Appam, Appam - Tamil

ஜூலை 11 – முதிர்ந்த வயதில்!

“முதிர்ந்தவயதில் என்னைத் தள்ளிவிடாமலும், என் பெலன் ஒடுங்கும்போது என்னைக் கைவிடாமலும் இரும்” (சங். 71:9).

முதிர்வயதைக்குறித்து தாவீது சிந்தித்தபோது அவரை அறியாத கவலையும் பயமும் அவருடைய இருதயத்தைப் பற்றிப்பிடித்தது. எனினும் முதிர்வயதைக்குறித்து அவர் மனம் சோர்ந்துபோகாமல் அந்த கவலையை கர்த்தர்பேரில் வைக்கத் தீர்மானித்தார். ‘முதிர்ந்த வயதில் என்னை தள்ளிவிடாதிரும்’ என்று உருக்கமாய் அவர் ஜெபிக்கிறதைப் பாருங்கள்!

ஆஸ்வால்ட் ஸ்மித் என்ற தேவ ஊழியர் கர்த்தருக்காக வல்லமையாக ஊழியம் செய்தார். அவர் ஒரு பெரிய ஆலயத்தைக் கட்டினார். ஏராளமான புத்தகங்களை எழுதினார். அவருக்கு இரண்டு பிள்ளைகள் இருந்தார்கள். இரண்டு பேரும் அவருடைய சபையிலே பெரிய போதகர்களாய் விளங்கினார்கள். அவருக்கு எல்லா வசதியும் இருந்தது. சம்பத்தும் செல்வாக்கும் இருந்தது.

ஆனால், அவருடைய பிள்ளைகள் அவரை முதிர்ந்த வயதில் தங்களோடு வைத்துக்கொள்ள விரும்பவில்லை. தகப்பனாரைக் கொண்டுபோய் வயதானவர்கள் இருக்கும் பராமரிப்பு இல்லத்தில் விட்டுவிட்டார்கள். அவர் தனது தொண்ணூற்று ஏழாவது வயதில் மரணமடையும்வரையிலும் அங்குதான் இருந்தார்.

அவருடைய உள்ளம் எவ்வளவு பாடுபட்டிருந்திருக்கும் என்று சிந்தித்துப்பாருங்கள். தன் பிள்ளைகளோடே வாழ எவ்வளவு ஏங்கியிருந்திருப்பார்! பேரப்பிள்ளைகளை எடுத்து கொஞ்சி மகிழ எவ்வளவு ஆசைப்பட்டிருந்திருப்பார்!

இப்படியெல்லாம் நடந்துவிடுமோ என்று பயந்துதான் தாவீது தன் முதிர்ந்த வயதில் ‘என்னைத் தள்ளிவிடாமலும், என் பெலன் ஒடுங்கும்போது என்னைக் கைவிடாமலும் இரும்’ என்று கண்ணீரோடு ஜெபம்பண்ணினார்.

முதிர் வயதாகும்போது நம்முடைய பெலன் ஒடுங்குகிறது. கண்பார்வை மங்குகிறது. சம்பாதிக்க முடிவதில்லை. மற்றவர்களைச் சார்ந்து ஜீவிக்கவேண்டியதிருக்கிறது. அந்த வேளையில் நம்முடைய பெலவீனத்தையும், திக்கற்ற நிலைமையையும் பயன்படுத்தி யாராவது நம்மை ஒடுக்கிவிட்டால் அல்லது புண்படுகிற வார்த்தைகளை கூறிவிட்டால் மனம் சோர்ந்துபோய்விடுகிறது.

தேவபிள்ளைகளே, மனுஷர் ஒருவேளை உங்களைத் தள்ளிவிடலாம். உங்கள் பிள்ளைகளே உங்களை ஒருவேளை வெறுத்துவிடலாம். நாம் மலைபோல சார்ந்திருந்தவர்கள் நம்மை ஒதுக்கி விலகிப்போய்விடலாம்.

ஆனால், கர்த்தர் நம்மைக் கைவிடவே மாட்டார். சிறுவயது முதல் நம் கரம் பிடித்து நடத்தியவர், முதிர்வயதிலும் நம்மைக் கைவிடாதிருப்பார். இதுவரை நம்மைச் சுமந்தவர் இன்னமும் சுமப்பார், இன்னமும் அரவணைப்பார், இன்னமும் பாதுகாப்பார்.

தேவபிள்ளைகளே, முதிர்வயதிலும் கர்த்தருக்குப் பணி செய்யும்படி நீங்கள் தீர்மானிப்பீர்களென்றால், உங்களை உயிர்ப்பித்து கடைசி மூச்சு இருக்கும்வரையிலும் ஆண்டவருக்கு ஊழியம் செய்யும்படி உங்களைப் பெலப்படுத்த அவர் போதுமானவராயிருக்கிறார்.

நினைவிற்கு:- “இப்போதும் தேவனே, இந்தச் சந்ததிக்கு உமது வல்லமையையும், வரப்போகிற யாவருக்கும் உமது பராக்கிரமத்தையும் நான் அறிவிக்குமளவும், முதிர்வயதும், நரைமயிருமுள்ளவனாகும்வரைக்கும் என்னைக் கைவிடீராக” (சங். 71:18).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.