Appam, Appam - Tamil

டிசம்பர் 03 – வாக்குத்தத்தங்கள் நிறைவேற காத்திருங்கள்!

வாக்குத்தத்தங்கள் நிறைவேற காத்திருங்கள்!

“நான் கர்த்தர், எனக்குக் காத்திருக்கிறவர்கள் வெட்கப்படுவதில்லை என்பதை அப்பொழுது அறிந்துகொள்வாய்” (ஏசா. 49:23).

நீங்கள் கர்த்தருக்குக் காத்திருப்பீர்களென்றால் நிச்சயமாகவே கர்த்தர் தம்முடைய வாக்குத்தத்தங்களையெல்லாம் நிறைவேற்றுவார். அவர் மனதுருக்கத்தின் தேவனாயிருக்கிறபடியால் அவருடைய கிருபையும், இரக்கமும் நீங்கள் ஒருநாளும் வெட்கப்பட்டுப்போகாதபடி காக்கின்றன.

‘நிச்சயமாக நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து, உன்னைப் பெருகவே பெருகப் பண்ணுவேன்’ என்று ஆபிரகாமுக்குத் தேவன் வாக்குத்தத்தம்பண்ணினார். அப்படியே பொறுமையாய் இருபத்தைந்து ஆண்டுகள் காத்திருந்து ஆசீர்வாதமான ஈசாக்கை ஆபிரகாம் பெற்றுக்கொண்டார் (எபி. 6:13-15).

நோவா ஏறக்குறைய நூற்றிருபது ஆண்டுகள் ஜலப்பிரளயத்தைக்குறித்துப் பிரசங்கம்பண்ணி, பேழையை உண்டாக்கினபோதிலும், காலம் தாமதமாகிறதே என்று சோர்ந்துபோகவில்லை. ஏற்ற காலத்தில் பேழைக்குள் பிரவேசித்து ஜலப்பிரளயத்தினால் அழியாதபடி அவரும் அவரது குடும்பமும் தப்பினார்கள் அல்லவா?

பாலும் தேனும் ஓடுகிற கானானைச் சுதந்தரிக்க இஸ்ரவேல் ஜனங்கள் நாற்பது ஆண்டுகள் பொறுமையுடன் காத்திருக்கவேண்டியதாயிற்று. அவசரப்பட்டவர்கள் அழிந்துபோனார்கள். ஆனால் யோசுவாவும், காலேபும் பொறுமையுடன் காத்திருந்தபடியால், பாலும் தேனும் ஓடுகிற கானானைச் சுதந்தரித்துக்கொண்டார்கள்.

மேசியாவாக வரப்போகிறவரை கர்த்தர் ஏதேன் தோட்டத்திலே வாக்குப்பண்ணினபோதிலும் அவரைப் பெற்றுக்கொள்ள நான்காயிரம் ஆண்டுகள் மனுக்குலம் காத்திருக்கவேண்டியிருந்தது. ஸ்திரீயின் வித்தானவர் வந்தபோது, சத்துருவின் தலையை நசுக்கி நமக்கு விடுதலையைக் கொடுத்தாரே!

பரிசுத்த ஆவியை சீஷர்களுக்கு அன்றைக்கு கர்த்தர் வாக்குப்பண்ணினார். சீஷர்கள் ஆவலோடு காத்திருந்து, மேல் வீட்டறையிலே ஜெபித்தார்கள். அப்பொழுது பரிசுத்தஆவியின் அளவற்ற வல்லமையையும், அபிஷேகத்தையும் பெற்றுக்கொண்டார்கள். “தேவனுடைய வாக்குத்தத்தங்களெல்லாம் இயேசுகிறிஸ்துவுக்குள் ஆம் என்றும், அவருக்குள் ஆமென் என்றும் இருக்கிறதே” (2 கொரி. 1:20). தேவன் வாக்குத்தத்தம்பண்ணினதை நிறைவேற்ற வல்லவராயிருக்கிறார் (ரோம. 4:21). ஆகவே பொறுமையுடன் காத்திருங்கள்.

இங்கிலாந்து தேசத்தில் ஒரு பெரிய இராணுவ தளபதி யுத்தத்திற்கான ஆலோசனைகளைக் கேட்பதற்காக கர்த்தருடைய பாதத்தில் காத்திருந்து ஜெபித்தார். காலையில் நான்கு மணிக்கு தன்னுடைய கடமைகளைச் செய்யவேண்டுமென்றால், இரண்டு மணிக்கெல்லாம் எழுந்து அவர் கர்த்தருடைய சமுகத்தில் அமர்ந்துவிடுவார். கர்த்தருக்குக் காத்திருக்காமல், அவருடைய ஆலோசனையைப் பெறாமல் அவர் ஒரு இடமும் செல்லுவதில்லை. இதனால் அவருடைய காரியமெல்லாம் ஜெயமாயிருந்தது.

தேவபிள்ளைகளே, கர்த்தருடைய பாதத்தில் காத்திருக்கிற நேரங்கள் ஒருபோதும் வீணாகாது. அது உங்களுடைய ஆத்துமாவைப் பெலன்கொண்டு உள்ளத்தில் தைரியத்தையும், தேவ வல்லமையையும், சத்துவத்தையும் கொண்டுவருகிற நேரமாகும். நீங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப்போவதேயில்லை.

நினைவிற்கு:- “என் தேவனே, உம்மை நம்பியிருக்கிறேன், நான் வெட்கப்பட்டுப்போகாதபடி செய்யும்; என் சத்துருக்கள் என்னை மேற்கொண்டு மகிழவிடாதேயும்” (சங். 25:2).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.