No products in the cart.
ஜூலை 28 – அவர் முன்னிலையில்!
“வார்த்தையினாலாவது கிரியையினாலாவது நீங்கள் எதைச் செய்தாலும், அதையெல்லாம் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே செய்து, அவர் முன்னிலையாகப் பிதாவாகிய தேவனை ஸ்தோத்திரியுங்கள்” (கொலோ. 3:17).
தேவபிரசன்னம் என்ற வார்த்தையானது, தமிழிலே பல்வேறு வார்த்தைகளாக மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. தேவசமுகம், முன்னிலை, முன்பாக, தேவசந்நதி, சந்நிதானம், பிரசன்னமாகுதல் என்றெல்லாம் நாம் அவ்வார்த்தையைப் பார்க்கிறோம். கர்த்தருடைய பிரசன்னத்தை காத்துக்கொள்ளுவதும், அதை அளவில்லாமல் உணர்வதும் நமக்குக் கிடைத்திருக்கிற பெரிய பாக்கியமாகும்.
ஒரு பெண் திருமணமாகி கணவனோடு வாழும்படி அவனுடைய குடும்பத்திற்கு வந்தாள். ஆனால், அந்தக் குடும்பத்தாரோ அவளை சந்தோஷமாய் ஏற்றுக்கொள்ளாமல் கடுமையாக நடத்தினார்கள். அவளுடைய கணவனும் அவள்மேல் அக்கறையோ, அன்போ காட்டவில்லை. சாத்தான் அதைப் பயன்படுத்தி அவளுக்குள் மனச்சோர்பையும், மனஅழுத்தத்தையும் கொண்டுவந்தான். அவள் நடைப்பிணம்போல மாறிவிட்டாள்.
ஒருநாள் அவள் மனச்சோர்போடு ஆலயத்திற்கு வந்தாள். ஆலய ஆராதனை முடிந்ததும், அவளுடைய நிலைமையை கர்த்தருடைய ஊழியக்காரரிடம் சொன்னாள். அந்த ஊழியக்காரர் அவளைப் பார்த்து, “சகோதரியே, உங்களை யார் பாராட்டினாலும் பாராட்டாவிட்டாலும் நீங்கள் கவலைப்படாதிருங்கள். நீங்கள் குடும்பத்துக்காக கஷ்டப்பட்டு வேலை செய்வதையெல்லாம் கர்த்தர் பார்த்துக்கொண்டிருக்கிறார். கர்த்தர் உங்களை பாராட்டுகிறார். அவர் உங்களை நேசிக்கிறார். அவருடைய கிருபை உங்கள்மேல் அளவில்லாமல் இருக்கிறது. அவர் தன்னுடைய ஜீவனைப்பார்க்கிலும் உங்களை அதிகமாய் நேசித்திருக்கிறாரே” என்று சொல்லி உற்சாகப்படுத்தினார்.
மட்டுமல்ல, ‘சகோதரியே, உங்களுடைய வீட்டு வேலைகளை செய்வதற்கு முன்பாக ஒரு நிமிடம் முழங்கால்படியிட்டு, “ஆண்டவரே இந்த வீட்டை எனக்குக் கொடுத்ததற்காக நன்றி. எனக்கென்று ஒரு அருமையான குடும்பத்தை கொடுத்ததற்காக நன்றி என்று சொல்லி ஜெபித்து தேவபிரசன்னத்தைக் கொண்டுவாருங்கள்” என்றார்.
அந்த நாள் முதற்கொண்டு அந்த சகோதரி ஜெபித்து ஜெபித்து தேவபிரசன்னத்தை அளவில்லாமல் கொண்டுவந்தார்கள். கர்த்தர் தன்னோடு இருக்கிறதையும், தன்னை கவனிக்கிறதையும், தன்னை பாராட்டுகிறதையும் உணர்ந்து களிகூர ஆரம்பித்தார்கள். ஒருநாள் அவர்கள் வேலை செய்து முடித்த பின்பு கர்த்தர் ‘நன்றாகச் செய்தாய்’ என்று மெல்லிய குரலில் சொன்னதை அவர் கேட்டார். அவருக்கு அளவற்ற சந்தோஷம் ஏற்பட்டது.
தேவபிள்ளைகளே, கர்த்தர் நம்மைப் பாராட்டுகிறவர். “கொஞ்சத்தில் உண்மையாய் இருந்தால் அநேகத்தின்மேல் அதிகாரியாய் வைப்பேன்” என்று தட்டிக்கொடுத்து உற்சாகப்படுத்துகிறவர். கர்த்தர் ஒவ்வொரு வினாடி நேரமும் உங்களைக் கவனித்துக்கொண்டிருக்கிறார் என்பதையும், உங்களிலே மனம் மகிழுகிறார் என்பதையும் மறந்து போகாதீர்கள்.
நினைவிற்கு:- “அவர் வாசல்களில் துதியோடும், அவர் பிரகாரங்களில் புகழ்ச்சியோடும் பிரவேசித்து, அவரைத் துதித்து, அவருடைய நாமத்தை ஸ்தோத்திரியுங்கள். கர்த்தர் நல்லவர், அவருடைய கிருபை என்றென்றைக்கும், அவருடைய உண்மை தலைமுறை தலைமுறைக்கும் உள்ளது” (சங். 100:4,5).