No products in the cart.
ஜுன் 04 – தயவுள்ளவர்!
“கர்த்தர் எல்லார்மேலும் தயவுள்ளவர்; அவர் இரக்கங்கள் அவருடைய எல்லாக் கிரியைகளின் மேலுமுள்ளது” (சங். 145:9).
கர்த்தரை அறிகிற அறிவே மேன்மையான அறிவு. ஆம், அவர் ‘தயவுள்ளவர்’ என்பதை மோசே பக்தன் அறிந்துகொண்டார். கர்த்தரும் தன்னுடைய நாமத்தை தயவுள்ளவராக மோசேக்கு காண்பித்தார். கர்த்தரோடு நெருங்கிப் பழகுகிறவர்கள், அவர் மிகுந்த தயவுள்ளவர் என்பதை அறிந்துகொள்ளுவார்கள்.
வேதம் சொல்லுகிறது, “தம்மில் அன்புகூர்ந்து, தமது கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கு அவர் ஆயிரம் தலைமுறைமட்டும் உடன்படிக்கையையும், தயவையும் காக்கிற உண்மையுள்ள தேவன்” (உபா. 7:9). மற்றவர்களுக்கு தயவு செய்ய வேண்டுமென்ற எண்ணம் இயேசுகிறிஸ்துவுக்கு இருந்தபடியால், அவர் நன்மைசெய்கிறவராய் சுற்றித்திரிந்தார் (அப். 10:38) என்று வேதத்தில் வாசிக்கிறோம். தேவையுள்ள அனைவருக்கும் அவர் தயவுபாராட்ட ஒருபோதும் தயங்கவில்லை.
ஒருநாள் மோசே கர்த்தரைப் பார்க்கவேண்டுமென்று விரும்பி, ‘உமது மகிமையை எனக்குக் காண்பித்தருளும்’ என்று ஜெபித்தார். கர்த்தர் தமது மகிமையை காண்பிப்பதற்குமுன்பாக, முதலாவது தனது தயவை அவருக்குக் காண்பிக்கவேண்டியதிருந்தது. அந்த தயவு இல்லாவிட்டால், அவரைப் பார்க்கிற ஒருவனும் உயிரோடு இருக்கமுடியாது. காரணம், அவர் சேரக்கூடாத ஒளியில் வாசம்பண்ணுகிறவர் (1 தீமோ. 6:16).
ஆகவே கர்த்தர் சொன்னார், “என்னுடைய தயையை எல்லாம் நான் உனக்கு முன்பாகக் கடந்துபோகப்பண்ணி, கர்த்தருடைய நாமத்தை உனக்கு முன்பாகக் கூறுவேன்; எவன்மேல் கிருபையாயிருக்கச் சித்தமாயிருப்பேனோ, அவன்மேல் கிருபையாயிருப்பேன். எவன்மேல் இரக்கமாயிருக்க சித்தமாயிருப்பேனோ, அவன்மேல் இரக்கமாயிருப்பேன் என்று சொல்லி” தம்முடைய மகிமையை மோசேக்கு காண்பித்தார் (யாத். 33:19,20).
மோசேக்கு தம்முடைய மகிமையை காண்பிக்க தயவுபாராட்டினவர், ஏனோக்கு அவரோடு நடக்க தயவுபாராட்டினார் (ஆதி. 5:24). நோவாவுக்கு கர்த்தரோடு சஞ்சரிப்பதற்கு தயவுபாராட்டினார் (ஆதி. 6:9). ஆபிரகாமுக்கு அளவற்ற தயவு காண்பித்து, சிநேகிதனாக அரவணைத்தார் (யாக். 2:23).
மட்டுமல்ல, முதிர்வயதிலே ஆபிரகாமுக்கு ஈசாக்கையும், ஆசீர்வாதமான சந்ததியையும் கொடுத்தார். அவர் பாராட்டின அளவற்ற தயவினாலே, ஆபிரகாமின் சந்ததியான இஸ்ரவேல் ஜனங்கள் பாலும் தேனும் ஓடுகிற கானானை சுதந்தரித்துக்கொண்டார்கள். தாங்கள் கட்டாத பட்டணங்களையும், நட்டாத திராட்சத் தோட்டங்களையும் அனுபவித்தார்கள்.
ஆவியின் கனிகளில் ஐந்தாவது கனி தயவாகும். தயவு என்ற வார்த்தையிலே இரக்கம், காருண்யம் ஆகியவையெல்லாம் கலந்திருக்கின்றன. “நன்மைசெய்ய மனுஷன் கொண்டிருக்கும் ஆசையே தயை” (நீதி. 19:22). “நீங்கள் என் நாமத்தினாலே, எதைக் கேட்பீர்களோ, குமாரனில் பிதா மகிமைப்படும்படியாக அதைச் செய்வேன்” (யோவா. 14:13) என்று கர்த்தர் உங்களுக்கு வாக்களிக்கிறார். “நாம் அனுபவிக்கிறதற்குச் சகலவித நன்மைகளையும் நமக்குச் சம்பூரணமாய் கொடுக்கிறார்” (1 தீமோ. 6:17).
கர்த்தர் உங்களுக்கு தயவுபாராட்டினதுபோல, நீங்களும் “ஒருவருக்கொருவர் தயவாயும், மனஉருக்கமாயும் இருந்து, கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்ததுபோல, நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்” (எபே. 4:32). தேவபிள்ளைகளே, நன்மை செய்ய சந்தர்ப்பம் கிடைக்கும்போது, அந்த சந்தர்ப்பத்தை நழுவ விட்டுவிடாதிருங்கள்.
நினைவிற்கு:- “தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படியே, நம்மை இயேசுகிறிஸ்து மூலமாய்த் தமக்குச் சுவிகாரபுத்திரராகும்படி முன்குறித்திருக்கிறார்” (எபே. 1:6).