No products in the cart.
ஜூலை 18 – உண்மையான அறிக்கை!
“ஐயரே, இராமுழுவதும் நாங்கள் பிரயாசப்பட்டும் ஒன்றும் அகப்படவில்லை” (லூக். 5:5).
ஆழங்களுக்குச் சென்று கர்த்தருடைய அற்புதங்களையும், அதிசயங்களையும் காணவேண்டுமா? முதலாவது கர்த்தரிடத்தில் உங்களுடைய உண்மையான நிலைமையை அறிக்கையிட்டு உங்களை சமர்ப்பியுங்கள்.
எப்பொழுது கர்த்தரிடத்தில் உங்களுடைய இயலாமையை ஒப்புக்கொள்ளுகிறீர்களோ, அப்பொழுதுதான் கர்த்தருடைய கரம் உங்கள் வாழ்க்கையில் குறுக்கிட ஆரம்பிக்கும். பேதுரு தன்னுடைய சொந்த முயற்சியிலே தோல்வியடைந்ததை மனந்திறந்து இயேசுவிடம் பகிர்ந்துகொண்டதை சிந்தித்துப்பாருங்கள்.
பேதுரு மீன் பிடிக்கிறதையே தன்னுடைய பரம்பரைத் தொழிலாகக்கொண்டவர். அவரே தன்னுடைய இயலாமையை, வெறுமையை, தோல்வியை மனந்திறந்து கர்த்தரிடத்தில் அறிக்கையிடுகிறதைப் பாருங்கள். இராமுழுவதும் பிரயாசப்பட்டேன் என்கிறார். இராத்திரி நேரம்தான் மீன் பிடிப்பதற்கு ஏற்றவேளை. அந்த நாட்களில் மீன் பிடிக்கிறவர்கள் இராத்திரியையே அப்பணிக்குத் தெரிந்துகொண்டார்கள் (யோவான் 21:3).
பேதுரு மனந்திறந்து தன்னுடைய தோல்வியை கிறிஸ்துவிடம் அறிக்கையிடும்போது இயேசுவை அன்போடு ‘ஐயரே’ என்று அழைக்கிறார். ஒரு எஜமானிடத்தில் வேலைக்காரன் பேசுவதைப்போல தன்னைத் தாழ்த்திப் பேசுகிறதை கவனியுங்கள். ஆங்கில வேதாகமத்தில் ஐயரே என்ற வார்த்தைக்கு ‘தலைவரே’ என்றும், ‘எஜமானனே’ என்றும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஆம், கிறிஸ்துவே நமக்குப் போதகராயும், எஜமானருமாயும் இருக்கிறார்.
வேதம் சொல்லுகிறது, “நீங்களோ ரபீ என்றழைக்கப்படாதிருங்கள்; கிறிஸ்து ஒருவரே உங்களுக்குப் போதகராயிருக்கிறார், நீங்கள் எல்லாரும் சகோதரராயிருக்கிறீர்கள்” (மத். 23:8)
ஆழமான கிறிஸ்தவ வாழ்க்கை என்பது கிறிஸ்துவையே எல்லாவற்றுக்கும் வழிகாட்டியாக முன்வைப்பது ஆகும். நாம் பூரணமாக நம்பி பின்பற்றக்கூடிய அற்புதமான ஒரே மாதிரி இயேசு கிறிஸ்துதான். ‘ஐயரே’ என்று அழைப்பதன் உண்மையான அர்த்தம் ‘நீர் உயர்ந்தவர். உன்னதமானவர், எனக்கு வழி காட்டக்கூடியவர், நான் உம்மால் சிருஷ்டிக்கப்பட்டவன், நீரே என்னை சிருஷ்டித்தவர்’ என்பதாகும்.
பேதுருவிடம் பேசுகிறவர் அந்த சமுத்திரத்தையே சிருஷ்டித்தவர். மீன்கள் இல்லாத இடத்திலே புதிய மீன்களை சிருஷ்டிக்க வல்லமையுள்ளவர். மீன் வாயிலிருந்து வெள்ளிப்பணத்தை எடுத்து அற்புதம் செய்யக்கூடியவர்.
பேதுருவின் அறிக்கையிலே அவருடைய நிர்ப்பாக்கியமான நிலைமையை காண்பதுடன், கிறிஸ்துவுக்கு எவ்வளவு உயர்ந்த நிலையை தன் உள்ளத்தில் கொண்டிருந்தார் என்பதையும் நாம் அறிகிறோம். தேவபிள்ளைகளே, அப்படியே நீங்களும் உங்களுடைய எல்லா காரியங்களையும் கர்த்தரிடத்திலே மனந்திறந்து சொல்லுவீர்களாக. அவர் நீங்கள் நடக்க வேண்டிய வழியை உங்களுக்குப் போதித்து வழிநடத்துவார். ஆம்! அவர் பெரியவர், வல்லமையுள்ளவர்!
நினைவிற்கு:- “கப்பலேறி, கடல்யாத்திரைபண்ணி, திரளான தண்ணீர்களிலே தொழில் செய்கிறார்களே, அவர்கள் கர்த்தருடைய கிரியைகளையும் ஆழத்திலே அவருடைய அதிசயங்களையும் காண்கிறார்கள்” (சங். 107:23,24).