No products in the cart.
ஜனவரி 15 – அனல்கொண்ட இருதயம்!
“என் இருதயம் எனக்குள்ளே அனல்கொண்டது; நான் தியானிக்கையில் அக்கினி மூண்டது; அப்பொழுது என் நாவினால் விண்ணப்பம் செய்தேன்” (சங். 39:3).
தியான வாழ்வே இருதயத்துக்குள் அக்கினியையும், அனலையும் கொண்டுவருகிறது. ஈசாக்கு ஒரு தியான புருஷனாயிருந்தார். மாலை நேரமாகும்போது தனிமையாகச் சென்று கர்த்தரைக்குறித்தும், அவருடைய வாக்குத்தத்தங்களைக்குறித்தும் தியானிக்கிற பழக்கத்தைக்கொண்டிருந்தார். அதற்கு அடுத்தபடியான மிகப் பெரிய தியான புருஷன் என்றால் அது தாவீதுதான். “கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்” (சங். 1:2) என்று அவர் எழுதுகிறார்.
எல்லா தியானத்திலும் மிக மேன்மையான தியானம் சிலுவையைக்குறித்த தியானமே. எவ்வளவுக்கெவ்வளவு சிலுவையிலே தொங்கிய கிறிஸ்துவைக்குறித்து நீங்கள் தியானம்பண்ணுகிறீர்களோ, அவ்வளவுக்கவ்வளவு உங்கள் இருதயம் அனல்கொள்ளும். தேவனுடைய அன்பு உங்களில் பெருக்கெடுக்கும்.
ஒரு தேவனுடைய ஊழியக்காரரை கர்த்தர் வல்லமையாய் பயன்படுத்தினார். காரணம், அவர் தம்முடைய ஜெபத்தில் மூன்று நாட்கள் அல்லது நான்கு நாட்கள் தேவசமுகத்தில் விழுந்து கிடந்து ஊக்கமாய் ஜெபிப்பார். “நான் முழங்கால்படியிடும்போதெல்லாம், சிலுவையில் முள்முடி சூட்டப்பட்ட அவருடைய தலையைக் காண்பேன். ஒவ்வொரு காயமாக எண்ணி எண்ணி, இது எனக்காக அல்லவா என்று சொல்லி கண்ணீர் சிந்துவேன். தேவனுடைய அன்பு என் இருதயத்தில் அனல்மூட்டும். கிருபையின் ஆவியை என்மேல் ஊற்றி மணிக்கணக்கில் ஜெபிக்க கர்த்தர் எனக்குப் பெலன் தருவார்” என்று அவர் சொன்னார்.
தேவபிள்ளைகளே, சிந்தனைகளை ஒருமுகப்படுத்தி கல்வாரி சிலுவையை நோக்கிப்பாருங்கள். பாவ எண்ணங்களை உங்களைவிட்டு அகற்ற இயேசுவின் இரத்தத்தை தியானியுங்கள். கர்த்தருடைய பல்வேறு நாமங்களைக்குறித்து தியானியுங்கள். அவருடைய குணாதிசயங்களையும், தெய்வீக சுபாவங்களையும்குறித்து தியானியுங்கள். அவர் செய்த அற்புதங்களையெல்லாம் தியானியுங்கள். அவர் பேசிய வல்லமையான வார்த்தைகளையும், வாக்குத்தத்தங்களையும் தியானியுங்கள்.
சங்கீதக்காரர் சொல்லுகிறார், “நான் அவரைத் தியானிக்கும் தியானம் இனிதாயிருக்கும்; நான் கர்த்தருக்குள் மகிழுவேன்” (சங். 104:34). தியானத்தைத் தொடர்ந்து வரும் மகிழ்ச்சி இனிதானதாயிருக்கும் என்று தாவீது எழுதுகிறார். கர்த்தர் செய்த நன்மைகளை நினைவுகூரும்போதும், கர்த்தர் உங்களை நடத்திவந்த பாதைகளை எண்ணிப்பார்க்கும்போதும் நிச்சயமாகவே உங்களுடைய உள்ளத்தில் சந்தோஷம் உண்டாகும். கர்த்தர் செய்த நன்மைகளை தியானிக்க, தியானிக்க, பரலோக அக்கினி இறங்கி வருவதை உணருவீர்கள். உங்களை அறியாமல் கர்த்தரைத் துதிக்கத் தோன்றும். ஆவியோடும் உண்மையோடும் ஆராதிக்க கர்த்தரால் ஏவப்படுவீர்கள்.
கர்த்தரைத் துதிக்க எல்லா நேரமுமே ஏற்ற நேரம்தான். இருப்பினும், அதிகாலை வேளை கர்த்தருக்கு முதலிடம் கொடுத்து அவரை தியானிக்கவேண்டிய வேளையாகும். மத்தியானவேளையுமே வேலையின் மத்தியிலும் கர்த்தரை நினைவுகூர்ந்து அவரைப் போற்றுகிற வேளையாயிருக்கிறது. மாலைவேளையும் அமைதியான ஒரு இடம் தேடிச் சென்று கர்த்தருடைய அன்பை எண்ணிப்பார்ப்பதற்கு அருமையான வேளையாகும். இரவும்கூட அவரைத் தியானிக்க உசிதமானதே!
நினைவிற்கு:- “என் படுக்கையின்மேல் நான் உம்மை நினைக்கும்போது, இராச்சாமங்களில் உம்மைத் தியானிக்கிறேன்” (சங். 63:6).