Appam, Appam - Tamil

ஜுன் 21 – மரித்திருந்து பிழைத்தவர்!

“முந்தினவரும் பிந்தினவரும், மரித்திருந்து பிழைத்தவருமானவர் சொல்லுகிறதாவது” (வெளி. 2:8).

ஆதி அப்போஸ்தலர் நாட்களிலிருந்த ஏழு சபைகளுக்கும், கிறிஸ்துவானவர் ஒவ்வொரு விதத்தில் தன்னை அறிமுகப்படுத்துவதைக் காண்கிறோம். இங்கே சிமிர்னா என்ற சபைக்கு ‘முந்தினவரும், பிந்தினவரும், மரித்திருந்து பிழைத்தவருமானவர்’ என்று சொல்லுகிறார்.

‘சிமிர்னா’ என்ற வார்த்தைக்கு ‘வெள்ளைப்போளம்’ என்று அர்த்தம். ‘வெள்ளைப்போளம்’ என்பது ஒரு மரத்திலிருந்து வெட்டி எடுக்கப்படுகிற பிசினாகும். அது மென்மையானதும், வாசனையானதும், அதிக கசப்பானதுமாகும். வெள்ளைப்போளத்தை தூபவர்க்கத்தோடு இணைத்து, கர்த்தருக்கு சுகந்த வாசனையாக ஏறெடுப்பார்கள். இந்த வெள்ளைப்போளம், விண்ணப்பத்துக்கு அடையாளமானதாகும்.

அப். யோவானின் நாட்களில், சிமிர்னா சபையில் அநேகர் இரத்த சாட்சிகளாய் மரித்தார்கள். கர்த்தருக்காகப் பாடநுபவித்தார்கள். வெள்ளைப்போள மரம் வெட்டப்பட்டு அதிலே பால் வடிகிறதுபோல, விசுவாசிகளின் உள்ளம் பலவிதமான சித்திரவதைகளால் வேதனைப்பட்டபோது அவர்கள் கண்ணீரோடு கர்த்தரிடம் விண்ணப்பம் செய்தார்கள். எனவேதான் கர்த்தர் தன்னை, ‘மரித்திருந்து பிழைத்தவர்’ என்று அறிமுகப்படுத்துகிறார். கர்த்தர்தாமே, உலகத்தோற்றத்துக்கு முன்பாகவே அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியாய் இருந்தபோதிலும், இன்றைக்கும் அடிக்கப்பட்டவண்ணமாகவே இருக்கிறார் (வெளி. 5:6).

கிறிஸ்தவ மார்க்கத்தின் நம்பிக்கையும் மேன்மையும் கிறிஸ்துவின் மரணத்திலும், உயிர்த்தெழுதலிலும்தான் இருக்கிறது. நம்முடைய விசுவாச அறிக்கை என்ன? ‘கிறிஸ்து நமக்காகப் பாடுபட்டு, மரித்து, மூன்றாம் நாளில் உயிரோடு எழுந்தார்’ என்பதே. இந்த உறுதியான நம்பிக்கையின்மேல்தான் கிறிஸ்தவ மார்க்கம் கட்டப்பட்டு, மகிமையாக எழுப்பப்பட்டிருக்கிறது. இந்த நம்பிக்கை, சோதனை நேரங்களில் வெற்றிசிறக்க உங்களுக்கு உதவியாயிருக்கும்.

முஸ்லீம் சகோதரர்கள் கல்லறைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். நபிகளுக்கென்று பலவிதமான கல்லறைகள் கட்டி, அவற்றிலேயே தொழுதுகொள்ளுகிறார்கள். மெக்காவுக்கு புனித யாத்திரை செல்லுகிறவர்கள்கூட அங்கே பார்ப்பது கல்லறைதானே! ஆனால் கிறிஸ்தவ மார்க்கமோ, உயிர்த்தெழுதலின் மார்க்கம். நம் அருமை ஆண்டவர் இயேசு, மரித்துப் பிழைத்தவர்.

இந்தியாவில் ‘தாஜ்மஹால்’ உலக அதிசயங்களில் ஒன்றாக எண்ணப்படுகிறது. இது வெளிப்பார்வைக்கு வெள்ளைச் சலவைக் கற்களால் கட்டி எழுப்பப்பட்ட அழகான ஞாபகார்த்தச் சின்னமாக விளங்கினாலும், உண்மையில் அது ஷாஜஹானின் மனைவியான மும்தாஜுக்காகக் கட்டப்பட்ட கல்லறைதான். எகிப்து தேசத்தில் உள்ள உலக அதிசயமான, பிரமிக்க வைக்கும் பிரமிடுகள்கூட கல்லறைகளே.

ஆனால் தேவன், இயேசுவை உயிரோடு எழுப்பினார். வேதம் சொல்லுகிறது, “இயேசுவை எழுப்பினதினாலே தேவன் நம்முடைய பிதாக்களுக்கு அருளிச்செய்த வாக்குத்தத்தத்தை அவர்களுடைய பிள்ளைகளாகிய நமக்கு நிறைவேற்றினார் என்று நாங்களும் உங்களுக்குச் சுவிசேஷமாய் அறிவிக்கிறோம்” (அப். 13:33).

இன்றைக்கும் இயேசு ஜீவிக்கிறவராயிருக்கிறார். ஆகவே ‘இயேசு ஜீவிக்கிறார்’ என்று கெம்பீரத்தோடு பாடி மகிழுங்கள். ஜீவனுள்ள தேவனை பின்பற்றுவதும், ஆராதிப்பதும் எத்தனை பாக்கியம்! தேவபிள்ளைகளே, அவர் ஜீவனுள்ளவராயிருக்கிறபடியால், உங்களை முற்றுமுடிய வழிநடத்துவார்.

நினைவிற்கு:- “அவர் (கிறிஸ்து) வெளிப்படும்போது அவர் இருக்கிறவண்ணமாகவே நாம் அவரைத் தரிசிப்பதினால், அவருக்கு ஒப்பாயிருப்போமென்று அறிந்திருக்கிறோம்” (1 யோவா. 3:2).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.