No products in the cart.
ஜூலை 29 – விலையேறப் பெற்ற கல்!
“தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டதும் விலையேறப்பெற்றதுமாயிருக்கிற ஜீவனுள்ள கல்லாகிய அவரிடத்தில் சேர்ந்தவர்களாகிய நீங்களும்,….பரிசுத்த ஆசாரியக்கூட்டமாகவும் கட்டப்பட்டுவருகிறீர்கள்” (1 பேதுரு 2:4,5).
விலையேறப்பெற்ற கல் என்னும் வார்த்தை ஒவ்வொருவரையும் வைரங்களையும், வைடூரியங்களையும், மாணிக்கக் கற்களையுமே நினைக்க வைக்கும். ஆனால் இவை ஒன்றுக்கும் ஜீவன் இல்லை.
அப். பவுல், ஜீவனுள்ள விலையேறப்பெற்ற கல்லைக்குறித்துப் பேசுகிறார். ஆம், அவர்தான் மேசியா என்னும் திட அஸ்திபாரமான மூலைக்கல் (ஏசா. 28:16). யார், யார் அவரை நேசித்து விசுவாசித்து ஏற்றுக்கொள்ளுகிறார்களோ, அவர்களுடைய வாழ்க்கைக்கு அவர் அஸ்திபாரமான விலையேறப்பெற்ற கல்லாக விளங்குகிறார். அதே நேரத்திலே அவருக்குக் கீழ்ப்படியாமல் அவரை தள்ளிவிடும்போது அவரே இடறுதலுக்கேதுவான கல்லாகவும் மாறிவிடுகிறார் (1 பேதுரு 2:7).
அன்றைக்கு இயேசுகிறிஸ்துவை பரிசேயர்களும், சதுசேயர்களும் தள்ளிவிட்டார்கள். யூதர்கள் அவரைச் சிலுவையில் அறையும் என்று கூக்குரலிட்டார்கள். அன்றைக்கிருந்த வேதபாரகனும் ஆசாரியனும் அவரை ரோம அரசாங்கத்திடம் ஒப்படைத்தார்கள். வீடு கட்டுகிறவர்களால் ஆகாது என்று தள்ளப்பட்ட கல்லாய் அவர் இருந்தாலும், அவரே நம்முடைய விசுவாசத்திற்கு அஸ்திபாரமான கல்லாக, தலைக்கல்லாக, மூலைக்கல்லாக விளங்குகிறார். அவர்மேல் நாமும் தேவனுடைய வாசஸ்தலமாக கட்டப்பட்டுவருகிறோம்.
உங்களது வாழ்க்கையின் அஸ்திபாரமாக இயேசுகிறிஸ்துவையே கொள்ளுங்கள். “இதோ, அஸ்திபாரமாக ஒரு கல்லை நான் சீயோனிலே வைக்கிறேன், அது பரீட்சிக்கப்பட்டதும், விலையேறப்பெற்றதும், திட அஸ்திபாரமுள்ளதுமான மூலைக்கல்லாயிருக்கும்; விசுவாசிக்கிறவன் பதறான்” (ஏசா. 28:16).
யார், யார் இயேசுகிறிஸ்துவுக்கு முதலிடம் கொடுத்து அவரைப் பற்றிக்கொண்டு சேவிக்கிறார்களோ அவர்களே பாக்கியவான்கள். மட்டுமல்ல, விலையேறப்பெற்ற கல்லாகிய அவரோடு நாமும் இணைந்து கட்டப்படும்போது நாமும் விலையேறப்பெற்ற கற்களாக மாறுவோம். இந்த வாழ்க்கை இவ்வுலகத்தோடு முடிந்துவிடுகிற வாழ்க்கை அல்ல. அது நித்திய நித்தியமான வாழ்க்கையாகத் தொடரும். நாம் விலையேறப்பெற்ற கற்களாய் தேவசமுகத்திலே என்றென்றைக்கும் நிலைத்திருப்போம்.
சாலொமோன் தேவாலயத்தைக் கட்டியபோது, கற்களை சம அளவு உள்ளவைகளாக்கி, அழகாக அருமையாய் செதுக்கி, உடைத்து, நொறுக்கி அவற்றைப் பணிதீர்ந்தவைகளாக்கிய பிறகே ஆலயம் கட்டப் பயன்படுத்தினார். அதுபோலவே பரலோகராஜ்யத்தில் நாம் ஜீவனுள்ள கற்களாய் விளங்குவதற்காக கர்த்தர் இந்த உலகத்திலே நம்மை உபத்திரவங்களின் வழியாகவும், பாடுகளின் வழியாகவும், துன்பங்களின் வழியாகவும் வழிநடத்திச் சென்று பூரண பரிசுத்தமுள்ளவர்களாக்கி, பணி தீர்க்கப்பட்ட கற்களாக சீயோனிலே புதிய எருசலேமிலே வைத்துக் கட்டி எழுப்புகிறார்.
நினைவிற்கு:- “எனக்கு அளிக்கப்பட்ட தேவகிருபையின்படியே புத்தியுள்ள சிற்பாசாரியைப்போல அஸ்திபாரம் போட்டேன். …. போடப்பட்டிருக்கிற அஸ்திபாரமாகிய இயேசுகிறிஸ்துவை அல்லாமல் வேறே அஸ்திபாரத்தைப் போட ஒருவனாலும் கூடாது” (1 கொரி. 3:10,11).