No products in the cart.
ஜூலை 12 – நம்மைக் காக்கிறவர்!
“இதோ, இஸ்ரவேலைக் காக்கிறவர் உறங்குவதுமில்லை தூங்குகிறதுமில்லை” (சங். 121:4).
நம் அருமை ஆண்டவர் உறங்காமலும் தூங்காமலும் நம்மைக் காக்கிறவர். உறங்காத கண்கள் ஒன்று உண்டானால், அது நம்மைக் காக்கிற ஆண்டவருடைய கண்கள்தான். அப்படிக் காக்கிற தேவன் உயிருள்ளவராயிருக்கிறபடியினால், நாம் எதற்கும் பயப்படவோ, கலங்கவோ அவசியமில்லை.
ஒரு கிராமத்திலே செல்வந்தரான ஒரு மூதாட்டி இருந்தார். அவர் பலருக்கும் கடன்கொடுத்து அடகாக நிறைய நகைகளை வாங்கி வைத்திருந்தார். திருடர் பயத்தை முன்னிட்டு அவர் இரவிலே தூங்குவதில்லை. சிறிய சத்தம் கேட்டாலும் எழுந்து உட்கார்ந்துவிடுவார். உடைமையைக்குறித்த பயம், திருடரைக்குறித்த பயம், மரணத்தைக்குறித்த பயம் என பல பயங்கள் அவரை வாட்டிவதைத்தன.
இப்படி எத்தனையோபேர் பயத்துக்கு ஆளாகி சந்தோஷத்தையும், நிம்மதியையும், சமாதானத்தையும் இழந்து தவிக்கிறார்கள். ஆனால், நாமோ நம்முடைய எல்லா பாரங்களையும் கர்த்தர்மேல் வைத்துவிட்டு, “கர்த்தாவே நீர் எல்லாவற்றையும் கவனித்துக்கொள்ளும். நீர் உறங்காதவராய், தூங்காதவராய் இருக்கிறபடியினால் உம்மைக் காவலுக்கு வைத்துவிட்டு நான் தூங்கிவிடுகிறேன்” என்று நிம்மதியாய் தூங்கிவிடுகிறோம்.
தாவீது ராஜா சொல்லுகிறார்: “அவர்களுக்குத் தானியமும் திராட்சரசமும் பெருகியிருக்கிறகாலத்தின் சந்தோஷத்தைப்பார்க்கிலும், அதிக சந்தோஷத்தை என் இருதயத்தில் தந்தீர். சமாதானத்தோடே படுத்துக்கொண்டு நித்திரை செய்வேன்; கர்த்தாவே, நீர் ஒருவரே என்னை சுகமாய்த் தங்கப்பண்ணுகிறீர்” (சங். 4:7,8). கர்த்தர்தான் நம்மைக் காக்கவேண்டும்.
பலர் தங்களுடைய வீடுகளிலே தங்களைப் பாதுகாக்க பாதுகாவலர்களையும் பயமுறுத்துகிற நாய்களையும் வைத்திருக்கிறார்கள். ஆனால், வேதம் என்ன சொல்லுகிறது? “கர்த்தர் வீட்டைக் கட்டாராகில், அதைக் கட்டுகிறவர்களின் பிரயாசம் விருதா; கர்த்தர் நகரத்தைக் காவாராகில் காவலாளர் விழித்திருக்கிறது விருதா” (சங். 127:1,2).
இந்திய பிரதமராயிருந்த இந்திரா காந்தி அம்மையாரை சுட்டுக் கொன்றது யார்? அவருடைய சொந்த மெய்காவலாளர் அல்லவா? காவல் காக்கிற காவலன் கடமை தவறி தூங்கிவிடக்கூடும்! ஆனால் கர்த்தரோ உறங்குவதுமில்லை, தூங்குவதுமில்லை!
ஆடுகளை மேய்க்கிற மேய்ப்பன் தன் மந்தையின்மேல் கண்ணும் கருத்துமுள்ளவனாயிருக்கிறான். சிறிய ஆட்டுக்குட்டியைக்கூட அவன் விட்டுக்கொடுக்கமாட்டான்.
உங்களைக் கண்மணிபோல பாதுகாக்கிற இரட்சகர் ஒருவர் உண்டு. சகரியா சொல்லுகிறார், “உங்களைத் தொடுகிறவன் அவருடைய கண்மணியைத் தொடுகிறான்” (சகரியா 2:8)
தேவபிள்ளைகளே, கர்த்தரையே சேர்ந்துகொள்ளுங்கள். அவரே உங்களுக்கு அடைக்கலமும், பெலனும், ஆபத்துக்காலத்தில் அனுகூலமான துணையுமானவர். அவர் இரவும், பகலும் தூங்குவதில்லை!
நினைவிற்கு:- “கர்த்தராகிய நான் அதைக் காப்பாற்றி, அடிக்கடி அதற்குத் தண்ணீர்ப்பாய்ச்சி, ஒருவரும் அதைச் சேதப்படுத்தாதபடிக்கு அதை இரவும்பகலும் காத்துக்கொள்ளுவேன்” (ஏசா. 27:3).