No products in the cart.
ஜுன் 20 – முந்தினவர் பிந்தினவர்!
“அப்பொழுது அவர் தம்முடைய வலதுகரத்தை என்மேல் வைத்து, என்னை நோக்கி: பயப்படாதே, நான் முந்தினவரும் பிந்தினவரும், உயிருள்ளவருமாயிருக்கிறேன்” (வெளி. 1:17).
இயேசுகிறிஸ்துவின் அன்பின் செய்கைகளைப் பாருங்கள். தம் கரத்தை அன்போடு யோவான்மேல் வைத்து, ‘பயப்படாதே’ என்று சொல்லி, பயத்தை நீக்கினார். ஆற்றினார்; தேற்றினார்; அரவணைத்தார். எந்த வலதுகரம், ஏழு நட்சத்திரங்களை ஏந்திக்கொண்டிருந்ததோ, அதே கரம் யோவான்மேல் அன்பாய் அமர்ந்தது.
இன்றைக்கும் உங்களுக்காகத் துளையிடப்பட்ட தழும்புகளுள்ள கரம், உங்களை ஆற்றித்தேற்றி உங்களுக்கு ஒரு அற்புதம் செய்யும். அவர் தான் தேற்றுவதுபோல தேற்றுகிறவர் அல்லவா? ‘நீங்கள் எருசலேமில் தேற்றப்படுவீர்கள்’ என்று வாக்களித்தவர், தமது அன்பின் வார்த்தையாலும், வலதுகரத்தாலும் உங்களைத் தேற்றி, எல்லா பயத்திற்கும் நீங்கலாக்கி, விடுவிப்பார்.
இதே அனுபவத்தை நீங்கள் மறுரூபமலையிலும் காணலாம். ஒளியிலுள்ள ஒரு மேகம் அவர்கள்மேல் நிழலிட்டது. “இவர் என்னுடைய நேச குமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன்” என்று உரைத்தார் (மத். 17:5). அதைக்கேட்டு சீஷர்கள் பயந்து, முகம்குப்புற விழுந்தார்கள். “அப்பொழுது, இயேசு வந்து, அவர்களைத் தொட்டு; எழுந்திருங்கள், பயப்படாதேயுங்கள் என்றார்” (மத். 17:7).
தேவபிள்ளைகளே, இன்று உங்களுக்குத் தொல்லைகொடுத்துக்கொண்டிருக்கிற பயம் எவை? எதினிமித்தம் உங்களுடைய உள்ளம் கலங்கிக்கொண்டிருக்கிறது? உங்களுடைய எதிர்காலத்தைக்குறித்த பயமானாலும் சரி, தீயமனுஷரைக்குறித்த பயமானாலும் சரி, மரணபயமானாலும் சரி, கர்த்தர் ‘பயப்படாதே’ என்று சொல்லுகிறார்.
மட்டுமல்ல, எல்லா பயத்தையும் அவர் நீக்கிப்போடுவார். “நான் கர்த்தரைத் தேடினேன், அவர் எனக்குச் செவிகொடுத்து, என்னுடைய எல்லாப் பயத்துக்கும் என்னை நீங்கலாக்கிவிட்டார்” என்பதே சங்கீதக்காரனின் சாட்சி (சங். 34:4).
உங்களை தேற்றும்படி கர்த்தர் தமது நாமத்தை உங்களுக்குத் தந்தருளுகிறார். “நான் முந்தினவரும் பிந்தினவரும் உயிருள்ளவருமாயிருக்கிறேன்” (வெளி. 1:17) ஆகவே, பயப்படாதிருங்கள் என்கிறார்.
இதன் அர்த்தம் என்ன? ஆரம்பத்திலிருந்த நான், கடைசிவரை உங்களோடுகூட இருப்பேன். ஆதியிலிருந்து அந்தம்வரை உங்களை வழிநடத்துவேன். உங்களுடைய விசுவாசத்தை ஆரம்பித்த நான், வெற்றியோடு ஓடி முடிக்க உதவி செய்வேன். “நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள். இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன்” (மத். 28:20). ஆகவே, பயப்படாதேயுங்கள் என்று சொல்லுகிறார்.
“நான் முந்தினவரும், நான் பிந்தினவருந்தானே; என்னைத்தவிர தேவன் இல்லையென்று, இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தரும், சேனைகளின் கர்த்தராகிய அவனுடைய மீட்பரும் சொல்லுகிறார்” (ஏசா. 44:6). ‘பிந்தினவர்’ என்ற வார்த்தைக்கு பிந்தி வருகிறவர் என்றும் தாமதமாக வருகிறவர் என்றும் அர்த்தமல்ல. என்றென்றும் மாறாதவர் என்பதையே அவ்வார்த்தை குறிக்கிறது. பழைய ஏற்பாட்டில் முந்தினவராய் இருந்தவர், புதிய ஏற்பாட்டிலே பிந்தினவராய் நம்மோடு இருக்கிறார்.
தேவபிள்ளைகளே, பழைய ஏற்பாடும், புதிய ஏற்பாடும் இயேசு கிறிஸ்துவே. முற்பிதாக்களோடு இருந்தவரும் இவரே. இன்று நம்மோடு இருக்கிறவரும் இவரே.
நினைவிற்கு:- “முந்தினவராயிருக்கிற கர்த்தராகிய நான்தானே, பிந்தினவர்களோடும் இருப்பவராகிய நான்தானே” (ஏசா. 41:4).