No products in the cart.
ஜூலை 09 – பயத்தை நீக்கினார்!
“நான் கர்த்தரைத் தேடினேன், அவர் எனக்குச் செவிகொடுத்து, என்னுடைய எல்லாப் பயத்துக்கும் என்னை நீங்கலாக்கிவிட்டார்” (சங். 34:4).
ஆபிரகாம் லிங்கன் மிகவும் நேசித்து வாசித்த வேதாகமம் இன்றும் அமெரிக்காவிலுள்ள அருங்காட்சி நிலையம் ஒன்றில் வைக்கப்பட்டிருக்கிறது. அதை கையில் எடுத்துத் திறந்தால், 34-ம் சங்கீதம் இடம்பெறும் பக்கம்தான் நம் பார்வைமுன் வருகிறது. ஆபிரகாம் லிங்கன் அந்த அதிகாரத்தை அடிக்கடி வாசித்திருக்கவேண்டும். அதிலும் விசேஷமாக இந்த நான்காம் வசனத்தை அவர் திரும்பத் திரும்ப படித்தபடியினால், அந்த வசனம் இருக்கும் இடம் தொய்ந்து அழுக்கடைந்திருக்கிறது.
ஆபிரகாம் லிங்கனுடைய நண்பர்கள் இந்த சங்கீதம்தான் ஆபிரகாம் லிங்கனுக்கு மிகவும் பிரியமான சங்கீதம் என்கிறார்கள். அமெரிக்காவில் உள்நாட்டுக் குழப்பம் மிக அதிகமாக ஏற்பட்டு, யுத்தம் மூண்ட சமயங்களிலெல்லாம் ஆபிரகாம் லிங்கன் 34-ம் சங்கீதத்திலுள்ள இந்த வசனத்தை எடுத்து வைத்து, “நான் கர்த்தரைத் தேடினேன். அவர் எனக்கு செவிகொடுத்து, என்னுடைய எல்லாப் பயத்துக்கும் என்னை நீங்கலாக்கிவிட்டார்” என்று திரும்பத் திரும்ப வாசிப்பதுண்டு. ஆம், ஆபிரகாம் லிங்கனை பயம் வந்து கலக்கியபோதெல்லாம் இந்த வசனத்தின்மூலமாக கர்த்தரின் அடைக்கலத்திற்குள் ஓடிப்போய் மறைந்துகொண்டார். அதுவே அவரது சாட்சியாக இருந்தது.
நம்முடைய கண்கள் கிறிஸ்துவையே நோக்குமென்றால், அவரையே நம்முடைய அடைக்கலமாகவும், பெலனாகவும், ஆபத்துக்காலத்தில் அனுகூலமான துணையுமாகவும் ஏற்றுக்கொள்ளுவோம். போராட்ட நேரங்களில் அவருடைய செட்டைகளின் நிழல் நமக்கு பாதுகாப்பையும் அடைக்கலத்தையும் தந்தருளும்.
ஒருமுறை ஒரு குழந்தை ஒரு தீப்பிடித்த அறைக்குள் சிக்கிக்கொண்டது. இருண்ட அந்த இரவில் எல்லாப்பக்கமும் தீயினால் உண்டான புகை சூழ்ந்தது. தகப்பன் ஓடி வந்தார். மற்றவர்கள் தீயை அணைக்க முயற்சி எடுத்தபோது, அவர் தன் குழந்தையோடுகூட கதவு சாவி துவாரத்தின் மூலமாக, ‘மகனே பயப்படாதே’ என்று சொன்னது மட்டுமின்றி, தன் முழு பெலத்தோடும் கதவை உடைத்து அந்தக் குழந்தையைக் காப்பாற்றினார். தகப்பனாருடைய அன்பின் செய்கையைக் கண்ட மகன் தன் தகப்பனிடத்தில் ஆவலாய் ஓடிக் குதித்து அவருடைய மார்பிலே புதைந்துகொண்டான்.
இதைப்போலவே நம்முடைய பயத்தின் நேரங்களில் நம்முடைய அருமை ஆண்டவர் நம்மோடு பேசுகிறது மாத்திரமல்ல, தம்முடைய வல்லமையை வெளிப்படுத்தி நம்மைப் பாதுகாத்து அரவணைத்துக்கொள்ளுகிறார். ‘நீ பயப்படாதே’ என்று அவர் எத்தனை தரம் நம்மிடம் சொல்லித் தேற்றுகிறார்! வேதம் முழுவதும் அந்த ஆறுதலின் வார்த்தைகளால் நிரம்பியிருக்கிறது.
தேவபிள்ளைகளே, எல்லா பயத்திலிருந்தும் நீங்கள் விடுதலையாக வேண்டுமென்றால் கர்த்தர்மேல் விசுவாசமும் அன்பும் வைத்து அவரிலேயே சார்ந்துகொள்ளவேண்டும். “அன்பிலே பயமில்லை. பூரண அன்பு பயத்தை புறம்பே தள்ளும்” (1 யோவா. 4:18) என்ற வேத வசனத்தின்படி, நீங்கள் கிறிஸ்துவோடு பழகப் பழக அவருடைய அன்பிலே வளர்ச்சியடைந்து தேர்ச்சியடைகிறீர்கள். உங்களுடைய பாரத்தையெல்லாம் கர்த்தர்மேல் வைத்துவிடும்போது பயம் உங்களைவிட்டுத் தானாக நீங்கிப்போகும்.
நினைவிற்கு:- “அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்” (1 பேது. 5:7).