No products in the cart.
ஜூலை 14 – நன்மை செய்யுங்கள்!
“நன்மைசெய்யும்படி உனக்குத் திராணியிருக்கும்போது, அதைச் செய்யத்தக்கவர்களுக்குச் செய்யாமல் இராதே” (நீதி. 3:27).
நன்மை செய்ய திராணியைக் கொடுக்கிறவர் கர்த்தர். ஏழை மக்களை உபசரிக்க சந்தர்ப்பங்கள் கிடைக்கும்போது அந்த சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி அவர்களுக்கு உதவி செய்யவேண்டும் என்று கர்த்தர் எதிர்பார்க்கிறார்.
ஒரு இளம்வாலிபர் என்னிடம் ஜெபிக்க வந்தார். அவருடைய கரங்கள் செயலற்றுப்போய் தொங்கிக்கொண்டிருந்தன. தன்னுடைய கரங்களைப் பயன்படுத்தி அவரால் உணவைக்கூட உண்ண முடியவில்லை.
அவர் சொன்னார், “சில ஆண்டுகளுக்கு முன்பு அழகாக ஓவியம் வரையக்கூடிய தாலந்துகளும், திறமைகளும், என் கரங்களில் இருந்தது. மிகவும் அழகான கையெழுத்து உடையவனாய் பல கட்டுரைகளை எழுதி உலகத்துக்காக என் கரங்களைப் பயன்படுத்தினேன். கர்த்தருக்குப் பயன்படுத்தக்கூடிய பல சந்தர்ப்பங்கள் கிடைத்தபோதிலும் நான் அவருக்காக என் கைகளைப் பயன்படுத்தவில்லை. என் தாலந்தை புதைத்து வைத்தேன். இன்றைக்கு என் இரண்டு கரங்களும் செயலற்றுப் போயின. எனக்காக ஜெபிப்பீர்களா? கர்த்தர் எனக்கு சுகம் தந்தால் என் தாலந்துகளையும், என் திறமைகளையும், முழுமையாகக் கர்த்தருக்காக அர்ப்பணிப்பேன்” என்றார்.
கர்த்தர் உங்களை அநேகம்பேருக்கு நன்மைச் செய்யக்கூடியவிதத்தில் உயர்த்தி வைத்திருக்கிறாரென்றால், உங்களுடைய காரியங்களைமட்டும் கவனித்துவிட்டு, அமைதியாய் சுயநலமாய் இருந்துவிடாதிருங்கள். உங்கள் கனிகளைத் தேடிவருகிற ஆயிரக்கணக்கான பறவைகளுக்கு உற்சாகமாய் கனி கொடுங்கள். நீரூற்றாகிய உங்களைத் தேடி வருகிற மக்களின் தாகத்தைத் தீர்த்துவையுங்கள். இயேசு நன்மை செய்கிறவராய் சுற்றித்திரிந்ததுபோல் உங்களுடைய வாழ்க்கையின்மூலமாகவும் சுற்றித்திரிந்து மற்றவர்களுக்கு உதவுங்கள்.
ஜெபம் செய்வது நன்மையானது. ஆகவே நேரம் கிடைக்கும்போதெல்லாம் மற்றவர்களுக்காக ஜெபம்பண்ணி, ஜெபத்தின்மூலம் நன்மை செய்யுங்கள். சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் திருவசனத்தை ஜாக்கிரதையாய் பிரசங்கம் செய்து ஆத்துமாக்களை பாதாளத்தின் பிடியிலிருந்து மீட்டு நன்மை செய்யுங்கள். “பசியுற்றோர்க்கும், பிணியாளிகட்கும், பட்சமாக உதவி செய்வோம்” என்ற பாடலை வாயளவில் பாடாமல், உண்மையான கருத்தோடு பாடுவோமாக! அப்பொழுதுதான் தாசருக்கு இந்த தரணி சொந்தமாகும்.
“ஒருவன் நன்மை செய்ய அறிந்தவனாயிருந்தும், அதைச் செய்யாமற்போனால் அது அவனுக்குப் பாவமாயிருக்கும்” (யாக். 4:17) என்றும் வேதம் எச்சரிக்கிறது. நாம் ஆராதிக்கிற நம்முடைய ஆண்டவரே நமக்கு நன்மை செய்கிறவர். நன்மையான எல்லா ஈவுகளும் அவரிடத்திலிருந்துதான் வருகிறது. சிருஷ்டிப்பிலே அவர் நமக்காக யாவற்றையும் சிருஷ்டித்திருக்கிறார். அவர் பூமியிலிருந்த நாட்களிலே ஜனங்களுக்கு நன்மைகளையே செய்தார். அப்படிப்பட்ட அன்புள்ள ஆண்டவரின் நன்மை செய்யும் பாதையை நாமும் பின்பற்றவேண்டாமா?
தேவபிள்ளைகளே, உங்களுக்குத் திராணி இருக்கும்போது உங்களால் எவ்வளவு நன்மைகளை மற்றவர்களுக்கு செய்யமுடியுமோ அதை அன்றே செய்து முடியுங்கள். பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியாயிருக்கும்.
நினைவிற்கு:- “கர்த்தரை நம்பி நன்மை செய்; தேசத்தில் குடியிருந்து சத்தியத்தை மேய்ந்துகொள்” (சங். 37:3).