No products in the cart.
ஜனவரி 25 – நீதியாகிய கனி!
“நீதியாகிய கனியானது சமாதானத்தை நடப்பிக்கிறவர்களாலே சமாதானத்திலே விதைக்கப்படுகிறது” (யாக். 3:18).
வேதபுத்தகம் முழுவதும் பல்வேறு வகையான கனிகளால் நிரம்பியிருக்கிறது. சிருஷ்டிப்பிலே கர்த்தர் ஏராளமான கனிவர்க்கங்களை உண்டுபண்ணினார். “பூமியின்மேல் தங்களில் தங்கள் விதையையுடைய கனிகளைத் தங்கள் தங்கள் ஜாதியின்படியே கொடுக்கும் கனிவிருட்சங்களையும் முளைப்பிக்கக்கடவது என்றார். அது அப்படியே ஆயிற்று” (ஆதி. 1:11).
ஏதேன் தோட்டத்தை கர்த்தர் சிருஷ்டித்தபோது அங்கே அருமையான கனிதரும் விருட்சங்களை நாட்டினார். வேதம் சொல்லுகிறது, “பார்வைக்கு அழகும், புசிப்புக்கு நலமுமான சகலவித விருட்சங்களையும், தோட்டத்தின் நடுவிலே ஜீவவிருட்சத்தையும், நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தையும் பூமியிலிருந்து முளைக்கப்பண்ணினார்” (ஆதி. 2:9).
இன்றைக்கும் நம்மைச்சூழ பல்வேறு வகையான கனிவர்க்கங்களைக் காண்கிறோம். அந்தந்த காலத்துக்கு ஏற்றவாறு பழ வகைகளும் மாறிமாறி வந்துகொண்டே இருக்கின்றன. சில மாதங்களில் மாம்பழம், சில மாதங்களில் திராட்சப்பழம், சில மாதங்களில் ஆப்பிள்பழம் என மாறிமாறி விளைகின்றன. மேலும், வருடம் முழுவதும் வாழைப்பழங்கள் நம் இருதயத்தை மகிழ்வித்துகொண்டே இருக்கின்றன. கர்த்தர் எப்படி விதவிதமான பழங்களை வருடம் முழுவதும் கிடைக்கும்படி அநுக்கிரகம் செய்திருக்கிறார் பாருங்கள்!
ஆனால், மனுஷனும் அவருக்கு கனிகொடுக்க வேண்டுமென்று அவர் விரும்புகிறார். நாம் கர்த்தருக்குக் கொடுக்கவேண்டிய கனிகள் பலவுண்டு. சமுதாயத்துக்கு கொடுக்கவேண்டிய கனிகளுமுண்டு. குடும்பத்திற்கு கொடுக்கவேண்டிய கனிகளுமுண்டு. அதே நேரத்தில் கொடுக்கக்கூடாத கசப்பான கனிகளைக்குறித்தும் வேதம் சொல்லுகிறது. பொய்யின் கனிகளைக்குறித்து ஓசி. 10:13லே நாம் வாசிக்கிறோம். மரணத்துக்கேதுவான கனிகளைக்குறித்து ரோமர் 7:5லே வாசிக்கிறோம்.
நாம் கர்த்தருக்குக் கொடுக்கவேண்டிய கனிகள் எவை? முதலாவது, மனம் திரும்புதலுக்கு ஏதுவான கனியை நாம் கொடுக்க வேண்டும் (மத். 3:8). கொடுக்காத பட்சத்தில் என்ன நடக்கும்? “கோடாரியானது மரங்களின் வேர் அருகே வைக்கப்பட்டிருக்கிறது. ஆகையால், நல்ல கனிகொடாத மரமெல்லாம் வெட்டுண்டு அக்கினியிலே போடப்படும்” (மத். 3:10). அப். பவுல் தீத்துவுக்கு எழுதும்போது, “கனியற்றவர்களாயிராதபடி குறைவுகளை நீக்குகிறதற்கேதுவாக நற்கிரியைகளைச் செய்யப்பழகட்டும்” (தீத். 3:14) என்று எழுதுகிறார்.
தேவன் நம்மிடத்தில் எதிர்பார்க்கிற மற்ற கனிகள் எவை? அது தேவனுடைய ராஜ்யத்துக்கு ஏற்ற கனி (மத். 21:43). உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திரபலி (எபி. 13:15). நீதியாகிய பலி (யாக். 3:18) (பிலி. 1:10). இப்படிப்பட்ட கனிகளை நாம் கொடுக்கும்போது நம் அருமை ஆண்டவருடைய இருதயம் மகிழ்ச்சியடைகிறது. நாம் தேவனுக்குமட்டுமல்லாமல், நம்மைச் சூழ உள்ள ஜனங்களுக்கும் கனி கொடுக்கும்படியாகவும் கர்த்தர் நம்மை ஏற்படுத்தியிருக்கிறார். தேவபிள்ளைகளே, சகலவித நற்கிரியைகளுமாகிய கனிகளைத் தந்து தேவனை அறிகிற அறிவில் விருத்தியடைந்து, கர்த்தருக்கு பிரியமுண்டாக அவருக்கு பாத்திரராய் நடந்துகொள்ளுங்கள் (கொலோ. 1:10).
நினைவிற்கு:- “நமது வாசல்களண்டையிலே புதியவைகளும் பழையவைகளுமான சகலவித அருமையான கனிகளுமுண்டு; என் நேசரே! அவைகளை உமக்கு வைத்திருக்கிறேன்” (உன். 7:13).