No products in the cart.
ஜூலை 19 – நேரத்தைப் பயன்படுத்து!
“பகற்காலமிருக்கும்மட்டும் நான் என்னை அனுப்பினவருடைய கிரியைகளைச் செய்யவேண்டும்; ஒருவனும் கிரியை செய்யக்கூடாத இராக்காலம் வருகிறது” (யோவா. 9:4).
காலத்தின் அருமையை இயேசு நன்றாய் அறிந்திருந்தார். பூமியிலே அவருடைய ஊழியத்தின் நாட்கள் மூன்றரை வருட காலம்தான். ஆனால், அந்த மூன்றரை ஆண்டு காலத்திலேயே ஏராளமான சீஷர்களை பழக்குவித்து பயிற்றுவித்தார்.
இயேசு சொன்னார், “பகலுக்குப் பன்னிரண்டு, மணிநேரம் இல்லையா? ஒருவன் பகலிலே நடந்தால் அவன் இந்த உலகத்தின் வெளிச்சத்தைக் காண்கிறபடியினால் இடறமாட்டான்” (யோவா. 11:9).
இந்த உலகத்தில் நாம் இடறாமல் நடப்பதற்கு கர்த்தர் வெளிச்சத்தைத் தந்திருக்கிறார். ஆவிக்குரிய ஜீவியத்தில் இடறாமல் நடப்பதற்கு நமக்கு பரிசுத்த ஆவியைத் தந்திருக்கிறார். வெளிச்சம் இருக்கும்போதே காலத்தை நாம் ஆதாயப்படுத்திக்கொள்ளவேண்டும் அல்லவா?
கிராமப்புறங்களிலே, அநேக கிறிஸ்தவ வாலிபர்களும், சகோதரிமார்களும் தங்கள் நேரத்தை எப்படியெல்லாம் வீணடிக்கிறார்கள் என்பதை அறியும்போது வேதனையாயிருக்கிறது. சகோதரிமார் கதைப்புத்தகங்களையும், பிரயோஜனமற்ற பத்திரிகைகளையும் வாசித்து நேரத்தை வீணடிக்கிறார்கள். போன நேரம் போனதுதான். ஒருபோதும் அது திரும்ப வராது. அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வராதல்லவா?
தேவபிள்ளைகளே, நீங்கள் உங்கள் ஒவ்வொரு மணி நேரத்தைக்குறித்தும் திட்டமிடுங்கள். உங்கள் வாழ்க்கைக்கு ஒரு நோக்கம் இருக்கட்டும். உங்கள் நேரத்தை நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ளத் தீர்மானியுங்கள். ஒவ்வொரு நாளும் அதிகாலையில் ‘இது கர்த்தர் உண்டுபண்ணின நாள்’ என்று சொல்லி, கர்த்தரைத் துதித்து அந்த நாளுக்காக தேவனில் களிகூருங்கள்.
வேதம் சொல்லுகிறது: “அவர் (இயேசு) அதிகாலையில் இருட்டோடே எழுந்து புறப்பட்டு, வனாந்தரமான ஓரிடத்திற்குப்போய், அங்கே ஜெபம்பண்ணினார்” (மாற். 1:35). சங்கீதக்காரரும்கூட தேவனை சந்திக்கும்படி அதிகாலையிலே எழுந்திருந்தார். அவர் சொல்லுகிறார், “அதிகாலையில் நான் எழுந்து சத்தமிட்டேன், உம்முடைய வசனத்துக்குக் காத்திருக்கிறேன்” (சங். 119:147). “அதிகாலையில் உமது கிருபையைக் கேட்கப்பண்ணும், உம்மை நம்பியிருக்கிறேன், நான் நடக்கவேண்டிய வழியை எனக்குக் காண்பியும், உம்மிடத்தில் என் ஆத்துமாவை உயர்த்துகிறேன்” (சங். 143:8).
காலையில் தேவசமுகத்தில் காத்திருக்கும்போது, அந்த நாள் முழுவதையும் பயன்படுத்திக்கொள்ளும் வழிமுறைகளை ஆவியானவர் உங்களுக்குச் சொல்லித்தருவார். சில வேளைகளில் சில காரியங்களுக்காக ஓரிடத்தில் போய் காத்திருக்கவேண்டிய நிலையோ, தொடர்ந்து பயணிக்கும் நிலையோ ஏற்படலாம்.
அந்த நேரத்தையும்கூட திட்டமிட்டு பயன்படுத்துங்கள். கைகளிலே ஆவிக்குரிய புத்தகங்களை வைத்துக்கொள்ளுங்கள். கல்வாரியை நோக்கிப்பார்த்து தியானித்துக்கொண்டேயிருங்கள். தேவபிள்ளைகளே, அப்பொழுது நித்தியமான ஆசீர்வாதங்களைப் பெறுவீர்கள்.
நினைவிற்கு:- “நாங்கள் ஞான இருதயமுள்ளவர்களாகும்படி, எங்கள் நாட்களை எண்ணும் அறிவை எங்களுக்குப் போதித்தருளும்” (சங். 90:12).