No products in the cart.
ஜுன் 28 – ஜெயம் தருகிறவர்!
“இருக்கிறவராக இருக்கிறேன் என்று மோசேயுடனே சொல்லி, இருக்கிறேன் என்பவர் என்னை உங்களிடத்துக்கு அனுப்பினார் என்று இஸ்ரவேல் புத்திரரோடே சொல்வாயாக” (யாத். 3:14).
நானூற்று முப்பது வருடங்கள் எகிப்து தேசத்திலே அடிமைகளாக இருந்த இஸ்ரவேலரின் கைகளிலே எந்தப் போராயுதமுமில்லை. பார்வோனையும் அவனுடைய சேனைகளையும் எதிர்த்து நிற்க எந்த வாய்ப்புமில்லை, பெலனுமில்லை. பயங்கரமான அடிமைத்தனத்திலே செயலாற்ற முடியாத சூழ்நிலையிலே பரிதாபமாய் இருந்தார்கள். தோல்வியையே எண்ணி, தோல்வியிலே வாழ்ந்துகொண்டிருந்தார்கள்.
பார்வோனோ, மிகப் பெரிய சேனையுடையவனாய் இருந்தான். அவனுக்கு ஆலோசனை சொல்ல ஏராளமான மந்திரவாதிகள் இருந்தார்கள். அவனை எதிர்த்து நிற்கவோ, யுத்தம் செய்யவோ இஸ்ரவேல் புத்திரரால் கூடாதிருந்தது. ஆனாலும் அவர்களுக்கு ஜெயம் கொடுக்க கர்த்தர் சித்தமுள்ளவராயிருந்தார். அவர்கள் எகிப்திலிருந்து விடுதலையாவதற்கு எப்படி யுத்தம் செய்ய வேண்டும்? ஆம், கர்த்தர் அவர்களுக்கு கொடுத்த போராயுதம் பஸ்கா ஆட்டுக்குட்டியின் இரத்தம்தான்.
அந்தப் போராயுதம் இரண்டு காரியங்களைச் செய்தது. ஒன்று இஸ்ரவேல் குடும்பங்களையெல்லாம் மூடிப் பாதுகாத்தது. எந்தெந்த வீடுகளில் பஸ்கா ஆட்டுக்குட்டியின் இரத்தம் பூசப்பட்டிருந்ததோ, அங்கே சங்கார தூதனால் நுழைய முடியவில்லை.
அதே நேரம், பஸ்கா ஆட்டுக்குட்டியின் இரத்தம் பூசப்படாத வீடுகளிலுள்ள மனிதர்களிலும், மிருகஜீவன்களிலும், முதற்பேறானவைகள் யாவும் சங்கரிக்கப்பட்டன. ஆம், ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தம் நம்மைப் பாதுகாப்பதுடன், நமக்கு வல்லமையான போராயுதமாகவும் விளங்குகிறது.
நம்முடையப் போராயுதங்கள் மாம்சத்துக்கேற்றவைகள் அல்ல, அவைகள் அரண்களை நிர்மூலமாக்குகிறதற்குத் தேவபலமுள்ளவைகளாயிருக்கின்றன (2 கொரி. 10:4). வேதம் சொல்லுகிறது, “மரணம் நேரிடுகிறதாயிருந்தாலும் அதற்குத் தப்பும்படி தங்கள் ஜீவனையும் பாராமல், ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினாலும் தங்கள் சாட்சியின் வசனத்தினாலும் அவனை ஜெயித்தார்கள்” (வெளி. 12:11).
உங்களுக்கு விரோதமாய் எழும்பியிருக்கிற பார்வோன்கள் யார்? உங்களுக்கு விரோதமாய் இருக்கிற சகல சத்துருக்கள்மேலும் ‘இயேசுவின் இரத்தம் ஜெயம்’ என்று சொல்லி அவருடைய வல்லமையுள்ள இரத்தத்தை அக்கினியாய்த் தெளியுங்கள்.
அப்போது எல்லாக் கட்டுகளும் முறிந்துபோகும். எல்லா எதிர்ப்புகளும் மறைந்துபோகும். ஒருவனும் எதிர்த்து நிற்கக்கூடாதபடிக்கு வாக்கினாலும் வல்லமையினாலும் கர்த்தர் உங்களை நிரப்பிப் பயன்படுத்துவார்.
ஆட்டுக்குட்டியின் இரத்தத்தால் எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து இஸ்ரவேல் ஜனங்கள் விடுதலையானது மட்டுமல்லாமல், அவர்கள் எகிப்தியர்களைக் கொள்ளையிட்டு, பொன்னுடைமையோடும், வெள்ளியுடைமையோடும்கூட, சந்தோஷமாய் புறப்பட்டார்கள். நானூற்று முப்பது வருடங்கள் நீண்டிருந்த அடிமைத்தனமானது, பஸ்கா ஆட்டுக்குட்டியினுடைய இரத்தத்தாலே ஒரே நாளில் முடிந்துபோய்விட்டது.
தேவபிள்ளைகளே, எல்லாப் பாவ பழக்கவழக்கத்தின் அடிமைத்தனங்களையும் இயேசுகிறிஸ்து தம்முடைய இரத்தத்தினால் முறித்து, நம்மை விடுதலையாக்க வல்லவராயிருக்கிறார்.
நினைவிற்கு:- “அவருடைய கிருபையின் ஐசுவரியத்தின்படியே இவருடைய இரத்தத்தினாலே பாவமன்னிப்பாகிய மீட்பு இவருக்குள் நமக்கு உண்டாயிருக்கிறது” (எபே. 1:7).