No products in the cart.
ஜூலை 27 – ஆவியின் சிந்தை!
“மாம்ச சிந்தை மரணம்; ஆவியின் சிந்தையோ ஜீவனும் சமாதானமுமாம்” (ரோமர் 8:6).
மனிதனுடைய ஆவியிலிருந்து நினைவுகளும், எண்ணங்களும், சிந்தனைகளும் இடைவிடாமல் வந்துகொண்டே இருக்கின்றன. ஒவ்வொருநாளும் எத்தனையோ ஆயிரக்கணக்கான சிந்தனைகள் மனிதனுடைய ஆவியின் திரையிலே ஓடிக்கொண்டே இருக்கின்றன.
ஆனாலும் வெற்றிவாழ்க்கை வாழ விரும்புகிறவர்கள் இந்த சிந்தனைகளை சீர்ப்படுத்துகிறார்கள். “நாங்கள் தர்க்கங்களையும், தேவனை அறிகிற அறிவுக்கு விரோதமாய் எழும்புகிற எல்லா மேட்டிமையையும் நிர்மூலமாக்கி, எந்த எண்ணத்தையும் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படியச் சிறைப்படுத்துகிறவர்களாயிருக்கிறோம்” (2 கொரி. 10:5) என்று வேதம் சொல்லுகிறது.
ஒரு கிணற்றின்மேல் ஆயிரக்கணக்கான பறவைகள் பறந்து செல்லுவதைப் பார்க்கிறோம். சில பறவைகள் அந்த கிணற்றின்மேல் உட்கார்ந்து எச்சமிடுகின்றன. அந்த எச்சத்தில், சில மரங்களின் விதைகள் இருக்குமென்றால், அந்த கிணற்றின் உள்பகுதியிலே அவை விழுந்து, வேர் விட்டு முளைக்கின்றன.
அந்த நேரத்தில் அவைகளை அகற்றாமல்போனால் அவை வளர்ந்து, பெரிதாகி, முடிவிலே கிணற்றையே தூர்த்துப்போட்டுவிடுகின்றன. அதுபோலதான் நம் உள்ளத்தில் அமரும் சிந்தனைகளைக்குறித்து அஜாக்கிரதையாய் இருந்தால், முடிவில் அது நமது ஆவிக்குரிய வாழ்க்கையையே தூர்த்துவிடக்கூடும்.
சிந்தனைகளை நாம் இரண்டு விதமானதாகப் பிரிக்கலாம். ஒன்று, ஆவியானவர் தருகிற பரிசுத்தமான, தூய்மையான சிந்தனைகள். மற்றது, மாம்சத்திலிருந்து வரும் தீய சிந்தனைகள். மனிதனுடைய வாழ்க்கையை ஊன்றிக்கட்டக்கூடிய ஆக்கபூர்வமான சிந்தனைகளும் உண்டு. அவனை அழிவுக்கு நேராய் பாதாளத்தைநோக்கி நடத்திச்செல்லும் மாம்ச சிந்தனைகளும் உண்டு.
எந்த மனிதன் தன்னுடைய சிந்தனைகளை ஆவியானவருக்கு ஒப்புக்கொடுக்கிறானோ, அந்த மனிதனின் சிந்தனை மண்டலத்தை கர்த்தரே ஆளுகை செய்கிறார். பரிசுத்தமுள்ள வெற்றியுள்ள சிந்தனைகளைக் கொண்டுவருகிறார். அந்த சிந்தனைகள் அவனைப் பரிசுத்தத்தின்மேல் பரிசுத்தம் அடைய வழி நடத்துகின்றன. ஆவியின் சிந்தை ஜீவனும் சமாதானமுமாம் (ரோமர் 8:6).
ஆவியானவர் கொண்டுவருகிற சிந்தனை ஏகசிந்தையாய் இருக்கும். அது குடும்பத்தில் ஒருமனப்பாட்டையும், அன்பின் ஐக்கியத்தையும் கொடுத்து அருமையாய் வழிநடத்திச் செல்லும். ஒருபக்கம் அது நம்மை பரலோகத்தோடும், தேவனோடும் இணைக்கிறது. மறுபக்கம் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரோடும் அன்பினால் இணைக்கிறது. ஏக சிந்தனைகள் இருந்தால்தான் குடும்பம் ஆசீர்வாதமானதாய் இருக்கும்.
ஒரு ஏரிலே ஒருபக்கம் மாட்டையும், மறுபக்கம் கழுதையையும் கட்டி உழுதால், அது அந்த மிருக ஜீவன்களுக்கும் கஷ்டம். ஏரை ஓட்டிச்செல்லுகிறவனுக்கும் கஷ்டம். ஆகவே நீங்கள் அந்நிய நுகத்தில் பிணைக்கப்படாதிருங்கள்.
தேவபிள்ளைகளே, சிந்தனைகளில் ஐக்கியம் இருந்தால்தான் ஒருவருக்கொருவர் இசைந்து நடப்பீர்கள். ஒருவருக்கொருவர் ஜெபிப்பீர்கள். ஒருவரையொருவர் தாங்குவீர்கள்.
நினைவிற்கு:- “கிறிஸ்து நமக்காக மாம்சத்திலே பாடுபட்டபடியால், நீங்களும் அப்படிப்பட்ட சிந்தையை ஆயுதமாகத் தரித்துக்கொள்ளுங்கள்” (1 பேதுரு 4:1).