Appam, Appam - Tamil

ஜனவரி 30 – உணர்வுள்ள இருதயம்!

“அவர் வந்து, பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக்குறித்தும், உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார் (யோவா. 16:8).

கர்த்தர்தாமே நமக்கு உணர்வுள்ள ஒரு இருதயத்தைத் தருகிறார். ஒரு மனிதன் தவறு செய்யும்போது அவனது மனசாட்சி அலறுகிறது. எந்த சபையில் பாவங்களைச் சுட்டிக்காட்டி உணர்த்தக்கூடிய உண்மையான தேவனுடைய ஊழியக்காரர் இருக்கிறார்களோ, அந்த சபை பாக்கியமுள்ளது.

இன்று அநேகம்பேர் வாக்குத்தத்தங்களை விரும்புகிறார்கள். ஆறுதலையும், தேறுதலையும் விரும்புகிறார்கள். இவர்கள் தாலாட்டுப் பாடல்களையும், ஆசீர்வாத வார்த்தைகளையும் விரும்புகிறார்களேதவிர, தங்கள் குறைகளைச் சீர்ப்படுத்திக்கொள்ள முன்வருவதில்லை. வாக்குத்தத்தங்கள் தேவைதான். அதே நேரத்தில், உங்கள் தவறுகளை சுட்டிக்காண்பித்து, கண்ணீரோடு உங்களுக்காய் ஜெபித்து, ஆலோசனை சொல்லக்கூடிய ஊழியர்கள் மிகவும் அவசியம்.

தாவீது ஒருமுறை துணிந்து பாவம் செய்தார். உப்பரிகையின்மேல் நின்று, இச்சையோடு ஒரு பெண்ணைப் பார்த்தார். இன்னொருவனின் மனைவி என்று அறிந்தும், அவனைப் போர்முனைக்கு அனுப்பிக் கொலைசெய்தார். புருஷன் இருக்கும்போதே விபசாரத்தில் ஈடுபட்டு, அவளது வயிற்றில் குழந்தையும் உண்டாகிவிட்டது. அதன்பின்பு அவளைத் திருமணம் செய்து அரமனைக்குக் கொண்டுவந்தார். அது பாவம் என்று உணரவேயில்லை. ஒரு வருடம் கடந்து போயிற்று.

அப்பொழுது கர்த்தர் நாத்தான் தீர்க்கதரிசியை தாவீதினிடம் அனுப்பினார். “ஐயா, ஒரு பெரிய பணக்காரனுக்கு நிறைய ஆடுமாடுகள் இருந்தன. அவன் தன் வீட்டுக்கு வந்த ஒரு விருந்தாளிக்கு அந்த ஆடுகளில் ஒன்றை சமைத்து விருந்து கொடுக்காமல், அருகில் இருந்த ஒரு ஏழை வீட்டிலுள்ள ஒரே ஆட்டைப் பிடித்துக்கொண்டு வந்து விருந்து வைத்துவிட்டான். இப்போது அந்த ஏழை அழுகிறான்” என்று நாத்தான் தீர்க்கதரிசி தாவீதிடம் சொன்னார்.

அதைக் கேட்டதும் தாவீது கோபமுற்று, அந்த தீர்க்கதரிசியிடம் அந்த பணக்காரனுக்கு மரணதண்டனை விதிக்கும்படி கூறினார். அதற்கு அந்த தீர்க்கதரிசி, “நீயே அந்த மனிதன்” என்று சொல்லி தாவீதின் அக்கிரமங்களையெல்லாம் உணர்த்தினார். அப்பொழுதுதான் தாவீது தன் தவறை உணர்ந்து கண்ணீரோடு பாவ அறிக்கை செய்து 51-ம் சங்கீதத்தை எழுதினார். நருங்குண்ட நொறுங்குண்ட இருதயத்தோடு கர்த்தரிடத்தில் பாவமன்னிப்புக்காக கெஞ்சி ஜெபம்பண்ணினார்.

“தன் பிழைகளை உணருகிறவன் யார்? மறைவான குற்றங்களுக்கு என்னை நீங்கலாக்கும். துணிகரமான பாவங்களுக்கு உமது அடியேனை விலக்கிக்காரும், அவைகள் என்னை ஆண்டுகொள்ள ஒட்டாதிரும்; அப்பொழுது நான் உத்தமனாகி, பெரும்பாதகத்துக்கு நீங்கலாயிருப்பேன்” (சங். 19:12,13) என்று கண்ணீரோடு மனம் திரும்பினார். “தேவனே, என்னை ஆராய்ந்து, என் இருதயத்தை அறிந்துகொள்ளும்; என்னைச் சோதித்து, என் சிந்தனைகளை அறிந்துகொள்ளும். வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று பார்த்து, நித்திய வழியிலே என்னை நடத்தும்” (சங். 139:23,24) என்று புலம்பினார்.

தேவபிள்ளைகளே, உங்களை நீங்களே ஆராய்ந்தறிய முற்படும்போது, கர்த்தர் உங்கள் தவறை உங்கள் இருதயத்தில் உணர்த்துவார். நீங்கள் கர்த்தரிடத்தில் கெஞ்சி மன்றாடும்போது, கர்த்தர் உங்களை மன்னிப்பார். ஒரு உணர்வுள்ள இருதயத்தை உங்களுக்குத் தந்தருளுவார்.

நினைவிற்கு:- “மற்றவர்களுக்குப் பிரசங்கம்பண்ணுகிற நான்தானே ஆகாதவனாய்ப் போகாதபடிக்கு, என் சரீரத்தை ஒடுக்கிக் கீழ்ப்படுத்துகிறேன் (1கொரி. 9:27).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.