Appam, Appam - Tamil

டிசம்பர் 01 – கண்களோடே …!

“என் கண்களோடே உடன்படிக்கைபண்ணின நான் ஒரு கன்னிகையின்மேல் நினைப்பாயிருப்பதெப்படி?” (யோபு 31:1).

பரிசுத்தமுள்ள வாழ்க்கை வாழவேண்டுமானால், நீங்கள் உங்கள் கண்களோடு உடன்படிக்கை செய்யவேண்டியது அவசியம். கண்ணை கர்த்தருக்கென்றும், பரிசுத்தத்துக்கென்றும் அர்ப்பணிக்கவேண்டியது அவசியம். கண்கள்மேல் கர்த்தருடைய அபிஷேகம் எப்போதும் இருக்கட்டும். உங்கள் கண்கள் மனதுருக்கத்தோடு மற்றவர்களை நோக்கிப்பார்க்கட்டும்

உங்கள் கண்களின் பார்வைகளெல்லாம் கர்த்தருக்குப் பிரியமானவையாகவும், பரிசுத்தமுள்ளவையாகவும் இருக்க ஒப்புக்கொடுங்கள். வேதம் சொல்லுகிறது, “உன் கண்கள் நேராய் நோக்கக்கடவது” (நீதி. 4:25).

ஒரு பரிசுத்தவான் சொன்னார், “ஒவ்வொருநாளும் அதிகாலை வேளையிலே கல்வாரிச் சிலுவைக்கு முன்பாக நின்று கிறிஸ்துவின் இரத்தத்தை என் கண்கள்மீது தெளித்து, என் பார்வையெல்லாம் அபிஷேகம் நிறைந்ததாய் இருக்கவேண்டுமென்று மன்றாடுவேன். என்னைக் காண்கிறவர்கள் என்னில் என்னைக் காணாமல், கர்த்தரையே காணும்படி என் கண்களைக் கர்த்தருக்கென்று பிரதிஷ்டை செய்வேன், ஒப்புக்கொடுப்பேன், அர்ப்பணிப்பேன்” என்றார்.

யோபு பக்தன் ஏன் தன் கண்களோடு உடன்படிக்கை செய்தார்? அவருடைய கண்களிலே கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் வருகையைக் குறித்த தரிசனம் இருந்ததே அதன் காரணம். இராஜாதி இராஜாவை மகிமை பொருந்தினவராய்க் காணவேண்டுமென்ற ஏக்கம் இருந்தது.

ஆகவேதான் அவர் சொன்னார், “என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்றும், அவர் கடைசிநாளில் பூமியின்மேல் நிற்பார் என்றும் நான் அறிந்திருக்கிறேன். அவரை நானே பார்ப்பேன்; அந்நிய கண்கள் அல்ல, என் கண்களே அவரைக் காணும்” (யோபு 19:25,27).

வௌவாலைப் பாருங்கள்! அது அங்குமிங்கும் பறந்து திரிவதைக் காணலாம். அதற்கு பறவைகளைப்போல சிறகுகளில்லை. ஏதோ ரப்பரினாலும், பிளாஸ்டிக்கினாலும் செய்யப்பட்டதுபோன்ற மிருதுவான இறக்கைகளிருக்கின்றன. அதைக்கொண்டு அவை அருமையாய்ப் பறந்து செல்லுகின்றன. ஆனால் அந்தச் செட்டைகளில் குண்டூசியைக்கொண்டு ஒரு சிறிய ஓட்டையைப் போட்டாலும்கூட, அதனால் பறக்க முடியாது.

அதுபோல உங்கள் ஆவிக்குரிய கண்களிலே ஓட்டை விழும் என்றால், மகிமையின் இராஜாவை இரண்டாவது வருகையிலே நீங்கள் காணமுடியாது. எக்காள சத்தம் தொனிக்கும்போது, நீங்கள் கிறிஸ்துவுக்கு எதிர்கொண்டுபோக முடியாதபடி, தடை செய்கிற எல்லா இச்சைகளையும் உங்களைவிட்டு அகற்றுங்கள். பரிசுத்தத்துக்கு ஒப்புக்கொடுங்கள்.

யோபு பக்தன், என் கண்கள் இனி இச்சையோடு பார்ப்பதில்லை என்று தன் கண்களோடு உடன்படிக்கை செய்தார். தேவபிள்ளைகளே, எல்லாக் காவலோடும் உங்கள் கண்களைக் காத்துக்கொள்ளுங்கள். உங்கள் இருதயத்தைக் காத்துக்கொள்ளுங்கள். உங்களுடைய கண்கள் பரிசுத்தமானவைகளும், கிறிஸ்துவை ஆவலோடு எதிர்நோக்குகிறவைகளுமாய் இருக்கட்டும்.  மாயையைக் காணாத கண்களையும், கர்த்தரை முழு இருதயத்தோடும் நேசிக்கிற உள்ளத்தையும் நாடுங்கள்.

நினைவிற்கு:- “உன் கண்கள் நேராய் நோக்கக்கடவது; உன் கண்ணிமைகள் உனக்கு முன்னே செவ்வையாய்ப் பார்க்கக்கடவது” (நீதி. 4:25).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.