Appam, Appam - Tamil

ஜூலை 16 – பராக்கிரமசாலியான தேவன்!

“கர்த்தரோ பயங்கரமான பராக்கிரமசாலியாய் என்னோடு இருக்கிறார், ஆகையால் என்னைத் துன்பப்படுத்துகிறவர்கள் மேற்கொள்ளாமல் இடறுவார்கள்” (எரே. 20:11).

கர்த்தர் பராக்கிரமசாலியானவர். எரேமியா தீர்க்கதரிசி அவரை பயங்கரமான பராக்கிரமசாலி என்று குறிப்பிடுகிறார். ஆம். நம்மீது அவர் அன்புள்ளவராயிருந்தாலும், நம்முடைய விரோதிகளுக்கு எதிராக அவர் யுத்தம்செய்யும்போது பலத்த பராக்கிரமசாலிதான். ஆகவே, நம்மைத் துன்பப்படுத்துகிறவர்கள் ஒருபோதும் நம்மை மேற்கொள்வதேயில்லை.

கர்த்தரோ எப்போதும் நம் பட்சத்தில் நம்மோடு இருக்கிறார். இன்று கர்த்தர் நம்மைப் பார்த்து, ‘மகனே, இதுவரை உன்னைத் துன்பப்படுத்தினவர்கள் இனி தொடர்ந்து உன்னைத் துன்பப்படுத்திக்கொண்டேயிருக்க முடியாது. நான் பலத்த பராக்கிரமசாலியாக உன்னோடுகூட இருக்கிறேன்’ என்கிறார்.

எனக்கு ஒரு சகோதரனைத் தெரியும். அவர் வெளிதேசத்தில் பணியாற்றி, செல்வந்தனாய் இந்தியாவிலுள்ள தன் சொந்த ஊருக்குத் திரும்பி வந்தார். அவர் செல்வந்தனாயிருந்ததினால் அவரைக் காரணமில்லாமல் அநேகர் பகைத்தார்கள். அவர் புதிதாகக் கட்டிய வீட்டில் வாழக்கூடாதபடி செய்வினை செய்தார்கள். ஆனால், அவரோ கர்த்தரை உறுதியாய்ப் பற்றிப் பிடித்துக்கொண்டார். செய்வினை செய்தவர்கள் மீண்டும் மீண்டும் முயற்சித்தும் ஒன்றும் பலிக்காததினாலே மனமுடைந்தார்கள். மாத்திரமல்ல, அவர்கள் செய்திருந்த செய்வினையின் வல்லமை அவர்களையே திருப்பித் தாக்கியது.

“உங்களைத் தொடுகிறவன் அவருடைய கண்மணியைத் தொடுகிறான்” (சகரியா 2:8) என்று வேதம் சொல்லுவது எத்தனை உண்மை! அவர் அன்பின் சொரூபிதான், ஆட்டுக்குட்டியானவர்தான். அதே நேரத்தில் யூதாவின் ராஜசிங்கமாகவும் விளங்குகிறார்.

அவர் சேனைகளின் கர்த்தரானவர். பலத்த பராக்கிரமசாலி. “உனக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதேபோம்” என்று சொல்லுகிற ஆண்டவர், உங்களுக்கு விரோதமாய் இருக்கும் எல்லா ஆயுதங்களையும் அழித்துப்போட வைராக்கியம்கொண்டிருக்கிறார்.

வேதம் சொல்லுகிறது: “அவர் இருதயத்தில் ஞானமுள்ளவர், பெலத்தில் பராக்கிரமமுள்ளவர்; அவருக்கு விரோதமாகத் தன்னைக் கடினப்படுத்தி வாழ்ந்தவன் யார்?” (யோபு 9:4). கர்த்தர் ஒரு பாறையைப்போன்றவர். அவர்மேல் மோதுகிறவன் நொறுங்கிப்போவானே தவிர பாறையான அவருக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படுவதில்லை.

உங்களுக்கு விரோதமாகத் துன்மார்க்கமான மனுஷர் எழும்பும்போது, அதை எண்ணிக் கவலைப்பட்டுக்கொண்டிராமல், பலத்த பராக்கிரமசாலியான கர்த்தரையே சார்ந்துகொள்ளுங்கள். பராக்கிரமசாலியான கர்த்தர்தாமே உங்களுக்காக வழக்காடி, யுத்தம்செய்து உங்களுக்கு நியாயம் செய்வார். அநியாயக்காரர் தொடர்ந்து உங்களுக்கு அநியாயம் செய்வதை அவர் தாங்கிக்கொள்ளமாட்டார். தேவபிள்ளைகளே, அந்த பராக்கிரமசாலியான கர்த்தர் உங்களோடுகூட இருக்கும்போது நீங்கள் ஏன் பயப்படவேண்டும்?

நினைவிற்கு:- “கர்த்தர் பராக்கிரமசாலியைப்போல் புறப்பட்டு, யுத்தவீரனைப்போல் வைராக்கியமூண்டு, முழங்கிக் கெர்ச்சித்து, தம்முடைய சத்துருக்களை மேற்கொள்ளுவார்” (ஏசா. 42:13).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.