No products in the cart.
ஜூலை 19 – ஆவியானவரின் வரங்கள்!
“உம்மிடத்திலுள்ள ஆவியின் வரம் எனக்கு இரட்டிப்பாய்க் கிடைக்கும்படி வேண்டுகிறேன்” (2 இராஜா. 2:9).
எலிசாவும் கேயாசியும் ஒரே காலத்தில் வாழ்ந்தவர்கள். இரண்டுபேருமே கர்த்தருக்கு முழு நேரமாய் ஊழியம் செய்தார்கள். எலியாவுக்கு எப்படி எலிசா இருந்தாரோ, அப்படியே எலிசாவுக்கு கேயாசி இருந்தார். ஆனால், இரண்டுபேருடைய பசி தாகத்திற்குமிடையே ஏராளமான வித்தியாசங்கள் இருந்தன.
எலிசா ஆவியின் வரங்கள்மேல் மிகுந்த பசிதாகமுடையவராய் இருந்தார். அதற்காகவே எலியாவை நிழல்போல பின்பற்றவும் செய்தார். ஏறக்குறைய பதினான்கு ஆண்டுகள் எலியாவுக்கு அடிமையைப் போலவும், வேலைக்காரனைப்போலவும், சீஷனைப் போலவும் ஊழியம் செய்துவந்தார். எப்படியாயினும் ஆவியின் வரங்களைப் பெற்றுக்கொள்ளவேண்டுமென்ற பசிதாகம் அவருக்கு அதிகமாக இருந்தது.
ஆனால் அந்த பசிதாகம் எலிசாவைப் பின்பற்றின கேயாசிக்கு இருக்கவில்லை. அவர் பண ஆசையோடுகூட நாகமானின் இரதத்தைப் பின்தொடர்ந்து ஓடினார். அவருடைய உள்ளத்தின் வாஞ்சையெல்லாம் வயல்களை வாங்கவேண்டும் என்பதிலும், ஒலிவத்தோப்புகளை பெற்றுக்கொள்ளவேண்டும் என்பதிலுமே இருந்தது. இதன் காரணமாக, எஜமான் சொன்னதாகப் பொய் சொல்லி பொன்னையும், வெள்ளியையும், மாற்று வஸ்திரங்களையும் நாகமானிடத்தில் பெற்றுக்கொண்டார். இதனால் கர்த்தருடைய சாபம் அவர்மேல் வந்தது.
நீங்கள் எதை பசிதாகத்தோடு விரும்புகிறீர்களோ, அதைத்தான் பெற்றுக்கொள்ள முடியும். அதைமட்டுமே கர்த்தர் உங்களுக்கு அருளிச்செய்வார். உங்களுக்கு கொடுத்திருக்கிற அனுபவங்கள் போதும் என்று சொல்லுவீர்களானால் உங்களுடைய ஆவிக்குரிய வளர்ச்சி அத்துடன் நின்றுபோய்விடும்.
அதே நேரம், “தேவனே, நான் உமக்காகப் பெரிய காரியங்கள் செய்யவேண்டும். என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்த கிரியைகளைத் தானும் செய்வான், அவைகளைப்பார்க்கிலும் பெரிய காரியங்களையும் செய்வான் என்று சொன்னீரே, நான் ஆத்தும ஆதாயம் செய்யும்படி ஆவியின் வரங்களால் என்னை நிரப்பும்” என்று ஜெபித்துக் கேளுங்கள். நிச்சயமாகவே கர்த்தர் ஆவியின் வரங்களினாலும், வல்லமையினாலும் உங்களை அலங்கரிப்பார்.
அன்றைக்கு எலிசாவின் பசிதாகத்திற்கு எத்தனையோ சோதனைகள் வந்தன. தான் மீண்டும் பயிர்த்தொழிலிலே ஈடுபட்டு ஏர் உழுவதில்லை என்று அவர் திட்டமாய்த் தீர்மானித்தார். அவர் ஏர் முட்டுகளினால் காளையைச் சமைத்து விருந்து கொடுத்துவிட்டு தகப்பனை முத்தம்செய்து ஊழியத்திற்கு முழுவதுமாய்த் திரும்பினார்.
எலிசாவை இன்னும் திடப்படுத்தவேண்டும் என்பதற்காக, “நீ இங்கேயே இரு. கர்த்தர் என்னை கில்கால் அனுப்புகிறார், பெத்தேல், யோர்தான் அனுப்புகிறார்” என்றெல்லாம் எலியா சொன்னபோதும்கூட, வரங்கள்மீது பசி தாகமுடைய எலிசாவோ, எலியாவைவிட்டுப் பிரியவே இல்லை. முடிவாக தன் வாஞ்சையின்படியே இரண்டு மடங்கு ஆவியின் வரத்தைப் பெற்றுக்கொண்டார்.
தேவபிள்ளைகளே, ஆட்டுக்குட்டியானவர் எங்கே போனாலும் அவரையே பின்பற்றிச் செல்லும்பொழுது அவரில் கிரியை செய்த ஆவியின் வரங்கள் உங்களிலும் கிரியை செய்யுமல்லவா? கர்த்தர் மனதுருகி அந்த கிருபையின் வரங்களை உங்களுக்குத் தராமல் இருப்பாரோ?
நினைவிற்கு:- “அவர் உன்னதத்திற்கு ஏறி, சிறைப்பட்டவர்களைச் சிறையாக்கி, மனுஷர்களுக்கு வரங்களை அளித்தார்” (எபே. 4:8).