No products in the cart.
ஜூலை 22 – சரீர சுகம்!
“உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை” (ரோம. 12:1).
தேவனுடைய பிரசன்னத்தை நம்முடைய வாழ்க்கையிலே கொண்டுவருவதற்கு நம்முடைய சரீரம் ஒத்துழைக்கவேண்டும். சரீரத்திலே நல்ல சுகமும், ஆரோக்கியமும் இருக்கவேண்டும். நம்முடைய சரீரத்தை சரியாகப் பேணாமல் உடல் நலத்தைக் கெடுத்து உதாசீனப்படுத்தினால், அதனால் நம்முடைய ஆத்தும வாழ்வும்கூட பாதிக்கப்படும்.
நம் சரீரத்தில்தான் ஆத்துமா குடிகொண்டிருக்கிறது. சரீரமும், ஆத்துமாவும் ஒன்றுக்கொன்று இணைந்ததுதான். ஒன்றையொன்று பாதிக்கக்கூடியது. பல நூற்றாண்டுகளாகவே இந்தியாவிலுள்ள முனிவர்களும், சந்நியாசிகளும் தங்களுடைய சரீரத்தை ஆன்மாவின் விரோதியாக எண்ணினார்கள்.
ஆனால், கிறிஸ்தவ மார்க்கத்திலோ நம்முடைய சரீரத்தை ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று கர்த்தர் சொல்லியிருக்கிறார். கர்த்தருக்காக உழைக்கவும், குடும்பத்தின் தேவைகளைச் சந்திக்கவும் நமது சரீரத்திற்கு ஜீவன் தேவை. இயேசுகிறிஸ்து சொன்னார்: “நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன்” (யோவா. 10:10).
நம்முடைய சரீரத்தின் மூலமாகவே தேவனுடைய பிரசன்னம் வெளிப்படமுடியும். நம்மைக் காண்கிறவர்கள் நம்மிலே கிறிஸ்துவைக் காணும்படி நம்முடைய சரீரத்தாலும் கிறிஸ்துவை மகிமைப்படுத்தவேண்டும். நம்முடைய சரீரத்தில்தான் கிறிஸ்துவானவர் மகிமையின் நம்பிக்கையாக வாசம்பண்ணுகிறார்.
இந்த மண்பாண்டத்தில்தான் நாம் மகிமையின் ஆவியானவரைப் பெற்றிருக்கிறோம். எந்த ஒரு மனுஷன் தன்னுடைய சரீரம் தேவன் தங்குகிற ஆலயம் என்பதை உணருகிறானோ, அவன் நிச்சயமாகவே தன்னுடைய சரீரத்தை நன்றாகப் பேணிப்பாதுகாப்பான்.
இயேசுகிறிஸ்து இந்த பூமிக்கு வருவதற்கு அவருக்கு ஒரு சரீரம் தேவைப்பட்டது. ஆகவே பிதாவானவர் அவருக்கு ஒரு சரீரத்தை ஆயத்தப்படுத்தினார். “ஆகையால் அவர் உலகத்தில் பிரவேசிக்கும்போது: பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பவில்லை, ஒரு சரீரத்தை எனக்கு ஆயத்தம்பண்ணினீர்” (எபி. 10:5) என்றார். அவருடைய சரீரம் பூமியிலே ஊழியம் செய்வதற்கும், மனதுருக்கத்தோடு தேவையுள்ள மக்களை நோக்கிச் செல்லுவதற்கும் அவருக்கு மிகவும் பிரயோஜனமாயிருந்தது. முடிவாக, அந்த சரீரத்தை குற்றநிவாரணபலியாக நமது மீட்புக்கென்று அர்ப்பணித்தார்.
உங்களுடைய சரீரத்தைப் பேணுங்கள். உங்களுக்குப் போதுமான இளைப்பாறுதல் தேவை. ஆனால், அது கனநித்திரையின் ஆவியினால் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது. உங்களுக்கு நல்ல உணவு தேவை. ஆனால், அது பெருந்தீனியாக இருந்துவிடக்கூடாது. உங்களுடைய சரீரத்துக்கு நல்ல உடற்பயிற்சி தேவை. ஆனால் அதற்காக பலமணி நேரங்களை வீணாக்கிவிடக்கூடாது. தேவபிள்ளைகளே, சரீரத்தைக் கவனியுங்கள்.
நினைவிற்கு:- “கிறிஸ்து என் சரீரத்தினாலே மகிமைப்படுவாரென்று எனக்கு உண்டாயிருக்கிற வாஞ்சைக்கும் நம்பிக்கைக்கும் தக்கதாய் அப்படி முடியும்” (பிலி. 1:20).