No products in the cart.
டிசம்பர் 09 – பார்வைக்கு நலமானபடி
“இதோ, இங்கே இருக்கிறேன்; அவர் தம்முடைய பார்வைக்கு நலமானபடி எனக்குச் செய்வாராக” (2 சாமு. 15:26).
வேதத்தில், ‘அவர் பார்வைக்கு நலமானதைச் செய்வாராக’ என்கிற வார்த்தைகள் பல இடங்களில் காணப்படுகின்றன. (உபா. 6:19; நியா. 10:15; 1 சாமு. 3:18; 2 சாமு. 15:26). பரிசுத்தவான்கள் தங்களுடைய நீதி நியாயங்களை கர்த்தரிடத்தில் சொல்லிவிட்டு மீதியை கர்த்தருடைய கரத்தில் ஒப்புவித்து, ‘தேவனே, உமது பார்வைக்கு நலமானதை எனக்குச் செய்யும்’ என்று மன்றாடினார்கள்.
மனிதனுடைய பார்வை என்பது வேறு, கர்த்தருடைய பார்வை என்பது வேறு. மனிதன் முகத்தைப் பார்கிறான். கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார். உள்ளத்தின் ஆழத்தைப் பார்க்கிறார். நினைவு, எண்ணங்களையெல்லாம் பார்க்கிறார்.
சில காரியங்கள் மனுஷனுடைய பார்வைக்குச் செம்மையானதைப்போலத் தோன்றலாம். ஆனால் வேதமோ, “மனுஷனுக்குச் செம்மையாய்த் தோன்றுகிற வழி உண்டு; அதின் முடிவோ மரண வழிகள்” என்று எச்சரிக்கிறது (நீதி. 14:12). ‘கண்களால் கண்டதும் பொய்; காதுகளினால் கேட்பதும் பொய்; தீர விசாரித்து அறிவதே மெய்’ என்றார் ஒரு தத்துவ கவிஞர்.
நீங்கள் ஒவ்வொன்றையும் கர்த்தருடைய வேதத்தின் வெளிச்சத்திலே சீர்தூக்கிப் பார்த்து, அது கர்த்தருடைய பார்வைக்குச் செம்மையானதுதானா என்பதைச் சிந்தித்துப்பார்க்கவேண்டும்.
இஸ்ரவேல் ஜனங்களுக்கு மோசே கொடுத்த கடைசி ஆலோசனை என்ன தெரியுமா? “நீ கர்த்தருடைய பார்வைக்குச் செம்மையும் நன்மையுமாய் இருக்கிறதைச் செய்வாயாக” (உபா. 6:19) என்பதே. ‘அப்படிச் செய்யும்போது, கர்த்தர் சத்துருக்களை உன் முகத்துக்கு முன்பாக துரத்திவிடுவார். கர்த்தர் முற்பிதாக்களுக்கு ஆணையிட்டுக் கொடுத்த நல்ல தேசத்திலே நீ பிரவேசித்து அதைச் சுதந்தரித்துக்கொள்ளுவாய். நீ நன்றாய் இருப்பாய்’ என்றார்.
நியாயாதிபதிகளின் காலத்திலே இஸ்ரவேல் புத்திரர் கர்த்தருடைய பார்வைக்கு நலமானதைச் செய்யாமல், “அவனவன் தன்தன் பார்வைக்குச் சரிப்போனபடி செய்துவந்தான்” (நியா. 17:6). முடிவில் அவர்கள் கர்த்தரின் பார்வைக்கு பொல்லாப்பு செய்து கர்த்தரைக் கோபமூட்டினார்கள் (நியா. 2:11; 3:7). ஆம், மனுஷனுடைய பார்வை என்பதும், தேவனுடைய பார்வை என்பதும் வேறுவேறானவை.
லோத்து தன் பார்வைக்கு நலமானபடி சோதோம் கொமோராவைத் தெரிந்துகொண்டார். ஆனால் அதற்குப்பின்னால் தேவனுடைய கோபாக்கினையும், நியாயத்தீர்ப்பும் இருக்கிறது என்பதை உணரவில்லை. அவருடைய எண்ணமெல்லாம் தேசத்தின் செழுமையைத் தான் அனுபவிக்கவேண்டும் என்பதாகவே இருந்தது.
ஆனால் ஆபிரகாமோ, கர்த்தருடைய சித்தத்தையே நோக்கிப்பார்த்தார். கர்த்தர் எனக்குத் தெரிந்தெடுத்துக் கொடுக்கட்டும் என்று பொறுமையோடு காத்திருந்தார். ஆகவேதான் கர்த்தர் ஆபிரகாமுக்கும், அவருடைய சந்ததிக்கும் பாலும் தேனும் ஓடுகிற கானானைக் கொடுத்தார். சோதோம் கொமோராவையோ கவிழ்த்துப்போட்டார்.
தேவபிள்ளைகளே, எப்போதும் கர்த்தருடைய பார்வைக்கு நலமானதையே செய்வீர்களாக.
நினைவிற்கு:- “தேவன் தமது பார்வைக்கு நல்லவனாயிருக்கிறவனுக்கு ஞானத்தையும் அறிவையும் இன்பத்தையும் அளிக்கிறார்” (பிர. 2:26).