bo togel situs toto musimtogel toto slot musimtogel musimtogel musimtogel masuk musimtogel login musimtogel toto
Appam, Appam - Tamil

ஜனவரி 17 – புதிய பெலன்!

“என் மகிமை என்னில் செழித்தோங்கி, என் கையிலுள்ள என் வில் புதுப்பெலன் கொண்டது” (யோபு 29:20).

கர்த்தர் புதிய பெலனை உங்களுக்கு வாக்களிக்கிறார். உன்னதமானவருடைய பெலன் உங்கள்மேல் நிழலிடும்பொழுது உங்களுடைய மகிமை செழித்தோங்கும். உங்களுடைய கையில் உள்ள வில் புது பெலன்கொள்ளும். ஆம்! கர்த்தர் எல்லாவற்றையும் புதிதாக்கவேண்டுமென்று விரும்புகிறார்.

உங்கள் பிரச்சனைக்கும், போராட்டத்திற்கும் நிச்சயமாகவே ஒரு முடிவு உண்டு. அது எப்பொழுதும் தொடர்ந்து வந்துகொண்டிருக்கப்போவதில்லை. கர்த்தர் காயப்படுத்தினாலும் காயம் கட்டுகிறவர். நீங்கள் துயரப்பட்ட நாட்களுக்கும், வேதனை அனுபவித்த வருஷங்களுக்கும் தக்கதான செழிப்பான வருஷங்களை உங்களுக்குத் தந்தருள்வார்.

யோபு பக்தனுடைய வாழ்க்கையிலே எப்படி அவர் புது பெலனைப் பெற்றுக்கொண்டார் என்பதையும், எப்படி மகிமை திரும்பவும் அவரில் செழித்தோங்கியது என்பதையும், எப்படி ஒரு நாள் தேவனுடைய கரம் அவருடைய வாழ்க்கையில் குறுக்கிட்டது என்பதையும் மேலேயுள்ள வசனம் விளக்குகிறது.

முன்பு இழந்துபோன யாவற்றையும் அவர் இரட்டத்தனையாய்த் திரும்பப் பெற்றுக்கொண்டார். பதினாலாயிரம் ஆடுகளும், ஆறாயிரம் ஒட்டகங்களும், ஆயிரம் ஏர்களும், ஆயிரம் கழுதைகளும் அவருக்கு உண்டாயின. அவருடைய கையின் வில் புது பெலன் கொண்டது.

நம்முடைய தேவன், நம்பிக்கையற்ற இடத்தில் நம்பிக்கையை உண்டாக்குகிறவர். கண்ணீரை ஆனந்தக் களிப்பாக மாற்றுகிறவர். தலை கவிழ்ந்து நின்ற இடத்தில் தலை நிமிர்ந்து உற்சாகமாய் நடக்கப்பண்ணுகிறவர். பெலவீனத்தை மாற்றி புதிய பெலத்தால் இடை கட்டுகிறவர்.

ஆகவே அவரில் மகிழ்ந்து களிகூருவோமாக! “கர்த்தர் என் பெலனும் என் கீதமுமானவர்” என்று உற்சாகமாய் கூறுவோமா? (சங். 118:14). “என் பெலனாகிய கர்த்தாவே, உம்மில் அன்பு கூருவேன்” (சங். 18:1). “என்னை பலத்தால் இடைகட்டி, என் வழியை செவ்வைப்படுத்துகிறவர் தேவனே” (சங். 18:32).

ஒவ்வொருநாளும் புதிய பெலனைப் பெற்றுக்கொள்ளும்படி கர்த்தருடைய பாதத்தில் அமர்ந்துவிடுங்கள். அவரிடத்திலிருந்துதான் தேவபெலன் உங்களில் இறங்கி வருகிறது. அவர்தான் தள்ளாடுகிற முழங்கால்களை பெலப்படுத்துகிறவர்.

சூரைச்செடியின்கீழ் சோர்வோடுகூட படுத்து நித்திரைப் பண்ணிக்கொண்டிருந்த எலியாவை தேவதூதன் தட்டி எழுப்பி போஜனம் கொடுத்தான். அது எலியாவை வல்லமையாய்ப் பெலப்படுத்திற்று. அவருடைய சோர்வு முழுவதுமாக அகன்றுபோனது. எலியா எழுந்திருந்து, புசித்து, குடித்து, அந்த போஜனத்தின் பெலத்தினால் நாற்பது நாள் இரவும், பகலும் ஓரேப் என்னும் தேவனுடைய பர்வதம் மட்டும் நடந்துபோனான் (1 இராஜா. 19:8).

மீகா தீர்க்கதரிசி சொல்லுவதைப் பாருங்கள் “நானோ யாக்கோபுக்கு அவன் மீறுதலையும், இஸ்ரவேலுக்கு அவன் பாவத்தையும் அறிவிக்கும்படி, கர்த்தருடைய ஆவி அருளிய பலத்தினாலும், நியாயத்தினாலும், பராக்கிரமத்தினாலும் நிரப்பப்பட்டிருக்கிறேன்” (மீகா 3:8). தேவபிள்ளைகளே, நீங்கள் தேவனுடைய பர்வதத்திற்குக் கடந்து வரும்படியாக கர்த்தர் உங்களை பெலப்படுத்துகிறார்.

நினைவிற்கு:- “உம்மிலே பெலன்கொள்ளுகிற மனுஷனும், தங்கள் இருதயங்களில் செவ்வையான வழிகளைக் கொண்டிருக்கிறவர்களும் பாக்கியவான்கள்” (சங். 84:5).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.