Appam, Appam - Tamil

ஜூலை 27 – ஜெயம் கொள்ள!

“ஏனெனில், …. வான மண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு” (எபே. 6:12).

ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன்பே, கல்வாரிச்சிலுவையில் சாத்தான் தோற்கடிக்கப்பட்டாலும், இன்னும் அவன் நித்திய அக்கினியில் தள்ளப்படவில்லை. இன்னும் அவன் இந்த உலகத்திலே சுற்றிவந்து ஜனங்களை வஞ்சித்து ஏமாற்றிக்கொண்டேயிருக்கிறான்.

ஆனால் இயேசுகிறிஸ்து இந்த உலகத்தைவிட்டு கடந்துசெல்லுவதற்குமுன்பாக நமக்கு தமது அதிகாரத்தையும், வல்லமையையும், ஆளுகையையும் கொடுத்து, “என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள்; நவமான பாஷைகளைப் பேசுவார்கள்; சர்ப்பங்களை எடுப்பார்கள்; சாவுக்கேதுவான யாதொன்றைக் குடித்தாலும் அது அவர்களைச் சேதப்படுத்தாது; வியாதியஸ்தர்மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள் என்றார்” (மாற். 16:17,18).

நாம் அநேகவிதமான அசுத்த ஆவிகளைத் துரத்தவேண்டியிருக்கிறது. பொய்யின் ஆவிகள், பிரிவினை ஆவிகள், விபச்சார ஆவிகள் போன்ற பல ஆவிகளை நாம் முழங்காலிலே நின்று தேவ வல்லமையோடு யுத்தம்செய்து துரத்தவேண்டியது அவசியமாயிருக்கிறது.

வாழ்க்கையில் எதிர்பாராத நோய்களும், போராட்டங்களும் சூழ்ந்துகொள்ளும்போது, நாம் முழங்காலிலே நின்று இருளின் ஆதிக்கத்தை எதிர்த்து ஜெயிக்கவேண்டியதிருக்கிறது. தனிப்பட்ட ஜெபத்திலே உள்ள ஊக்கமான ஜெபம்தான் அந்தகார வல்லமையை மேற்கொள்ள உதவியாயிருக்கும்.

போதகர் பால்யாங்கிசோ அவர்களுக்கு, ஒரு முறை அவர்மேலேயே ஒரு வெறுப்பு ஏற்பட்டுவிட்டது. “நான் ஊழியம் செய்து என்ன பிரயோஜனம்? இவ்வளவு கஷ்டப்பட்டு உழைப்பதினால் என்ன லாபம்?” என்று அவருடைய உள்ளத்தில் ஒரு பெரிய சோர்வு வந்தது.

அதைத்தொடர்ந்து ஆலயத்தின்மேல் அவருக்கு வெறுப்பு, மூப்பர்கள்மேல் வெறுப்பு, விசுவாசிகளின்மேல் வெறுப்பு வந்துகொண்டே இருந்தது. அப்பொழுது ஜெபிக்கமுடியாதபடி சரீரத்திலே வலியும் வேதனையும் களைப்பும் மேலிட்டது. சாத்தான் கொண்டுவந்த சோதனை என்பதை அவர் அறியாமல் களைப்பு நீங்க தூங்கி இளைப்பாற நினைத்தார்.

ஆனால், அவருடைய மனைவியோ, நீங்கள் குடும்பஜெபம்பண்ணாமல், தனி ஜெபம் செய்யாமல் இப்படி படுத்திருப்பது தவறு என்று சொல்லி அவரை ஜெபிப்பதற்கு அழைத்தார்கள். அவர் ஜெபிக்க ஜெபிக்க தேவனுடைய வல்லமை பலமாய் இறங்கியது. உடனே சாத்தான் ஜன்னல் கண்ணாடியை உடைத்துக்கொண்டு வெளியே ஓடுகிறதை அவர் கண்டார்.

தேவபிள்ளைகளே, நீங்கள் சாத்தானை எதிர்த்து நிற்கவும், உங்களுக்கு வரும் சோர்பையும், போராட்டத்தையும், பிரச்சனைகளையும் மேற்கொள்ளவும், இந்த உலகத்திலே நீங்கள் வெற்றியுள்ளவர்களாய் வாழவும் உங்களுக்கு ஜெபம் தேவை. தனிப்பட்ட ஜெபமும், குடும்ப ஜெபமும் அத்தியாவசியமானவை என்பதை மறந்துபோகாதிருங்கள்.

நினைவிற்கு:- “திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன்” (யோவா. 10:10).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.