Appam, Appam - Tamil

ஜூலை 07 – அநுகூலமாயிற்று!

“கர்த்தர் அவனோடிருந்தார், அவன் போகிற இடம் எங்கும் அவனுக்கு அநுகூலமாயிற்று (2 இராஜா. 18:7).

இந்த வேத பகுதியிலே எசேக்கியா இராஜாவைக்குறித்து சொல்லப்பட்டிருக்கிறது. எசேக்கியா இராஜா என்ற வார்த்தைக்கு ‘என் பெலன்’ என்பது அர்த்தமாகும். யார் யார் கர்த்தரைத் தம்முடைய பெலனாய் தெரிந்துகொள்ளுகிறார்களோ, ‘என் பெலனாகிய கர்த்தாவே உம்மில் அன்புகூருகிறேன்’ என்று சார்ந்துகொள்ளுகிறார்களோ, அவர்களுக்கு எப்போதும் எங்கும் எல்லாமும் அநுகூலமாகவே இருக்கும்.

எசேக்கியா இராஜாவுக்குக் கர்த்தர் அநுகூலமாய் இருந்ததற்கு மிக முக்கியமான காரணம் என்னவென்றால், எசேக்கியா இராஜா மேடைகளை அகற்றி, சிலைகளைத் தகர்த்து, விக்கிரகத்தோப்புகளை வெட்டிப்போட்டார் (2 இராஜா. 18:4) என்பதே ஆகும்.

கர்த்தர் வெறுக்கிற பாவங்களுக்குள் கொடிய பாவம் விக்கிரக ஆராதனை பாவமாகும். கர்த்தருக்குக் கொடுக்கவேண்டிய மகிமையை விக்கிரகங்களுக்கு கொடுக்கும்போது கர்த்தரால் அதை தாங்கிக்கொள்ள முடிவதில்லை. “என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம்” (யாத். 20:3) என்று திட்டமும் தெளிவுமாய் கர்த்தர் சொன்னார். அதுதான் எல்லா பிரமாணங்களிலும் முதலும் முக்கியமுமான பிரமாணமாகும்.

விக்கிரகம் என்றால் நாம் வெறும் சிலைவழிபாடு என்றுமாத்திரம் எண்ணிவிடக்கூடாது. நாம் கர்த்தருக்கு கொடுக்கவேண்டிய இடத்தை எது எது ஆக்கிரமித்துக்கொள்ளுகிறதோ, எந்தெந்த காரியங்களுக்கு தேவனைவிட நாம் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோமோ அது எல்லாம் விக்கிரகம் ஆகிறது.

சிலர் தங்களுடைய படிப்பை விக்கிரகமாய் வைத்திருப்பார்கள். சிலர் வேலை வேலை என்று ஞாயிற்றுக்கிழமைகூட ஆலயத்திற்குச் செல்லாமல் தங்கள் வேலையை விக்கிரகமாய் வைத்திருப்பார்கள். சிலருக்கு ஓய்வு நாளில்கூட தங்கள் கடைகளை மூட மனம் வராது. இந்த பொருளாசையைத்தான் விக்கிரகம் என்று வேதம் சொல்லுகிறது.

நீங்கள் எல்லா விக்கிரக ஆவிகளையும் உங்கள் உள்ளத்தைவிட்டும், குடும்பத்தைவிட்டும் துரத்தியடித்துவிட்டு கர்த்தரையே இராஜாதி இராஜாவாக உங்கள் இருதய சிங்காசனத்துக்குக் கொண்டுவாருங்கள். அப்பொழுது கர்த்தர் உங்களோடிருப்பார். நடக்கிற அனைத்தும் உங்களுக்கு அநுகூலமாய் இருக்கும்.

எசேக்கியா இராஜா செய்த இன்னொரு காரியம் உண்டு. அவர் கர்த்தருடைய ஆலயத்தைப் பழுதுபார்த்தார் (2 நாளா. 29:3). கர்த்தருடைய வீட்டைக்குறித்த பக்திவைராக்கியம் அவருக்கு இருந்தது. ஆகவே, கர்த்தர் அநுகூலமான வாசலைத் திறந்ததுடன் அவர் செய்ததை எல்லாம் வாய்க்கப்பண்ணினார்.

“உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென்றும், நீங்கள் உங்களுடையவர்களல்லவென்றும் அறியீர்களா?” (1 கொரி. 6:19) என்று வேதம் கேட்கிறது. தேவபிள்ளைகளே, ஒருநாளும் உங்கள் சரீரத்தை பாவத்தினாலோ, இச்சையினாலோ கறைப்படுத்திவிடாதிருங்கள்.

நினைவிற்கு:- “அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப்போலிருப்பான்; அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்” (சங். 1:3).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.