No products in the cart.
ஜூலை 10 – ஜெபம்பண்ணுங்கள்!
“ஜெபத்தைக் கேட்கிறவரே, மாம்சமான யாவரும் உம்மிடத்தில் வருவார்கள்” (சங். 65:2).
நாம் கர்த்தரிடத்தில் வரவேண்டும். அவர்மேல் அன்பு செலுத்தி பயபக்தியோடு அவரை நோக்கிப்பார்க்கவேண்டும். மனதைத் திறந்து அவரிடத்தில் ஜெபிக்கவேண்டும். அப்பொழுது கர்த்தர் ஜெபத்தைக் கேட்பதோடு நில்லாமல் அதற்கு பதிலளிக்கவும் செய்வார்.
ஜெபத்தின் மூலமாகத்தான் நாம் தேவனோடு ஆழமான ஐக்கியம்கொள்ளுகிறோம். அந்த ஐக்கியம் நம் ஆத்துமாவுக்கு இன்பம் தரும் மகிழ்ச்சியான ஐக்கியம். கர்த்தரோடுள்ள உறவையும், ஐக்கியத்தையும், ஜெபத்தையும் அசட்டைபண்ணுகிறவர்கள் பிரச்சனைகளால் தாக்கப்படும்போது, நிலை தடுமாறுகிறார்கள்.
சில வருடங்களுக்கு முன்பாக தமிழகத்தில் நடந்த ஒரு முக்கியமான சம்பவத்தைப் பாருங்கள். ஒரு மருத்துவக் கல்லூரி மாணவனை ஒரு கிறிஸ்தவ மாணவன் ஈவு இரக்கமில்லாமல் வெட்டிக்கொன்று உடலைக் கூறுபோட்ட சம்பவம் நடந்தது. கிறிஸ்தவ மாணவனுடைய தாயாரும், தகப்பனும் மருத்துவர்கள்தான். பத்திரிக்கையிலே அவனுடைய தாயார் கொடுத்த பேட்டியில், “பத்திரிகைகள்தான் என் மகனைக் கெட்டவனாய் சித்தரிக்கின்றன. நாங்கள் ஆலயத்திற்குப் போகமாட்டோமே தவிர கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள்தான். என் மகனும் அப்படித்தான்” என்றார்கள். இதை வாசித்தபோது மிகுந்த வேதனையாயிருந்தது.
பாருங்கள், கிறிஸ்தவ டாக்டர்களுக்கு ஆலயம் போகக்கூட நேரமில்லை. ஞாயிற்றுக்கிழமையும் அவர்களைத் தேடி நோயாளிகள் வருகிறபடியினால், அவர்களுக்கு சேவை செய்யப்போய் கர்த்தரைத் தேட முடியவில்லை. விளைவு? பயங்கரமான கொலையும், கோர்ட்டும், வழக்கும், விசாரணையும், பலவிதமான நெருக்கங்களும் ஏற்பட்டுவிடுகின்றன.
“கர்த்தருடைய பரிசுத்த நாளை மகிமையுள்ள நாளென்றும் சொல்லி, அதை மகிமையாக எண்ணுவாயானால், அப்பொழுது கர்த்தரில் மனமகிழ்ச்சியாயிருப்பாய். பூமியின் உயர்ந்த இடங்களில் உன்னை ஏறியிருக்கும்படிபண்ணி, உன் தகப்பனாகிய யாக்கோபுடைய சுதந்தரத்தால் உன்னைப் போஷிப்பேன். கர்த்தருடைய வாய் இதைச் சொல்லிற்று” (ஏசா. 58:13,14).
இயேசுகிறிஸ்துவினுடைய ஜெப வாழ்க்கையைக்குறித்து வாசித்துப்பாருங்கள். அவர் இரவும் பகலும் ஊழியம் செய்தார். அநேகர் அவரைத் தேடி வந்து சந்திக்க வாஞ்சையாயிருந்தார்கள். ஆனால் இயேசுவோ ஊழியத்தைப்பார்க்கிலும் பிதாவுக்கே அதிக முக்கியத்துவம் தந்து அவர் சமூகத்தை தேடினார். தனிமையாய் வனாந்திரத்திற்கு சென்று ஜெபம் பண்ணிக்கொண்டிருந்தார் (லூக். 5:15,16).
தேவபிள்ளைகளே, இந்த உலகத்திலே மிக முக்கியமான காரியம் ஒன்று உண்டென்றால், அது ஜெப வாழ்க்கை வாழ்வதே. ஒவ்வொருநாளும் தேவ சமுகத்திலே அமர்ந்து அவரைத் துதியுங்கள், போற்றிப் புகழுங்கள் மற்றும் நன்றி செலுத்துங்கள். அது உங்களுடைய ஆத்துமாவைப் பாதுகாக்கும். உங்கள் ஆவியை களிகூரப்பண்ணும்.
நினைவிற்கு:- “மரித்தவர்களும் மவுனத்தில் இறங்குகிற அனைவரும் கர்த்தரைத் துதியார்கள், நாமோ, இதுமுதல் என்றென்றைக்கும் கர்த்தரை ஸ்தோத்திரிப்போம்” (சங். 115:17,18).