bandar togel situs toto togel bo togel situs toto musimtogel toto slot
Appam, Appam - Tamil

டிசம்பர் 02 – கண்களுக்குப் பார்வை!

“நீ பார்வையடையும்படிக்கு உன் கண்களுக்குக் கலிக்கம்போடவும் வேண்டுமென்று உனக்கு ஆலோசனை சொல்லுகிறேன்” (வெளி. 3:18).

ஏழு சபைகளில் கடைசி சபையான லவோதிக்கேயாவுக்கு கர்த்தர் எச்சரிப்புகளையும் கொடுக்கிறார், ஆலோசனைகளையும் கொடுக்கிறார். கர்த்தருடைய கண்கள் கூர்மையானவை. அக்கினி ஜுவாலை போன்றவை. அவர் கண்களுக்கு மறைவானது ஒன்றுமில்லை.

அந்தக் கண்கள் லவோதிக்கேயா சபையின் ஆவிக்குரிய நிலவரத்தைக் கண்டன. “நீ நிர்ப்பாக்கியமுள்ளவனும், பரிதபிக்கப்படத்தக்கவனும், தரித்திரனும், குருடனும், நிர்வாணியுமாயிருக்கிறதை அறியாமல்” (வெளி. 3:17) இருப்பதாக கர்த்தர் சொன்னார். குருடனாய் இருக்கக் காரணம் என்ன?

வேதம் சொல்லுகிறது, “தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி, அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாயிராதபடிக்கு, இப்பிரபஞ்சத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கினான்” (2 கொரி. 4:4).

இயேசுவின் நாட்களிலே பரிசேயர், சதுசேயர், வேதபாரகர் எல்லாரும் மதத்தலைவர்களாக இருந்தாலும், அவர்களுடைய ஆவிக்குரிய வாழ்க்கையிலோ குருடராய் காணப்பட்டார்கள். கர்த்தர் அவர்களைப் பார்த்து, “குருடரான வழிகாட்டிகளே!” என்று அழைத்தார் (மத். 23:16). தானே குருடனாக இருந்தால் மற்றவர்களுக்கு வழி காட்டுவது எப்படி? லவோதிக்கேயா சபையானது உலகத்துக்கு வெளிச்சமாக, கலங்கரை விளக்கமாக, ஒளிவீசும்படி தெரிந்துகொள்ளப்பட்ட ஒரு சபை. ஆனால் அந்தோ பரிதாபம்! அது குருடாக இருந்தது.

நான்கு குருடர்கள் ஒரு யானையைத் தடவிப் பார்த்த கதையை நீங்கள் அறிவீர்கள். யானை எப்படி இருக்கும் என்று கேட்டபோது, ஒருவன் காலைத் தடவிப்பார்த்து, ‘அது தூணைப்போல இருக்கிறது’ என்றான். வாலைத் தடவிப் பார்த்தவன், ‘கயிறுபோல இருக்கிறது’ என்றான். காதைத் தடவிப் பார்த்தவன், ‘முறம்போல இருக்கிறது’ என்றான்.  தும்பிக்கையைத் தடவினவன், ‘உலக்கைபோல இருக்கிறது’ என்றான். கண்கள் தெரியாதவர்களின் நிலைமையும் இதுதான். ஆவிக்குரிய குருடர்கள் புத்தியில் அந்தகாரப்பட்டவர்களாய் இருக்கிறார்கள் (எபே. 4:18). கிறிஸ்துவைவிட்டு மிகவும் தூரமாய்ப் போய்விட்டதினால் இந்த ஆவிக்குரிய குருட்டுத்தன்மை இவர்களுக்கு ஏற்பட்டது.

சாது சுந்தர்சிங் ஒரு முறை மலையடிவாரத்திலுள்ள இருண்ட குகைக்குள்ளே ஒரு துறவியைச் சந்தித்தார். அந்தத் துறவிக்கு கண்கள் இருந்தும் அவற்றில் பார்வை இல்லாமலிருந்தது. காரணம், அவர் வெளிச்சத்தை விரும்பாமல் பல ஆண்டுகளாய் இருண்ட குகைக்குள்ளேயே வாழ்ந்துவிட்டார். சாதுசுந்தர்சிங் அவருக்கு ஆலோசனை கூறி குகையைவிட்டு வெளியே கொண்டுவந்தபோது, அவருடைய கண்கள் கூசின. அவரால் உலகத்தைப் பார்க்க முடியவில்லை. பல ஆண்டுகளாய் இருளுக்குள்ளே வாழ்ந்ததினால் கண்கள் பார்வையற்றுப் போயின.

சில வகை எலிகள் பூமியின் அடியிலே வெளிச்சத்தைக் காணாமல் வாழ்கின்றன. அவைகளுக்கு கண்கள் இருந்தும் பார்வை கிடையாது. உபயோகிக்கப்படாத கண்கள் பார்வையை இழந்துவிடக்கூடும். தேவபிள்ளைகளே, நீங்கள் ஆவிக்குரிய வாழ்க்கையிலே குருடராயிராமல், கர்த்தருக்கென்று ஒளிவீசுவீர்களாக.

நினைவிற்கு:- “தன் சகோதரனைப் பகைக்கிறவன் இருளிலே இருந்து இருளிலே நடக்கிறான்; இருளானது அவன் கண்களைக் குருடாக்கினபடியால் தான் போகும் இடம் இன்னதென்று அறியாதிருக்கிறான்” (1 யோவா. 2:11).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.