No products in the cart.
ஜனவரி 18 – இழந்துபோன மேன்மை
“கர்த்தர் உன்னை வாலாக்காமல் தலையாக்குவார், நீ கீழாகாமல் மேலாவாய்” (உபா. 28:14).
அநேகர் வாழ்க்கையிலே தோல்வி அடைந்தவர்களாய், வியாபாரத்தில் நஷ்டம் அடைந்தவர்களாய் எல்லாவற்றையும் இழந்து பரிதாபமாய் நிற்கும்பொழுது, பழைய மேன்மைகளையும், சீர் சிறப்புகளையும் எண்ணிப்பார்ப்பதுண்டு.
‘முன்பு எனக்கு அழகான காரும், வீடும், சேமிப்பும் இருந்தன. வேலைக்காரர்கள் இருந்தார்கள். இன்றைக்கு எல்லாவற்றையும் இழந்தவனாய் நிற்கிறேனே’ என்று துயரத்தோடு சொல்லுவதுண்டு. கர்த்தர் இழந்துபோனதைத் தேடுகிறவர். இழந்துபோனதைத் திரும்பத்தந்து குடும்பத்தைக் கட்டி எழுப்புகிறவர். “நீ வாலாகாமல் தலையாவாய். கீழாகாமல் மேலாவாய்” என்று வாக்களித்திருக்கிறாரே.
ஒரு வியாபாரி தன் வியாபாரத்தில் நஷ்டமடைந்து மிகவும் நொடிந்துபோனார். பணக்கஷ்டத்தில் நாலுபேர் மத்தியில் நான் எப்படி தலைநிமிர்ந்து நடப்பது என்று தன்னைத்தானே நொந்துகொண்டார். வெளியிலே வருவதற்கே வெட்கப்பட்டார். நாளடைவில் அவருக்கு பைத்தியம் பிடிக்கும் நிலை வந்துவிட்டது.
போதகர் அவர் நிலையை அறிந்து அவரை அழைத்து, “நீங்கள் தாழ்ந்தவரல்ல; நீங்கள் விசேஷித்தவர்கள். விசேஷித்த இயேசு உங்களோடல்லவா இருக்கிறார்! நீங்கள் எதிர்காலத்தை இழந்துவிடவில்லை; கிறிஸ்துவின் கிருபைகளை இழந்துவிடவில்லை. கிறிஸ்துவின் கையைப் பிடித்துக்கொள்ளுங்கள். நீங்கள் மிகவும் உயரப்போகிறீர்கள்; கர்த்தர் உங்களை அதிகமாய் ஆசீர்வதிக்கப்போகிறார்” என்று ஜெபத்தோடு சொன்ன வார்த்தைகள் அவரில் வல்லமையாகக் கிரியை செய்தது.
உற்சாகத்தோடு எழும்பி வீட்டிற்குள் சென்றவர் உடனே வேதத்தை எடுத்து மிகவும் ஆர்வமாகப் படித்தார். “நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள்” என்ற வசனம் அவர் உள்ளத்தைத் தொடவே உடனே ஒரு சிறு தள்ளுவண்டியில் உப்பு வியாபாரம் ஆரம்பித்தார். கர்த்தர் கூடவே இருந்தார். படிப்படியாக உயர்ந்து பெரிய உப்பளங்களை வாங்கும்படி தேவன் ஆசீர்வதித்தார். லாரிகள் வாங்கினார். பங்களாக்கள் வாங்கினார். தேவனுடைய ஊழியத்திற்கு உற்சாகமாய்க் கொடுத்தார். தேவனில் களிகூர்ந்தார்.
அநேகர் தங்கள் தொழிலில் நஷ்டம் அடையும்பொழுது எப்படியாவது கடன் வாங்கி சரிசெய்துவிடலாம் என்று எண்ணுகிறார்கள். வட்டிக்குக் கடன் கொடுக்கிறவர்களைத் தேடி ஓடுகிறார்கள். இங்கே கடன் வாங்கி அங்கே அடைத்து விடலாம். அங்கே கடன் வாங்கி இங்கே சமாளித்துவிடலாம் என்று எல்லாம் சிந்திக்கிறார்கள். ஆனால் “கடன் வாங்காதே” என்று திரும்பத் திரும்ப வேதம் நமக்குச் சொல்லுகிறது.
நீங்கள் எல்லாவற்றையும் இழந்துபோன நிலைமையிலிருக்கிறீர்களா? கர்த்தருடைய பாதத்தில் அமர்ந்து, உங்களை ஆராய்ந்து பாருங்கள். ‘ஏன் இது எனக்கு நேரிட்டது, நான் எந்த விஷயத்திலாகிலும் கர்த்தரை துக்கப்படுத்தி இருக்கிறேனா, அவருடைய வார்த்தைகளை மீறி நடந்திருக்கிறேனா, என் கைகளிலே அக்கிரமங்கள் உண்டா’ என்பதை சோதித்துப்பாருங்கள். கோணலானவைகளை செவ்வையாக்கும்பொழுது கர்த்தர் நிச்சயமாகவே உங்களுக்கு ஒரு புதிய வழியைத் திறந்து உங்களை மேன்மைப்படுத்துவார்.
நினைவிற்கு:- “ஏற்றகாலத்தில் உன் தேசத்திலே மழை பெய்யவும், நீ கையிட்டுச் செய்யும் வேலைகளையெல்லாம் ஆசீர்வதிக்கவும், கர்த்தர் உனக்குத் தமது நல்ல பொக்கிஷசாலையாகிய வானத்தைத் திறப்பார்; நீ அநேகம் ஜாதிகளுக்குக் கடன்கொடுப்பாய், நீயோ கடன் வாங்காதிருப்பாய்” (உபா. 28:12).