No products in the cart.
ஜுன் 19 – ஆண்டுகொள்ள ஒட்டாதிரும்!
“துணிகரமான பாவங்களுக்கு உமது அடியேனை விலக்கிக்காரும், அவைகள் என்னை ஆண்டுகொள்ள ஒட்டாதிரும்” (சங். 19:13).
தாவீதின் உருக்கமான ஜெபங்களிலே இதுவும் ஒன்று. பாவம் ஒரு மனுஷனை ஆளுகை செய்வது ஒரு பரிதாபமான நிலைமையாகும். “பாவஞ்செய்கிறவன் எவனும் பாவத்துக்கு அடிமையாயிருக்கிறான்” (யோவா. 8:34).
அதே சங்கீதத்தில் பாவத்தின் வளர்ச்சியைக் காணலாம். முதலாவது, பிழைகள், இரண்டாவது, மறைவான குற்றங்கள், மூன்றாவது, துணிகரமான பாவங்கள், நான்காவது, பெரும் பாதகங்கள் (சங். 19:12,13) எனப் பார்க்கிறோம்.
ஒருமுறை விழுந்துபோன ஒரு தேவ மனுஷனுக்காக ஒரு சகோதரி உபவாசித்து ஜெபித்தார். அவர் ஒரு காலத்தில் பரம ஈவை ருசித்தவராயும், எழுந்து பிரகாசிக்கிறவருமாயிருந்தவர். ஜெபித்துக்கொண்டிருந்த அந்தச் சகோதரிக்கு கர்த்தர் ஒரு தரிசனத்தைக் காண்பித்தார். ஒரு பெரிய வலுசர்ப்பத்தின் வாய்க்குள்ளே அந்த ஊழியர் நின்றுகொண்டிருக்கிறதையும், அந்த வாய்க்குள்ளிருந்து வலுசர்ப்பத்திற்காக அவர் பிரசங்கிக்கிறதையும் காண்பித்தார்.
கர்த்தர் அந்த சகோதரியிடம், “எத்தனையோமுறை அவனை உணர்த்தி எச்சரித்தேன். ஆனால் அவன் கீழ்ப்படியவில்லை. தானாகவே பாவ சந்தோஷத்திற்கு தன்னை விற்றுப்போட்டு, சர்ப்பத்தின் வாய்க்குள்ளாக சிக்கிக்கொண்டான். இனி அவனுக்காக விண்ணப்பம் செய்யாதே” என்று சொன்னார்.
வேதம் சொல்லுகிறது, “உம்முடைய வார்த்தையிலே என் காலடிகளை நிலைப்படுத்தி, ஒரு அநியாயமும் என்னை ஆளவொட்டாதேயும்” (சங். 119:133). “அவைகளால் உமது அடியேன் எச்சரிக்கப்படுகிறேன்; அவைகளைக் கைக்கொள்ளுகிறதினால் மிகுந்த பலன் உண்டு” (சங். 19:11). பாவம் ஆளுகைசெய்யாமல் இருக்கவேண்டுமானால், கர்த்தருடைய வார்த்தையிலே கால்கள் நிலைபெறவேண்டும். உங்களுடைய காலடிகள் கர்த்தருடைய வார்த்தையிலும், கர்த்தருடைய கட்டளையிலும், வேத வசனங்களிலும் உறுதிப்படுவதாக.
பாவ சோதனைகள் நிறைந்த இந்த உலகத்தில் அசுத்தங்கள் உங்களை ஆளுகைசெய்யாதபடி வேத வசனங்கள் உங்களைக் காத்துக்கொள்ளும். அவை ஆவியும், ஜீவனுமானவை. பரிசுத்தப்பாதையில் செல்வதற்கு உங்களுக்கு வழிகாட்டுபவை. ஆகவே வேதபுத்தகத்தை பொன்னிலும் பசும்பொன்னிலும் விலையேறப்பெற்றதாகக் காணுங்கள்.
வேதம் சொல்லுகிறது, “வாலிபன் தன் வழியை எதினால் சுத்தம்பண்ணுவான்? உமது வசனத்தின்படி தன்னைக் காத்துக்கொள்ளுகிறதினால்தானே” (சங். 119:9). “நான் உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்யாதபடிக்கு, உமது வாக்கை என்னிருதயத்தில் வைத்து வைத்தேன்” (சங். 119:11). ஒரு மனுஷனை ஆளுகை செய்யும்படி போராடுகிற மூன்று வல்லமைகளுண்டு. அவை மாம்சத்தின் இச்சை, கண்களின் இச்சை, ஜீவனத்தின் பெருமை ஆகியவையாகும் (1 யோவா. 2:16).
தேவபிள்ளைகளே, நீங்கள் இந்த மூன்று காரியங்களையும் விட்டு வெளியே வரவேண்டும். பாவ ஆளுகையிலிருந்து அன்பின் குமாரனுடைய ஆளுகைக்குள்ளே கடந்துவரவேண்டும். வேத வசனத்தின்படி உங்கள் வாழ்க்கையை ஸ்திரப்படுத்தவேண்டும்.
நினைவிற்கு:- “ஆவிக்கேற்றபடி நடந்துகொள்ளுங்கள், அப்பொழுது மாம்ச இச்சையை நிறைவேற்றாதிருப்பீர்கள். மாம்சம் ஆவிக்கு விரோதமாகவும், ஆவி மாம்சத்துக்கு விரோதமாகவும் இச்சிக்கிறது” (கலா. 5:16,17).