No products in the cart.
ஜூலை 05 – பரிசுத்தக் குலைச்சல்!
“உன் தேவனுடைய நாமத்தை பரிசுத்தக் குலைச்சலாக்காதே; நான் கர்த்தர்” (லேவி. 18:21).
நாம் கர்த்தருடையவர்கள். அவர் நம்முடைய தேவன். அவருடைய பரிசுத்தமுள்ள நாமம் நமக்குத் தரிப்பிக்கப்பட்டிருக்கிறது. அவர் நம்மை தமக்கென்று பரிசுத்த ஜனமாக, ஆசாரிய கூட்டமாக தெரிந்துகொண்டார்.
பதினான்காம் நூற்றாண்டில் எழுந்த ஒரு வல்லமையான எழுப்புதல் ஊழியக்காரரின் பெயர் சவோனரோலா (Savonarola) ஆகும். இத்தாலியில் பெரிய எழுப்புதலைக் கொண்டுவந்த அவர், அந்த தேசத்தின் பாவங்கள் சோதோம் கொமோராவின் பாவங்களைவிடக் கொடியது என்று பிரசங்கித்தார். அன்றைக்கு இருந்த இராஜா மற்றும் மத தலைவர்கள் மூன்றுபேரை நேருக்குநேராக சந்தித்து நீங்கள் தொடர்ந்து கர்த்தருடைய நாமத்தை அவமாக்கி பரிசுத்தக் குலைச்சலாக்கிக்கொண்டிருந்தால் ஒரே ஆண்டில் மரிக்க வேண்டியதாயிருக்கும் என்று எச்சரித்தார்.
ஆனால் அவர்களோ, அவரது எச்சரிக்கையை அசட்டை செய்தார்கள். நடந்தது என்ன தெரியுமா? அவர்கள் மூவரும் அதே ஆண்டிலே மரித்துப்போனார்கள். ஜனங்களுக்குள்ளே பயமும், பெரிய எழுப்புதலும் உண்டாயிற்று. ஆம்! பரிசுத்தக் குலைச்சல் என்பது மிகவும் ஆபத்தான ஒன்றாகும்.
நாம் எதையெல்லாம் பரிசுத்த குலைச்சலாக்கக்கூடாது தெரியுமா? முதலாவது, தேவனுடைய நாமத்தை (லேவி. 18:21). இரண்டாவது, பரிசுத்த ஸ்தலத்தை (லேவி. 21:23). மூன்றாவது, ஓய்வு நாளை (எசே. 23:38). நான்காவது, பிதாக்களின் உடன்படிக்கையை (மல். 2:10) என்று வேதம் எச்சரிக்கிறது. நம் தேவன் அன்புள்ளவர்தான். ஆனால், அவருடைய நாமத்தை பரிசுத்த குலைச்சலாக்கும்போது அவர் நீதியுள்ள நியாயாதிபதியாக மாறுகிறார். அவருடைய பட்டயக்கருக்கு மகா கூர்மையானது.
ஆதாம், ஏவாளின் ஒரு பாவத்தினிமித்தம் அவர்கள் ஏதேன் தோட்டத்தைவிட்டே துரத்தப்பட வேண்டியதாயிற்று. ஒரு ஆகானின் சுயநலத்தால் அவனும், அவனுடைய குடும்பமும் கல்லெறியுண்டு சாகவேண்டியதாயிற்று. கேயாசியின் பொருளாசையினால் அவனும், அவனுடைய சந்ததியும் குஷ்டரோகிகளாய் ஜீவிக்கவேண்டியதாயிற்று.
அனனியா சப்பீராள் பரிசுத்த ஆவியினிடத்தில் பொய் சொன்னதினால் நியாயத்தீர்ப்பாகிய மரணம் அவர்களைச் சட்டென மேற்கொண்டது. மட்டுமல்ல, ஒருவன் தேவனுடைய ஆலயத்தைக் கெடுத்தால் அவனை தேவன் கெடுப்பார் (1 கொரி. 3:17) என்று வேதம் எச்சரிக்கிறதே.
அப். பவுல் எழுதுகிறார், “சுபாவக்கிளைகளை தேவன் தப்பவிடாதிருக்க உன்னையும் தப்பவிடமாட்டார் என்று எச்சரிக்கையாயிரு. ஆகையால், தேவனுடைய தயவையும் கண்டிப்பையும் பார்; விழுந்தவர்களினிடத்திலே கண்டிப்பையும், உன்னிடத்திலே தயவையும் காண்பித்தார்” (ரோம. 11:21,22). தேவபிள்ளைகளே, நாம் நமது வாழ்நாளெல்லாம் கர்த்தருடைய பரிசுத்தத்துக்கு ஏற்றபடி வாழ்ந்து, அவருடைய நாமம் பரிசுத்த குலைச்சலாகாதபடி பயபக்தியோடும், ஜாக்கிரதையோடும் நடந்துகொள்ளவேண்டும்.
நினைவிற்கு:- “புறஜாதிகளின் நடுவே நீங்கள் பரிசுத்தக் குலைச்சலாக்கினதும் அவர்களுக்குள் உங்களால் பரிசுத்தக்குலைச்சலாக்கப்பட்டதுமான என் மகத்தான நாமத்தை நான் பரிசுத்தம்பண்ணுவேன்” (எசே. 36:23).