No products in the cart.
ஜூலை 17 – சத்தமிட்டுக் கெம்பீரி!
“சீயோனில் வாசமாயிருக்கிறவளே, நீ சத்தமிட்டுக் கெம்பீரி; இஸ்ரவேலின் பரிசுத்தர் உன் நடுவில் பெரியவராயிருக்கிறார்” (ஏசா. 12:6).
கர்த்தர் பெரியவராயிருக்கிறார். அவர் சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறார். அவர் நம்முடைய தகப்பனாயிருக்கிறார். ஆகவே நீங்கள் சத்தமிட்டுக் கெம்பீரியுங்கள். எக்காளத்தினால் ஆர்ப்பரியுங்கள். தேவனைப் போற்றிப்பாடுங்கள். கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்.
பெரிய தேவனை நாம் நம்முடைய தஞ்சமாகவும், தாபரமாகவும், அடைக்கலமாகவும் கொண்டிருக்கிறோம். ‘எங்கள் தேவன் எல்லா தெய்வங்களைப்பார்க்கிலும் பெரியவர். ஆகவேதான் அவருக்குக் கட்டும் ஆலயமும் பெரியதாயிருக்கும்’ என்று சாலொமோன் சொன்னார். அப்படியே பெரிய மகிமையான ஆலயத்தைக் கர்த்தருக்கென்று கட்டி, ஆலயப் பிரதிஷ்டையின்போது சத்தமிட்டுக் கெம்பீரித்தார்கள். எக்காளங்களை முழக்கினார்கள். கர்த்தர் பெரியவர், அவர் கிருபை என்றுமுள்ளது என்று பாடிப் போற்றினார்கள். தேவனுடைய மகிமை அந்த ஆலயத்திற்குள் இறங்கியது.
இன்றைக்கும் கர்த்தர் பெரியவராய் நமக்குள்ளே வாசம் செய்கிறார். நம்முடைய எல்லாப் பிரச்சனைகளைப் பார்க்கிலும் அவர் பெரியவர். வியாதியின் மத்தியிலே நீங்கள் நம்பும் வைத்தியர்களைப்பார்க்கிலும் இயேசு பெரியவர். உங்களை எதிர்த்துவரும் தீய மனிதர்கள் எவ்வளவு பெரிய கோலியாத்துகளாய் இருந்தாலும் அவர்களைவிட உங்களுக்காக யுத்தம்செய்கிற தேவன் பெரியவர்.
யார் யாருடைய கண்களிலே கர்த்தர் பெரியவர் என்கிற தரிசனம் இருக்கிறதோ, அவர்கள் பார்வோன் போன்றவர்களைக்குறித்து கவலைப்படமாட்டார்கள். பயங்கரமான சிவந்த சமுத்திரத்தையும் கடந்துசெல்வார்கள். அவர்களுக்கு முன்பாக மரண நதியாகிய யோர்தான் பின்னிட்டுத் திரும்பும். எரிகோ மதில்கள்கூட நொறுங்கி விழும்.
நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் கர்த்தருடைய சமுகத்தில் மனம்மகிழ்ந்து களிகூர்ந்து சத்தமிட்டுக் கெம்பீரிக்கவேண்டியதுதான். ‘சத்தமிட்டுக் கெம்பீரி’ என்று கர்த்தர் சொல்லுகிறார். அதன் அர்த்தம் என்ன? கர்த்தரை ஆராதனைசெய்து கெம்பீரத்துடன் அவரைப் பாடிப்போற்றுங்கள். நீங்கள் கோழையைப்போல வாழவேண்டியதில்லை. தலைகுனிந்து நடக்கவேண்டியதில்லை. வாயை மூடிக்கொண்டு மவுனமாக இருக்கவேண்டியதில்லை. தகப்பனுடைய பிரசன்னத்தில் பிள்ளைகள் மகிழ்ந்து களிகூருவதுபோல தேவனுடைய சமுகத்தில் மகிழ்ந்து களிகூருங்கள். அவருக்கு ஆராதனை செய்யுங்கள்.
ஒரு நாள் ஏசாயா கர்த்தரைப் பெரியவராய் கண்டார். ஆண்டவர் உயரமும் உன்னதமுமான சிங்காசனத்தில் வீற்றிருக்கிறதை தரிசித்ததும் அவருடைய உள்ளம் சந்தோஷப்பட்டது. கர்த்தருக்கு, வானம் சிங்காசனம்; பூமி பாதபடி. அப்படிப்பட்ட ஆண்டவருக்கு முன்பாக நின்ற கேராபீன்களும் சேராபீன்களும் அமைதியாய் நிற்கவில்லை. “சேனைகளின் தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர். பூமி அனைத்தும் அவருடைய மகிமையினால் நிரம்பியிருக்கிறது” என்று சத்தமிட்டு கெம்பீரத்துடன் சொன்னார்கள்.
தேவபிள்ளைகளே, உங்களுக்குள்ளே அந்த ராஜாவின் ஜெயகெம்பீரம் இருக்கட்டும். உங்கள் குடும்பத்தில் இரட்சிப்பின் கெம்பீர சத்தம் இருக்கட்டும். சபையின் ஆராதனையிலே கர்த்தரைப் பாடித்துதிக்கும் ஆராதனை நேரம் அதிகமாய் இருக்கட்டும். அப்பொழுது கர்த்தர் பெரியவராய் எழுந்தருளி வல்லமையான காரியங்களைச் செய்தருளுவார்.
நினைவிற்கு:- “தேசமே, பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்” (யோவே. 2:21).
