No products in the cart.
ஜூலை 25 – பகிர்ந்துகொள்ளுங்கள்!
“கிறிஸ்துவினுடைய அன்பு எங்களை நெருக்கி ஏவுகிறது; ஏனென்றால், எல்லாருக்காகவும் ஒருவரே மரித்திருக்க, எல்லாரும் மரித்தார்கள் என்றும்; பிழைத்திருக்கிறவர்கள் இனித் தங்களுக்கென்று பிழைத்திராமல், தங்களுக்காக மரித்து எழுந்தவருக்கென்று பிழைத்திருக்கும்படி, அவர் எல்லாருக்காகவும் மரித்தாரென்றும் நிதானிக்கிறோம்” (2 கொரி. 5:14,15).
தேவபிரசன்னத்துக்கும், பகிர்ந்துகொள்ளுதலுக்கும் ஒரு இணைப்பு இருக்கிறதை உணருகிறேன். சில வேளைகளில் நம்முடைய சாட்சிகளையும், அன்பையும், நன்மையான செய்கைகளையும் பகிர்ந்துகொள்ளுகிறோம். அதன் பின்பு ஜெபிக்க ஆரம்பிக்கும்போது ஒரு தெய்வீக சந்தோஷத்தோடு கர்த்தருடைய அன்பின் பிரசன்னம் நம்மை அரவணைத்துக்கொள்ளுகிறதை உணர முடியும்.
ஒரு நாள் என்னுடைய தகப்பனார், சாலையிலே தனிமையாக நடந்து சென்றுகொண்டிருக்கும்போது அவருக்கு எதிரிலே ஒருவர் வந்துகொண்டிருந்தார். அவர் என் தகப்பனாரின் பக்கமாய் திரும்பிப் பார்த்து, “அருகிலே ஏதாகிலும் மலிவான உணவகம் இருக்கிறதா? உயர்ந்த உணவகத்துக்கு செல்ல என்னால் முடியாது” என்றார்.
அவர் சொன்னதைக் கேட்டதும் அவரிடத்தில் போதிய பணம் இல்லை என்பதை என் தகப்பனார் உணர்ந்துகொண்டார். ஆகவே அவருக்கு உதவவேண்டும் என்று ஏவப்பட்டார். அவர் தன்னிடம் இருந்த நூறு ரூபாயை அவரிடத்தில் கொடுத்து, இதை வைத்துக்கொள்ளுங்கள். அருகில் ஒரு பெரிய உணவகம் இருக்கிறது. சந்தோஷமாய் சாப்பிட்டுவிட்டுச் செல்லுங்கள் என்று சொன்னார். அவர் யார் என்று என்னுடைய தகப்பனாருக்குத் தெரியாது. அவருக்கும் பணம் கொடுத்த என் தகப்பனார் யார் என்று தெரியாது.
என் தகப்பனார் வீட்டுக்கு வந்து ஜெபம்பண்ண ஆரம்பித்தபோது, அவரை அறியாத ஒரு சந்தோஷம் அவரில் நிரம்பி வழியச்செய்தது. அந்த நாள் முழுவதும் தேவனுடைய விசேஷமான கிருபை அவரைத் தாங்கியது. “மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள்” (மத். 25:40) என்று ஆண்டவர் அவரோடு பேசுவதை உணர்ந்து ஆனந்தக்கண்ணீர் சொரிந்தார்.
சில வேளைகளில் கர்த்தர் உங்களுக்குச் செய்த நன்மைகளை இன்னொருவரோடு பகிர்ந்துகொள்ளும்போது ஒரு பெரிய சந்தோஷத்தையும், தேவனுடைய பிரசன்னத்தையும் உங்களால் உணர முடியும். வாலிபர்கள் கிராம ஊழியத்திற்கு சென்றுவிட்டு மாலையிலே திரும்பி வந்து ஆலயத்திற்கு முன்பாக பாட்டுப் பாடி கர்த்தரை துதித்துக்கொண்டிருப்பதைப் பார்த்திருக்கிறேன்.
“ஜெயம் ஜெயம் அல்லேலூயா ஜெயம் ஜெயம், எப்போதும், இயேசு நாதர் நாமத்திற்கு ஜெயம் ஜெயம், எப்போதும்” என்று அந்தப் பாடலைப் பாடிக் கர்த்தரைத் துதித்து மகிமைப்படுத்தும்போது, தேவனுடைய பிரசன்னம் அளவில்லாமல் இறங்கிவர, அவர்கள் நடனமாடி களிகூருவதை நான் பார்த்திருக்கிறேன்.
தேவபிள்ளைகளே, கர்த்தருடைய பிரசன்னம் உங்களில் நிரம்பி வழியும்படி உங்களுடைய அன்பையும், சாட்சியையும், மற்றவர்களோடு தவறாமல் பகிர்ந்துகொள்ளுங்கள்.
நினைவிற்கு:- “நாம் தேவனுடைய பிள்ளைகளென்று அழைக்கப்படுவதினாலே பிதாவானவர் நமக்குப் பாராட்டின அன்பு எவ்வளவு பெரிதென்று பாருங்கள்; உலகம் அவரை அறியாதபடியினாலே நம்மையும் அறியவில்லை” (1 யோவா. 3:1).