No products in the cart.
ஜூலை 08 – வழிகாட்டும் ஆண்டவர்!
“உமது நாமத்தினிமித்தம் எனக்கு வழிகாட்டி, என்னை நடத்தியருளும்” (சங். 31:3).
மனிதன் தனக்குத்தானே வழிகாட்டிக்கொள்ள முடியாது. குழந்தைப்பருவத்தில் வழிகாட்ட ஆசிரியப் பெருமக்கள் இருக்கிறார்கள். வாழ்க்கையில் வழிகாட்ட பல நண்பர்களும், மகான்களும், அறிவாளிகளும், தேசத்தலைவர்களும் இருக்கிறார்கள். ஆனால் ஆத்துமாவுக்கு வழிகாட்ட யார் உண்டு?
அநேகருடைய மரண நேரத்தில், உயிர் பிரியும்போது அவர்களுடைய ஆவி நினைக்கிறதையும், அதை எங்கே சொல்வது என்று தெரியாமல் தடுமாறுகிறதையும் கண்டிருக்கிறேன். அந்த நேரம் மனிதன் தனக்கு வழிகாட்ட யாரும் இல்லையே என்று ஏங்குகிறான். அவன் பாவத்தில் மரித்திருப்பானானால் அவனை வழிகாட்டி அழைத்துச்செல்ல அசுத்த ஆவிகளும், பிசாசின் கூட்டங்களும் வருகின்றன. அவைகள் பாதாளத்திற்குள்ளும், காரிருளுக்குள்ளும், அக்கினிக் கடலுக்குள்ளும் வழிநடத்திச்செல்லுகின்றன.
ஆனால் தேவனுடைய பிள்ளைகள் மரிக்கும்போது, அங்கே தேவதூதர்கள் வருகிறார்கள். அவர்களுடைய ஜீவனை மிகுந்த மகிழ்ச்சியோடு பரலோக இராஜ்யத்திற்குள் அழைத்துச் செல்லுகிறார்கள். அந்த நேரம் எவ்வளவு சந்தோஷமான ஒரு நேரம்!
தாவீது தன் பூமிக்குரிய வாழ்க்கைக்கும், நித்திய வாழ்க்கைக்கும் கர்த்தரையே வழிகாட்டியாகக்கொண்டார். “உமது நாமத்தினிமித்தம் எனக்கு வழிகாட்டி, என்னை நடத்தியருளும்” (சங்கீதம் 31:3) என்று மனதுருகி ஜெபித்தார்.
ஆடுகளுக்கு மேய்ப்பன் வழிகாட்டுவதுபோல, குருடரைப் பார்வையுள்ளவர்கள் வழிநடத்துவதுபோல, பேதமைகளை அறிவுள்ளவர்கள் வழிநடத்துவதுபோல, பெலவீனரை பலமுள்ளவன் வழிநடத்துவதுபோல, பெரியவரும், வல்லமையுள்ளவரும், என்றென்றைக்கும் ஜீவிக்கிறவருமான கர்த்தரே நம்மை வழிநடத்தவேண்டுமென்று நாம் விரும்புவதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லையே?
நம்மை நேசிக்கிற ஆண்டவரும்கூட நம்மை வழிநடத்த ஆவலுள்ளவராயிருக்கிறார். ஆகவே ஒவ்வொருநாளும், “ஆண்டவரே நான் என்ன செய்ய சித்தமாயிருக்கிறீர்? எந்தப் பாதையிலே நான் செல்ல வேண்டும்? இன்றைக்கு என்னைச் சந்திக்கிற மனிதரிடத்திலே நான் எப்படி நடந்துகொள்ளவேண்டும்?” என்று கேட்போமாக! வேதம் சொல்லுகிறது, “கர்த்தர் நித்தமும் உன்னை நடத்தி, மகா வறட்சியான காலங்களிலே உன் ஆத்துமாவைத் திருப்தியாக்கி, உன் எலும்புகளை நிணமுள்ளதாக்குவார்; நீ நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப்போலவும், வற்றாத நீரூற்றைப்போலவும் இருப்பாய்” (ஏசா. 58:11).
இன்றைக்கு அநேக ஜனங்கள் தங்கள் சுயசித்தத்தின்படியே நடக்க பிரியப்படுகிறார்கள். வேதம் சொல்லுகிறது என்ன? மனுஷனுக்கு செம்மையாய் தோன்றுகிற வழிகள் உண்டு. அவைகள் மரண வழிகள். தேவபிள்ளைகளே, நீங்கள் உங்கள் சுயசித்தத்தைச் சேராமல் உங்கள் பாதையைக் கர்த்தருடைய கரத்தில் ஒப்புக்கொடுத்தால் அவர் மேலான தமது சித்தத்தின்படி உங்களை வழிநடத்துவார்.
நினைவிற்கு:- “தம்முடைய நாமத்தினிமித்தம் என்னை நீதியின் பாதைகளில் நடத்துகிறார். நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்; தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்” (சங். 23:3,4).