No products in the cart.
ஜூலை 15 – மனத்தாழ்மை!
“அகங்காரிகளோடே கொள்ளைப்பொருளைப் பங்கிடுவதைப்பார்க்கிலும், சிறுமையானவர்களோடே மனத்தாழ்மையாயிருப்பது நலம்” (நீதி.16:19).
தெய்வீக சுபாவங்களுக்குள் இனிமையான சுபாவம் மனத்தாழ்மையை தரித்திருப்பதுதான். தாழ்மையுள்ளவர்களுக்குக் கர்த்தர் கிருபையளிக்கிறார். தாழ்மையுள்ளவனை அவர் நோக்கிப்பார்க்கிறார்.
உலகப் பிரசித்திபெற்ற தேவனுடைய ஊழியக்காரனாகிய ஸ்பர்ஜனைக்குறித்து உங்களில் பலர் அறிந்திருப்பீர்கள். அவருடைய பிரசங்க சாதுரியத்தினால் ஆயிரக்கணக்கான மக்கள் கர்த்தரண்டை இழுக்கப்பட்டார்கள். அவருடைய ஜெப ஜீவியத்தினால் அநேகர் ஆர்வமடைந்து ஜெபவீரர்களாய் மாறியிருக்கிறார்கள். மேலும், அவரிலே விளங்கிய விசேஷ குணம் ஒன்று உண்டென்றால் அது அவருடைய தாழ்மைதான்.
ஒருமுறை ஸ்பர்ஜனுடைய ஆலயத்தில் ஆராதனை நடந்துகொண்டிருந்தபோது பிரசங்க நேரம்வரையிலும் ஸ்பர்ஜனை அங்கே காணவில்லை. ஸ்பர்ஜனை ஆலயத்து மூப்பர்கள் பல இடங்களில் தேடிப் பார்த்தபோது, அவர் தனியாக ஒரு மூலையிலே முழங்காலூன்றி அழுதுகொண்டிருக்கிறதைக் கண்டார்கள். அவருடைய கண்கள் அழுது சிவந்து போயிருந்தது. ஒரு மூப்பர் வந்து, அவரை மெதுவாக தட்டி “பிரசங்க நேரம் வந்துவிட்டது; வருகிறீர்களா?” என்று அழைத்தார்.
ஆனால், ஸ்பர்ஜனோ, “இல்லை, நான் வரவில்லை. நான் எவ்வளவோ பிரசங்கித்தும்கூட, போதுமான அளவு மக்கள் இன்னும் இரட்சிக்கப்படவில்லை. ஆகவே இன்றைக்கு கர்த்தர் என் ஜெபத்தைக் கேட்கிறவரையிலும் நான் என்னைத் தாழ்த்தி அழுதுகொண்டிருக்கிறேன். நீங்கள் போய் பிரசங்கியுங்கள்” என்றார்.
மூப்பர் ஒருவர் வேறுவழியில்லாமல் பிரசங்க பீடத்தில் ஏறி தனக்குத் தெரிந்த கர்த்தருடைய வசனங்களை பிரசங்கிக்க ஆரம்பித்தார். யாருமே எதிர்பார்க்காத வகையில் அன்றைக்கு அறுநூற்றுக்கும் அதிகமான நபர்கள் கண்ணீரோடு மனம்திரும்பினார்கள்.
நீங்கள் எவ்வளவுக்கெவ்வளவு கர்த்தருடைய சமுகத்தில் உங்களைத் தாழ்த்துகிறீர்களோ, அவ்வளவுக்கவ்வளவு உயர்த்தப்படுவீர்கள். வேதம் சொல்லுகிறது, “தன்னைத்தான் உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத்தான் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்” (லூக். 14:11).
“விவேகி ஆபத்தைக் கண்டு மறைந்துகொள்ளுகிறான்; பேதைகள் நெடுகப்போய் தண்டிக்கப்படுகிறார்கள். தாழ்மைக்கும் கர்த்தருக்குப் பயப்படுதலுக்கும் வரும் பலன் ஐசுவரியமும் மகிமையும் ஜீவனுமாம்” (நீதி.22:3,4).
இயேசு சொன்ன வார்த்தைகளை மறந்துபோகாதேயுங்கள். “நீங்கள் மனந்திரும்பிப் பிள்ளைகளைப்போல் ஆகாவிட்டால், பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். இந்த பிள்ளையைப்போலத் தன்னைத் தாழ்த்துகிறவன் எவனோ அவனே பரலோகராஜ்யத்தில் பெரியவனாயிருப்பான்” (மத்.18:3,4).
தேவபிள்ளைகளே, நீங்கள் உங்களைக் கர்த்தருக்கு முன்பாக தாழ்த்தும்போது, உங்களை அறியாமலேயே கர்த்தரைக் கனம்பண்ணுவதுடன் மகிமையும்படுத்துகிறீர்கள். அவருடைய ராஜரீகத்தின் ஆளுகையை எற்றுக்கொள்ளுகிறீர்கள். ஆகவே அவர் உங்களை கனம்பண்ணி ஆசீர்வதிப்பார்.
நினைவிற்கு:- “உன் தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையாய் நடப்பதை அல்லாமல் வேறே என்னத்தைக் கர்த்தர் உன்னிடத்தில் கேட்கிறார்” (மீகா 6:8).