Appam, Appam - Tamil

ஜனவரி 28 – நவமான இருதயம்!

“உங்களுக்கு நவமான இருதயத்தைக் கொடுத்து, உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியைக் கட்டளையிட்டு, கல்லான இருதயத்தை உங்கள் மாம்சத்திலிருந்து எடுத்துப்போட்டு, சதையான இருதயத்தை உங்களுக்குக் கொடுப்பேன் (எசே. 36:26).

நவமான இருதயம் என்று வேதம் சொல்லுகிறது. நவம் என்றால் புதிது என்று அர்த்தம். ‘நவ எருசலேமின் மணவாளன்’ என்று நாம் பாடுகிறோம். நவமான திராட்சரசம் என்று சொல்லுகிறோம். ஆம் கர்த்தர் எல்லாவற்றையும் புதிதாக்கும்போது நவமான இருதயத்தை நமக்குத் தருகிறார். புது இரட்சிப்பின் சந்தோஷத்தால் நிரம்பியிருக்கவும், தேவனோடுள்ள புதிய உறவில் முன்னேறிச் செல்லவும் நமக்கு நவமான இருதயம் தேவை.

கர்த்தர் ஒரு மனிதனைப் பார்க்கும்போது அவனுடைய இருதயத்தைத்தான் பார்க்கிறார். மனுஷன் முகத்தைப் பார்ப்பான்; கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார் (1 சாமு. 16:7). இருதயத்தைப் பார்க்கிற ஆண்டவர், நம்முடைய இருதயத்திலே அக்கிரம சிந்தை இருக்குமென்றால் ஒரு நாளும் நம்முடைய ஜெபத்துக்கு பதில் கொடுக்கமாட்டார்.

புதிய இருதயத்தைப் பெற்றுக்கொள்ளும்படி பழைய இருதயத்தைக் களைந்துபோடுங்கள். மாம்சத்தால் கறைப்பட்ட வஸ்திரங்களை புறம்பே தள்ளிப்போடுங்கள். சுயநீதியாகிய அழுக்கான கந்தைகளை உதறிப்போடுங்கள். எல்லாவற்றையும் புதிதாக்கும் ஆண்டவரே, என்ற புதிய சிந்தனைகளோடு இந்த புதிய வருடத்திற்குள் கடந்து வாருங்கள்.

பழைய ஏற்பாட்டிலே ஆசா என்று சொல்லப்பட்ட ஒரு இராஜாவைக் குறித்து 2 நாளாகமம் புத்தகத்தில் படிக்கிறோம். அவர் தம்முடைய இராஜ்யம் எல்லாவற்றையும் சுத்திகரித்து தூய்மைப்படுத்த விரும்பினார். ஆகவே அவர் அந்நிய தேவர்களின் பலிபீடங்களையும், மேடைகளையும் அகற்றி, சிலைகளை உடைத்து, விக்கிரகத்தோப்புகளை வெட்டி, தங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரைத் தேடவும், நியாயப்பிரமாணத்தின்படியும் கற்பனையின்படியும் செய்ய யூதாவுக்குக் கற்பித்தார் என்று நாம் வேதத்தில் வாசிக்கிறோம் (2 நாளா. 14:3,4). அவர் இஸ்ரவேல் தேசத்தை சுத்திகரித்ததுடன், தான் யுத்தம்செய்து கைப்பற்றிய பட்டணங்களிலுள்ள அருவருப்புகளை அகற்றி கர்த்தருடைய மண்டபத்தின் முன்னிருக்கிற கர்த்தருடைய பலிபீடத்தைப் புதுப்பித்தார் (2 நாளா. 15:8).

கர்த்தர் நம்முடைய வாழ்க்கையிலே எல்லாவற்றையும் புதிதாக்கி பூரணமாகப் புதிய மகிமையான பாதையிலே நடத்தவேண்டுமென்றால், நாமும் அவருக்குக் கீழ்ப்படிந்து நடக்கவேண்டும். எவற்றையெல்லாம் நம்முடைய வாழ்க்கையிலிருந்து அகற்றவேண்டுமோ அவற்றையெல்லாம் தீர்மானத்தோடும், மனஉறுதியோடும் அகற்றிப்போடவேண்டும்.

பழைய பாவ வாழ்க்கையையும், உலக சிநேகிதங்களையும், தேவனுக்குப் பிரியமில்லாதவைகளையும் நம்மைவிட்டு அகற்றும்போதுதான் கர்த்தரும் நம்முடைய வாழ்க்கையிலே குறுக்கிட்டு எல்லாவற்றையும் புதிதாக்க முடியும். பழையவைகளை நீக்கிப்போடுவதோடு நாம் நின்றுவிடக்கூடாது. கிறிஸ்துவோடுள்ள புதிய ஐக்கியத்திற்குள்ளும், புதிய ஆரம்பத்திற்குள்ளும் கடந்துவரவேண்டும். தேவபிள்ளைகளே, உங்களுடைய உள்ளம் புதிய விதைகளாகிய வேத வசனத்தினால் நிரப்பப்படவேண்டும்.

நினைவிற்கு:- “நீங்கள் வளரும்படி, புதிதாய்ப் பிறந்த குழந்தைகளைப்போல, திருவசனமாகிய களங்கமில்லாத ஞானப்பாலின்மேல் வாஞ்சையாயிருங்கள் (1 பேது. 2:3).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.