No products in the cart.
ஜனவரி 29 – முடிவு பரியந்தம்!
“முடிவுபரியந்தம் நிலைத்திருப்பவனே இரட்சிக்கப்படுவான்” (மத். 10:22).
கர்த்தரில் நிலைத்திருக்கவேண்டியது அவசியம். கர்த்தரில் நிலைத்திருப்பது எப்படி என்பதற்கென்றே கர்த்தர் ஒரு முழு அதிகாரத்தையும் எழுதி வைத்தார். அதுதான் யோவான் 15-ம் அதிகாரம். “என்னில் நிலைத்திருங்கள், நானும் உங்களில் நிலைத்திருப்பேன்; கொடியானது திராட்சச்செடியில் நிலைத்திராவிட்டால் அது தானாய்க் கனிகொடுக்கமாட்டாததுபோல, நீங்களும் என்னில் நிலைத்திராவிட்டால், கனிகொடுக்கமாட்டீர்கள்” (யோவா. 15:4).
எதுவரையிலும் நாம் அவரில் நிலைத்திருக்கவேண்டும்? முடிவுபரியந்தமும் அவரில் நிலைத்திருக்கவேண்டும். ஓட்டப்பந்தயத்தில் ஒருவன் வேகமாய் ஓடி பாதியிலே நின்றுவிட்டால் அவன் பெறுவது தோல்வியே. மல்யுத்தத்தில் வீரதீரமாய் ஒருவன் யுத்தம் செய்தாலும் போட்டியின் கடைசி நிமிஷத்தில் வீழ்த்தப்பட்டுவிட்டால் அவன் பெறுவது தோல்வியே.
ஆகவே, “மரணபரியந்தம் உண்மையாயிரு, அப்பொழுது ஜீவகிரீடத்தை உனக்குத் தருவேன்” (வெளி. 2:10) என்று ஆண்டவர் சொல்லுகிறார். ஒன்று நம்முடைய மரணமாய் இருக்கலாம். அல்லது கர்த்தருடைய வருகையாய் இருக்கலாம். ஆனால் நாம் முடிவுபரியந்தமும் நிலைத்திருக்கும்போதுதான் பரலோக இராஜ்யத்திற்குள் பிரவேசிக்கமுடியும்.
நம்முடைய ஓட்டத்திலே நம்மை சோர்ந்துப்போகப்பண்ணி, பாதியிலே நின்றுவிடச்செய்யும்படி சத்துரு எவ்வளவோ போராடுகிறான். உலகம், மாமிசம், பிசாசைக் கொண்டுவருகிறான். பகைகளையும், வெறுப்புகளையும் சாத்தான் உமிழ்ந்துகொண்டே இருக்கிறான். இயேசு சொன்னார், “என் நாமத்தினிமித்தம் நீங்கள் எல்லாராலும் பகைக்கப்படுவீர்கள்; முடிவுபரியந்தம் நிலைத்திருப்பவனே இரட்சிக்கப்படுவான்” (மத். 10:22). “அக்கிரமம் மிகுதியாவதினால் அநேகருடைய அன்பு தணிந்துபோம். முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான்” (மத். 24:12,13).
சாத்தான் சோதனையைக் கொண்டுவரும்போது, கர்த்தர் தம்முடைய அன்பைக் கொண்டுவருகிறார். அவருடைய அன்பு முடிவுவரை நிலைநிறுத்தும் அன்பு. “தாம் இவ்வுலகத்திலிருக்கிற தம்முடையவர்களிடத்தில் அன்புவைத்தபடியே, முடிவுபரியந்தமும் அவர்களிடத்தில் அன்புவைத்தார்” (யோவா. 13:1).
கிறிஸ்துவிலே நிலைத்திருங்கள். மட்டுமல்ல, அவருடைய அன்பிலும் நிலைத்திருங்கள், அவருடைய வார்த்தையிலும் நிலைத்திருங்கள். “நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும்” (யோவா. 15:7). நாம் நிலைத்திருக்கவேண்டிய இன்னொரு காரியமுமுண்டு. அதுதான் தேவனுடைய அபிஷேகம். பரிசுத்த ஆவியானவரின் ஐக்கியம்.
வேதம் சொல்லுகிறது, “நீங்கள் அவராலே பெற்ற அபிஷேகம் உங்களில் நிலைத்திருக்கிறது, ஒருவரும் உங்களுக்குப் போதிக்கவேண்டுவதில்லை; அந்த அபிஷேகம் சகலத்தையுங்குறித்து உங்களுக்குப் போதிக்கிறது” (1 யோவா. 2:27). தேவபிள்ளைகளே, எந்த சூழ்நிலையிலும் கர்த்தரைவிட்டு விலகாமல் அவரை உறுதியாய்ப் பற்றிக்கொண்டு முடிவுபரியந்தமும் நிலைத்திருப்பீர்களா? நிச்சயமாகவே ஜீவகிரீடத்தைப் பெறுவீர்கள்.
நினைவிற்கு:- “ஒருவன் என்னில் நிலைத்திராவிட்டால், வெளியே எறியுண்ட கொடியைப்போல அவன் எறியுண்டு உலர்ந்து போவான்; அப்படிப்பட்டவைகளைச் சேர்த்து, அக்கினியிலே போடுகிறார்கள்; அவைகள் எரிந்துபோம்” (யோவா. 15:6).