதகசிட்சையே ஜீவ வழி” (நீதி. 6:23).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.