No products in the cart.
ஜுன் 18 – ஆட்டுக்குட்டியானவர்!
“மறுநாளிலே யோவான் இயேசுவைத் தன்னிடத்தில் வரக்கண்டு: இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி” என்றார் (யோவா. 1:29).
இயேசு தன்னிடத்தில் வரக்கண்ட யோவான்ஸ்நானன் தேவனைப்பற்றிய ஒரு விசேஷ அறிவைப் பெற்றுக்கொண்டார். அவர் சாதாரண ஆட்டுக்குட்டி அல்ல. உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற, ‘தேவ ஆட்டுக்குட்டி’. ஆம்! உலகத்தின் பாவங்களை சுமந்துதீர்க்கவே, தன்னைப் பாவநிவாரண பலியாக ஒப்புக்கொடுத்த தேவஆட்டுக்குட்டி.
ஆதியாகமம் முதற்கொண்டு, வெளிப்படுத்தின விசேஷம் வரைக்கும், ‘ஆட்டுக்குட்டியை’ அநேக இடங்களில் காண்கிறோம். “குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டிருக்கிறீர்களென்று அறிந்திருக்கிறீர்களே” (1 பேது. 1:19). அவர் உலகத்தோற்றத்திற்குமுன்னே குறிக்கப்பட்டவராய் இருந்தார்.
இயேசுகிறிஸ்துவை நீங்கள் அறிந்துகொள்ளவேண்டுமென்றால், உலகத்தோற்றத்திற்கு முன்பாகவே அவர் எப்படியிருந்தார், எப்படி முன்குறிக்கப்பட்டார் என்பதையெல்லாம் அறிந்துகொள்ளவேண்டும். அந்த அறிவு மகா ஆச்சரியமானது. வேதம் சொல்லுகிறது, “கர்த்தர் தமது கிரியைகளுக்குமுன், பூர்வமுதல் என்னைத் தமது வழியின் ஆதியாகக்கொண்டிருந்தார். பூமி உண்டாகுமுன்னும், ஆதிமுதற்கொண்டும் அநாதியாய் நான் அபிஷேகம்பண்ணப்பட்டேன்” (நீதி. 8:22,23).
“நான் அவர் (பிதா) அருகே செல்லப்பிள்ளையாயிருந்தேன்; நித்தம் அவருடைய மனமகிழ்ச்சியாயிருந்து, எப்பொழுதும் அவர் சமுகத்தில் களிகூர்ந்தேன். அவருடைய பூவுலகத்தில் சந்தோஷப்பட்டு, மனுமக்களுடனே மகிழ்ந்துகொண்டிருந்தேன்” (நீதி. 8:30,31). உலகத்தோற்றத்திற்கு முன்பாக, இயேசு எப்பொழுதும் பிதாவின் சமுகத்தில் செல்லப்பிள்ளையாக களிகூர்ந்துகொண்டிருந்தார். மறுபக்கம் பூவுலகத்தில் சந்தோஷப்பட்டு, மனுமக்களுடனே மகிழ்ந்துகொண்டிருந்தார்.
அப். யோவான், “ஆதியிலே வார்த்தை இருந்தது; அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது. அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அவர் ஆதியிலே தேவனோடிருந்தார். சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை” என்று குறிப்பிடுகிறார் (யோவா. 1:1-3).
இதே கருத்தை அப். பவுல் கொலோசெயருக்கு எழுதும்போது, “அவர் அதரிசனமான தேவனுடைய தற்சுரூபமும், சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறுமானவர். ஏனென்றால் அவருக்குள் சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது; பரலோகத்திலுள்ளவைகளும், பூலோகத்திலுள்ளவைகளுமாகிய காணப்படுகிறவைகளும் காணப்படாதவைகளுமான சகல வஸ்துக்களும், சிங்காசனங்களானாலும், கர்த்தத்துவங்களானாலும், துரைத்தனங்களானாலும், அதிகாரங்களானாலும், சகலமும் அவரைக்கொண்டும், அவருக்கென்றும் சிருஷ்டிக்கப்பட்டது. அவர் எல்லாவற்றிற்கும் முந்தினவர், எல்லாம் அவருக்குள் நிலைநிற்கிறது” (கொலோ. 1:15-17) என்று சொல்லுகிறார்.
அதே நேரத்தில், உலகத்தோற்றத்திற்கு முன்பாகவே தம்மை நமக்கென்று அர்ப்பணித்த தேவகுமாரனாகவும் அவர் இருக்கிறார். உலகத்தோற்றமுதல் அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டி என்ற பெயரைப் பெற்றார் (வெளி. 13:8).
தேவபிள்ளைகளே, அவர் உங்களுக்காக அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியாய் இருக்கிறார். ஆகவே உங்கள் பாவங்களுக்கு மன்னிப்பு உண்டு. உங்களுடைய வருங்காலத்தைக்குறித்த நம்பிக்கை உங்களுக்கு உண்டு.
நினைவிற்கு:- “நகரத்திற்கு வெளிச்சங்கொடுக்கச் சூரியனும் சந்திரனும் அதற்கு வேண்டுவதில்லை; தேவனுடைய மகிமையே அதைப் பிரகாசிப்பித்தது, ஆட்டுக்குட்டியானவரே அதற்கு விளக்கு” (வெளி. 21:23).