Appam, Appam - Tamil

ஜூலை 24 – துஷ்டமிருகங்களுடனே!

“நான் எபேசுவிலே துஷ்டமிருகங்களுடனே போராடினேனென்று மனுஷர் வழக்கமாய்ச் சொல்லுகிறேன்” (1கொரி. 15:32).

நம்முடைய போராட்டங்களிலே துஷ்டமிருகங்களுடனேகூட நமக்குப் போராட்டம் இருக்கிறது. துஷ்டமிருகங்கள் என்றால் கரடியோ, சிங்கமோ, புலியோ, ஓநாயோ இல்லை. இங்கே ‘துஷ்டமிருகங்கள்’ என்று அழைக்கப்படுவது துர்உபதேசங்களையே.

ஆதி அப்போஸ்தலர் நாட்களில் ஏராளமான துர்உபதேசங்களிருந்தன. சதுசேயர் என்ற ஒரு கூட்டத்தார் உயிர்த்தெழுதல் இல்லை, நரகம் இல்லை, பிசாசு இல்லை என்றெல்லாம் பேசினார்கள். இன்னும் ஒரு கூட்டத்தார் பழைய ஏற்பாட்டிலுள்ள விருத்தசேதனம், சடங்காச்சாரங்கள், பாரம்பரியங்களையெல்லாம் வலியுறுத்தினார்கள். இன்னும் சிலர் தெய்வீகத்தை ஏற்றுக்கொள்ளவில்லை.

அப். பவுல் இவ்விதமான துஷ்ட மிருகங்களுடனே போராடவேண்டியிருந்தது. துர்உபதேசத்தை ஏன் துஷ்டமிருகம் என்று வேதம் சொல்லுகிறது? ஆம், அந்தி கிறிஸ்துவினுடைய ஒரு பெயர் துஷ்டமிருகம் ஆகும். வெளிப்படுத்தின விசேஷத்தில் இந்த மிருகத்தைக்குறித்து அதிகமாய் எழுதப்பட்டிருக்கிறது.

வேதம் சொல்லுகிறது, “சமுத்திரத்திலிருந்து ஒரு மிருகம் எழும்பிவரக் கண்டேன்; …. அதின் தலைகளின்மேல் தூஷணமான நாமமும் இருந்தன…. வலுசர்ப்பமானது தன் பலத்தையும் தன் சிங்காசனத்தையும் அதற்குக் கொடுத்தது” (வெளி. 13:1,2). அன்று கடற்கரை மணலில் இருந்து மிருகம் வந்தது போல, இன்று பலவகையான துர்உபதேசங்களும், தவறான போதனைகளும் ஆட்டுத்தோலை போர்த்திக்கொண்டு ஓநாய் வருவதைப்போல நம் தேசத்திற்குள் வந்துவிட்டன.

இந்த துர்உபதேசங்களைக்குறித்து அப். யோவான் “பிரியமானவர்களே, உலகத்தில் அநேகக் கள்ளத்தீர்க்கதரிசிகள் தோன்றியிருப்பதினால், நீங்கள் எல்லா ஆவிகளையும் நம்பாமல், அந்த ஆவிகள் தேவனால் உண்டானவைகளோ என்று சோதித்தறியுங்கள். மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணாத எந்த ஆவியும் தேவனுடையதல்ல; வருமென்று நீங்கள் கேள்விப்பட்ட அந்திக்கிறிஸ்துவினுடைய ஆவி அதுவே, அது இப்பொழுதும் உலகத்தில் இருக்கிறது” (1 யோவா. 4:1,3) என்று எச்சரிக்கிறார்.

நாம் இந்த கள்ள உபதேசங்களுக்கு விரோதமாய் போராடாவிட்டால், இந்த உபதேசங்கள் மிருகங்களைப்போல பெலன்கொண்டு அநேகரை வஞ்சித்துவிடக்கூடும். ஓநாய்கள்போல இந்த உபதேசங்கள் புறப்பட்டு வந்து, இளம் கிறிஸ்தவர்களை மயக்கிக்கொண்டு சென்றுவிடுகின்றன. ஆவியில் பெலவீனர்களையும் தள்ளாடுகிறவர்களையும் வழிவிலகிப் போகப்பண்ணிவிடுகின்றன.

தேவபிள்ளைகளே, நீங்கள் ஆவிகளை பகுத்துணர்கிற வரத்தை கர்த்தரிடத்திலிருந்து கேட்டுப் பெற்றுக்கொள்ளுவீர்களென்றால், அந்திகிறிஸ்துவினுடைய ஆவிகளை துரத்துவதற்கு அது ஏதுவாயிருக்கும். எந்த உபதேசங்களையும் வேதவசனத்தின் வெளிச்சத்தில் ஆராய்ந்துபாருங்கள். எந்த அனுபவங்களும் வேதத்துக்கு ஒப்பாய் இருக்கிறதா என்பதை சீர்தூக்கிப்பாருங்கள்.

நினைவிற்கு:- “நீங்கள் ஒரே ஆவியிலே உறுதியாய் நின்று …. எவ்விதத்திலும் நீங்கள் கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்குப் பாத்திரராகமாத்திரம் நடந்துகொள்ளுங்கள்” (பிலி.1:27).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.